ஹெய்ட்டி நாட்டின் குழந்தைகளுக்கு கற்பனை செய்ய முடியாத பயங்கரங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்
ஹெய்ட்டியில் குழந்தைகள் கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பயங்கரங்களைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர் என்றும், ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் என்றும் பெரும்கவலையை வெளிப்படுத்தியுள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
பிப்ரவரி 19, புதன்கிழமை இன்று, அந்நாட்டிக்கான யுனிசெஃப் பிரதிநிதி கீதா நாராயண் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இத்தகவலை வழங்கியுள்ளார்.
பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று, வகுப்பறையில் அமர்ந்திருந்த ஒரு மாணவர் துப்பாக்கியிலிருந்து குறிதவறி பாய்ந்த தோட்டாக்களால் கொல்லப்பட்டார் என்று உரைக்கும் இந்நிறுவனத்தின் அறிக்கை, கடந்த வார இறுதியில், இரண்டு மாத குழந்தை ஒன்று தனது தாய்க்கு முன்பாகவே உயிருடன் எரிக்கப்பட்டது, உலகையே அதிர வைக்கும் கொடூரத்திலும் கொடூரமான நிகழ்வு என்றும், இது வன்முறையையும் தாண்டி மனித இனத்தின் மீதான கொடிய தாக்குதல் என்றும் வேதனைத் தெரிவித்துள்ளது.
ஹெய்ட்டியின் குழந்தைகளையும், அவர்களின் உரிமைகளையும் காக்கவும், அவர்தம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேசிய அதிகாரிகள் மற்றும் அனைத்துலகச் சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.
மேலும் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அச்சமின்றி வாழத் தகுதியுடையது என்றும், குழந்தைகளுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இம்மாதிரியான கொடூரங்களைக் கண்டும் உலகம் அமைதியாக இருக்கக் கூடாது என்றும் குறிப்பிடுகிறது அவ்வறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்