லம்பேடுசாவில் கப்பல் விபத்துக்குள்ளானதில் 20 பேரைக் காணவில்லை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
லம்பேடுசாவில் கப்பல் விபத்துக்குள்ளானதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 20 பேர் காணாமல் போயுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான யுனிசெஃப் மாநில இயக்குநரும், ஐரோப்பாவில் இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளருமான Regina De Dominicis அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் துயரம் கடந்த 2024-ஆம் ஆண்டில் மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட விபத்துகளில் மரணித்த 2,200 பேருக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்த சோகத்துடன் இணைந்துள்ளது என்றும் தனது வருத்தத்தையும் அதில் பதிவு செய்துள்ளார் De Dominicis.
மேலும் வன்முறை மற்றும் வறுமையில் இருந்து தப்பித்து வந்து குடியேறியவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் குழந்தைகள் என்றும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் Dominicis.
பாதுகாப்பான இடம்பெயர்வு பாதைகளை செயல்படுத்துதல், மீட்புப் பணிக்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் நலவாழ்வு மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியப் பணிகளில் முதலீடு செய்வதன் வழியாக, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் அரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது யுனிசெஃப்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்