வாரம் ஓர் அலசல் - ஜன.24. அனைத்துலக கல்வி தினம்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அறிவு என்பது கொண்டுவந்ததல்ல, வளர்த்துக்கொண்டது. அனுவத்தால் விரிவுபடுத்திக்கொண்டது. இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் தொடரும் போதுதான் வளர்ச்சி வருகிறது, வாழ்வு உயர்கிறது. இந்த ஒரு பின்னணியில்தான் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி அனைத்துலக கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. கல்வியின் முக்கியத்துவத்தினை உணரவைக்கும் வகையிலும், அதனை எடுத்துரைக்கும் வகையிலும் நாடுகளின் ஒருங்கிணந்த முடிவால் நடைமுறைக்கு வந்துள்ளது இந்நாள். 2018ஆம் ஆண்டு டிசம்பர் 3, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
கல்வி என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், உலக கல்வி தினம் என்றும், தாய்மொழி தினம், அறிவியல் தினம், தேசிய தொழில்நுட்ப தினம், மருத்துவர் தின, கல்வி முன்னேற்ற தினம், தேசிய நூலக தினம், ஆசிரியர் தினம், அனைத்துலக எழுத்தறிவு நாள், பொறியாளர் தினம், தேசிய கல்வி தினம் என பல நாட்களை பாரதம் சிறப்பிக்கிறது.
வாளினும் கூர்மையானது பேனாவின் முனை என்பார்கள். ஒரு மனிதனைத் தனது வாழ்வில் மேலோங்க வைக்கும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. வறிய நிலையில் இருப்பினும் பிறரிடம் யாசிப்பதை உலகம் விரும்பாது. அதனால்தான் ‘ஏற்பது இகழ்ச்சி’ என்றார் ஒளவை. ஆயினும் விதிவிலக்காக பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் கற்பதன் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு “கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார். காரணம் கல்வி ஒன்றே ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம். வள்ளுவரும்,
கேடுஇல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றையவை -என்ற குறளை (திருக்குறள்- 400 ) நமக்கு வழங்கினார்.
அம்பேத்கர் அவர்களின் வரிகளில் பார்க்கவேண்டுமானால்,
”உங்களிடம் இரண்டு ரூபாய் இருந்தால், ஒரு ரூபாயை உணவுக்கும், ஒரு ரூபாயை புத்தகத்திற்கும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உணவு உங்களுக்கு வாழ உதவும், ஆனால் எப்படி வாழ வேண்டும் என்பதை புத்தகம் கற்றுக்கொடுக்கும், என்றார் அவர்.
“கல்வி என்பது ஒரு மனித உரிமை, பொது நன்மை மற்றும் பொதுப் பொறுப்பு”, “உண்மையான கல்வி நம்மை பயமுறுத்துவதற்குப் பதிலாக பகுத்தறிவுள்ளவர்களாக மாற்றும்”, "பெண்கள் அடைந்த முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்" என்றும் கூறியவர் அவர்தான்.
கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்திற்கான ஐ.நா. நிறுவனத்தின் கூற்றுப்படி, இன்றும் உலகில் 25 கோடியே 80 இலட்சம் குழந்தைகளும் இளையோரும் கல்வி நிலையங்களுக்கு செல்லாமல் உள்ளனர். தொழில்நுட்பம் நிறைந்த இந்த நவீன உலகில் 61 கோடியே 70 இலட்சம் குழந்தைகளும் பதின்ம வயதினரும் வாசிக்கத் தெரியாதவர்களாகவும் அடிப்படைக் கணித அறிவு அற்றவர்களாகவும் உள்ளனர்.
குழந்தைகள், இளம்பருவத்தினர் மற்றும் பெண்கள் இன்றும் உலகின் சில பகுதிகளில் ஒரே மாதிரியான கல்வி வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 40%க்கும் குறைவான பெண்களே கீழ்நிலைப் பள்ளியை முடித்துள்ளனர், மேலும், அகதிகளாக இருக்கும் நாற்பது இலட்சம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளிக்குச் செல்லாத நிலையில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. தரவு ஒன்றின்படி, ஆப்கானில் பள்ளி செல்லும் வயதில் உள்ள 80 சதவீத பெண் குழந்தைகளுக்கு(சுமார் 25 இலட்சம் சிறுமிகளுக்கு) கல்வி மறுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி பெறும் வயதுள்ள பெண்கள் 12 இலட்சம் பேருக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி அமலுக்கு வந்ததில் இருந்து பெண் கல்விக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அசோலே அவர்கள், ''உலகில் உள்ள எந்த நாடும் பெண்கள் கல்வி கற்பதை தடுக்கக்கூடாது. கல்வி என்பது சர்வதேச மனித உரிமை. அது கட்டாயம் மதிக்கப்பட வேண்டும். ஆப்கான் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ள கல்வி உடனடியாகக் கிடைக்க அனைத்துலக சமூகம் பொறுப்பேற்க வேண்டும், பெண்களுக்கு எதிரான போர் நிறுத்தப்பட வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.
இன்று இந்தியாவில் கல்வியின் தரத்தை நாம் குறைச் சொல்லவில்லை. ஆனால், கல்வியைப் பொறுத்தவரையில் அரசு என்னச் செய்து கொண்டிருக்கிறது?. ஏன் தமிழ் நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். கல்வியைத் தனியாரும் மதுவை அரசும் விற்கத் தொடங்கி விட்ட பிறகு என்ன நடக்கிறது. கல்வி என்பது வியாபாரப் பொருளாக மாறிவிட்டது. கல்வியை வியாபாரப் பொருளாகப் பார்ப்பது மாணவர்கள் மத்தியில் என்ன விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பதை நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? படிப்பு என்பதே பணம் சம்பாதிக்கத் தான் என்றாகி விட்ட ஒரு நிலை இன்று.
படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல் என்றார் பேரறிஞர் பிளேட்டோ.
இளமையில் கல் என்று சொல்கிறது ஆத்திச்சூடி. “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”
என ஒளவையாரும், “எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் எழுத்து மற்றும் எண்களின் முக்கியத்துவத்தை தங்கள் பாடல்களில் குறித்துக் காட்டியுள்ளனர். எழுத்தையும் மொழியையும் தமிழன் தெய்வமாய் கொண்டாடினான்! காரணம் எழுதும் எழுத்து தான் பெற்ற அறிவை அடுத்தடுத்து தலைமுறைகளுக்கு அளித்து அதன் மூலம் உயர்ந்ததொரு வாழ்வை தன் சந்ததிகளை வாழ வைக்கும். வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது, வேந்தரால் கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவின்றி குறையாது என்ற சிறப்புக்கள் வாய்ந்த கல்வியின் அருமையை நாம் ஏன் இன்னும் உணராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒடுக்குமுறை போன்றவற்றை உடைத்தெறியும் சக்தி கல்விக்கு மட்டும்தான் என்று நம்பியவரும் அதனை தன் வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டியவருமான அம்பேத்கர் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் இன்றளவும் பேசப்படும் ஒன்று!
பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வகைப்படுத்தும் சமுதாயத்தில், ஒடுக்குமுறை, தீண்டாமை என்று தன்னை புறம் தள்ளிய சமுதாயத்திற்கே அரசியல் அமைப்பு சட்டத்தினை, கல்வியின் துணைக்கொண்டு வடிவமைத்து கொடுத்தவர். நாடுகள் பல சென்று பட்டம் பல படித்த சட்டமாமேதை, அரசியல் புரட்சியாளர், அதுமட்டுமல்ல கல்வியின் புலத்துக்கு இவர் ஆற்றிய பங்கு ஏராளம். அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார். இன்றளவும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்காக அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு அவர்களின் வாழ்க்கையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது.
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு -என்றார் (திருக்குறள்- 396) வள்ளுவப்பெருந்தகை..
'கற்கை நன்றே கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!' என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது தமிழ். பிச்சை எடுத்தாவது படித்து விடு, படிப்பை மட்டும் நிறுத்தி விடாதே என்பது இதன் அர்த்தம். அத்தகைய கல்வியை நாம் ஏன் கொண்டிருக்க வேண்டும் என எப்போதாவது ஆழ்ந்து சிந்தித்துள்ளோமா? கல்வியின் பயன்தான் என்ன?
பாகுபாடு, அதனால் எழும் வெறுப்பு, இனவெறி, தீண்டாமை, வன்முறை போன்றவற்றை எல்லாம் ஒழிக்கவல்ல மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி. ஒருவர் கற்ற கல்வி அவருக்கு மட்டுமல்ல அவரின் சந்ததியின் எழுச்சிக்கும், அக்குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். சமுதாய முன்னேற்றம் அந்நாட்டின் பொருளாதார, அரசியல் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும். புது புது கண்டுப்பிடிப்புகள் நிகழ்த்தபடும், ஒடுக்குமுறையாலும் சாதியின் பெயராலும் கட்டப்பட்ட கட்டுகதைகள் உடைக்கப்படும், அடிமைத்தனம் ஒழிக்கப்படும், செயல்களில் பகுத்தறிவு பிறக்கும், தனி மனித ஒழுக்கம் பெருகும், மனித நேயம் உருவெடுக்கும். ஆகவே, கல்வியை கற்பது மட்டுமல்ல, அனைவரும் கல்விபெற நம்மால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்