சூடானில் நிகழ்ந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உயிரிழப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சூடானின் வடக்கு தார்பூரில் உள்ள எல் ஃபேஷரில் உள்ள சவுதி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம் .
இந்தத் தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் ஏற்கனவே முந்தைய காயங்களுக்கு அவசர சிகிச்சையைப் பெற்று வந்தனர் என்று இக்குழந்தைகள் எதிர்கொண்டுவரும் தொடர் துன்பங்கள் குறித்தும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.
இந்தத் தாக்குதலை குழந்தைகளின் உரிமை மீறல் என்று கண்டித்துள்ளதுடன், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் அந்த அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
சூடானில் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான மருத்துவமனைகள் செயல்படாமல் உள்ளன என்றும், இது மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்குகிறது என்றும், குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.
மேலும் அனைத்துலகச் சட்டத்தின் கீழ், மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் மருத்துவ பராமரிப்புக்கான அணுகலை உறுதி செய்ய வேண்டும் எனவும், வேண்டுகோள் விடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்