பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் யூதக்குருக்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கைப்பற்றி அங்கு மீண்டும் வளச்சித் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது, பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை அப்பகுதியிலிருந்து அகற்றவே உதவும் என தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் யூத மத குருக்கள் மற்றும் நடவடிக்கையாளர்கள்.
இன அடிப்படையில் மக்களை காசா பகுதியிலிருந்து வெளியேற்றுவதை தாங்கள் முற்றிலுமாக எதிர்ப்பதாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள இவர்கள், Gaza Strip பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்து 20 இலட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கூற்றுக்கு தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை அகற்றும் அரசுத்தலைவர் டிரம்பின் முயற்சிகளை தாங்கள் எதிர்ப்பதாக பிப்ரவரி 13, வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் 350 யூதமதத் தலைவர்கள், ஓர் இனத்தையே ஒரு பகுதியிலிருந்து முற்றிலுமாக வெளியேற்ற முயல்வது ஒழுக்க ரீதிகளுக்கு எதிரானது எனவும், யூதர்கள் இதற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
அதிபர் டிரம்பின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பதை உலகமே அறியும் எனக்கூறும் யூத மதத்தலைவர்கள், பாலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து அகற்றி அவர்களின் இடங்களைக் கைப்பற்றி இலாபம் பார்க்க முயல்வது நன்னெறிக் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் கூறியுள்ளனர்.
பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த இடங்களில் பாதுகாப்புடனும், மாண்புடனும், சுயமாக முடிவெடுக்கும் உறுதியுடனும் வாழ்வதற்கு உதவும் நிறுவனங்களுக்கு நிதியுதவி ஆற்றும் நோக்கத்துடன் 1 கோடி டாலர்களை திரட்ட உள்ளதாகவும் அமெரிக்கா வாழ் யூத குருக்களும் ஏனைய தலைவர்களும் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்