தேடுதல்

Cookie Policy
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE
பங்களாதேஷில் உலக தாய் மொழி தினக் கொண்டாட்டம் பங்களாதேஷில் உலக தாய் மொழி தினக் கொண்டாட்டம்  (ANSA)

வாரம் ஓர் அலசல் : பிப்.21. - உலகத் தாய்மொழிகள் தினம்

மலையிடைப் பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி இரண்டு மட்டுமே! ஒன்று செங்கதிர், மற்றது செந்தமிழ்! என்கிறது தண்டியலங்காரம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நம் உணர்வுகளை மனதில் உதித்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்த நமக்கு உதவும் கருவிதான் தாய்மொழி. ஆனால் இன்றோ, உலகளவில் சுமார் 40% மக்கள், தாங்கள் பேசும் அல்லது புரிந்துகொள்ளும் மொழியில் கல்வியைப் பெறவில்லை என ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ தெரிவிக்கிறது. யுனெஸ்கோவின் அறிக்கையில், தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. தாய் மொழியே பயிற்று மொழி, தாய் மொழியே ஆட்சி மொழி, தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என வாழ்வில் அனைத்து நிலையிலும் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டிய கடமை உள்ளது.

ஒரு மனிதனின் அறிவின் வளர்ச்சி என்பது அவனுடைய தாய்மொழியால் தான் சாத்தியப்படும். ஒரு நாட்டை அழிக்க நினைத்தால் அவர்களுடைய பண்பாடு மற்றும் மொழியில் தாக்குதல் நிகழ்த்தினால் போதும் என்பார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், உலகில் 2 வாரங்களுக்கு ஒரு மொழி வழக்கிழந்து போவதாக கூறப்படுகிறது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளர்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி தாய்மொழி தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. ‘‘தேசிய இனங்களுக்கான உரிமைகளை, அவர்களது மொழி, பண்பாடு ஆகியவற்றை, ஒற்றை ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரத் துடிக்கும் எந்தவோர் அரசும் இறுதியில் சிதறுண்டு போனதையே உலக வரலாறு நிரூபித்துள்ளது. எனவே, பன்முகத் தன்மையைப் பாதுகாத்திடுங்கள்!” என்பதைத்தான் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படும் ஒவ்வொரு தாய்மொழி நாளும் உலகத்துக்குச் சொல்கிறது. ஆனால் நாம் என்னச் செய்து கொண்டிருக்கிறோம்? ஒரே மொழி, ஒரே மதம் என்பதை ஒன்றிணைப்பின் சின்னமாகக் கொண்டுவரத் துடிக்கிறோம்.

இந்தியாவின் அடையாளத்தை பன்முகத்தன்மையால்தான் வளர்த்தெடுக்க முடியுமே தவிர, ஒற்றை அடையாளத்தால் வளர்த்தெடுக்க முடியாது என்பதை அனைவரும்  புரிந்து கொள்ளும் நாள் வரவேண்டும். இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவுசார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன என்பதை நாம் என்று புரிந்துகொள்ளப் போகின்றோம்?. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 19,500 வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் பேசுவது 121 மொழிகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 780 மொழிகள் பேசப்படுவதாக இந்தியாவின் மொழிகள் குறித்த 2012ன் அறிக்கை கூறுகிறது. 1961ஆம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடும் போது 220 மொழிகள் 50 ஆண்டுகளில் அழிவைச் சந்தித்திருக்கின்றன. அதே நேரத்தில் இந்தி பேசுகிற மக்கள் தொகை 14 கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்திருக்கிறது. 50 ஆண்டுகளில் இத்தனை மொழிகள் அழிந்துபோவதற்கு நாம் அனுமதித்ததேன்? ஒரு மொழி அழிந்தால் அதனோடு இணைந்து அதன் இலக்கியமும் கலாச்சரமும் அழிந்துபோவது நமக்குத் தெரியாததா?

உலகில் அதிக மொழிகள் பேசும் நாடு என்று பார்த்தோமானால் பாப்புவா நியூ கினி முதலில் வருகிறது. அங்கு 841 மொழிகள் பேசப்படுவதாக உரைக்கின்றனர். அந்த நாடு இத்தனை மொழிகளை கட்டிக்காக்கும்போது, நம்மால் மட்டும் அது முடியாமல் போனதேன்? இந்தியாவின் 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 26 விழுக்காட்டு இந்தியர்கள் இரு மொழிகள் பேசக்கூடியவர்களாகவும், 7 விழுக்காட்டு மக்கள் மும்மொழி பேசுபவர்களாகவும் இருந்தனர். இந்தியாவில் இந்தி மொழி பேசும் மக்களே எண்ணிக்கையில் முதலில் வருகின்றனர். அடுத்து பெங்காளி, மராத்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, உருது, கன்னடம், ஒடியா, மலையாளம் என்ற வரிசைத் தொடர்கிறது.  

தாய்மொழி தின தோற்றம்

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில் உருது மொழி திணிக்கப்படுவதை மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி 'வங்க மொழி இயக்கம்' உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், மற்றும் அதற்கான இயக்கத்தை நினைவுகூர்ந்து, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை பன்னாட்டு தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போராட்டம்

இதை நாம் கேட்கின்றபோது, வங்கதேசத்தைப் போல் இந்தியாவின் தமிழ்நாட்டில் 1938, 1965ம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நினைவிற்கு வருவது இயல்பே. சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவிவகித்த ராஜாஜி, பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையை 1938 ஏப்ரல் 21 அன்று பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து திராவிடத் தலைவரான தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, இந்த ஆணைக்கு எதிராகவும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். இத்தகைய போராட்டத்தின் பயனாக சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கக் கோரி, 1999ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழண்ணல் தலைமையில் 102 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதையும் நாம் இங்கு குறிப்பிடவேண்டும்.

இலங்கையின் மொழி பிரச்சனை

கால் நூற்றாண்டுகாலமாக தெற்காசியாவையே பதற்றப்பட வைத்த ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதி மூலமாக இருந்ததும் மொழி பிரச்சினைதான். 1965ஆம் ஆண்டு சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவிக்க இலங்கை அரசு எடுத்த முயற்சிகளை எதிர்த்து தந்தை செல்வா தொடங்கிய போராட்டமே பின்னர் ஆயுத புரட்சியாக பரிணாமம் பெற்று வங்காள விரிகுடாவை செங்கடலாக மாற்றியது. "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனக்கூறி போராடி தம் உயிரை மாய்த்துக்கொண்டவர் பலர்.

தமிழ் மொழியின் சிறப்பு

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மரபுடைய தமிழ் மொழி, அறுபடாத ஒரு தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு மொழி. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. "தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது," என்பார் ஈழத்து தமிழறிஞர் கா. சிவத்தம்பி. ‘தமிழ்மொழியில் வரும் சுட்டு வினாப் பெயர்களின் அழகான, தத்துவார்த்தமான ஒழுங்கு முறை உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை’, என்பார் இராபர்ட் கால்டுவெல். அவரேதான் தமிழின் சிறப்புப் பற்றிக் கூறும்போது, ‘ஒரு விழுக்காட்டுக்கு குறைவாகவே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன’ என எடுத்துரைத்து, “ஒலி அமைப்பிலும், பிறமொழிச் சொற்களைத் தன்னில் கலக்க விடாத தூய்மை பேணலிலும் நிலையாக இருப்பதால் தமிழ் கன்னித் தமிழாகும்” என பெருமைப்பட உரைப்பார். ‘மலையிடைப் பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி இரண்டு மட்டுமே! ஒன்று செங்கதிர், மற்றது செந்தமிழ்!’ என்கிறது தண்டியலங்காரம். தமிழின் 16 வகைச் சிறப்புப் பற்றிக் கூறும் பாவாணார், அவைகளை ‘தொன்மை, முன்மை, மேன்மை, எண்மை, ஒண்மை, வண்மை, வாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, தனிமை, இனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை’ என்று பட்டியலிடுவார். சங்கங்கள் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் வளர்க்கப்பட்ட ஒரே மொழி என்றால் அது தமிழ் மொழி ஆகும்.

முதல் இலக்கணம்

உலக   மொழிகளில் எழுந்த    முதல்    மொழி இலக்கண நூலான   தொல்காப்̈பிய̄ம் 3000   ஆண்டு பழமையுடைய̄து. இவற்றின் இலக்கணக் கோட்பாடுகளைக் கண்டு இன்றைய மொழியுலகம் வியப்̈பால் திகைக்கிறது. தமிழில்    உள்ள    ஒலிகளின் மொத்த    எண்ணிக்கை ஏறக்குறைய 500   என்று    மொழியியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலகில்    வேறு   எந்த   மொழியிலும் இந்த   அளவுக்கு ஒலி   எண்ணிக்கைகள் இல்லை என்கின்றனர். சாதாரணமாக ஒரு  மொழிக்கு 33  ஒலிகள்    இரு̧ந்தாலே போதும்.     இது தவிர, தமிழில் ஒவ்வொரு பொருளுக்கும் எத்தனையோ சொற்கள் உள்ளன. அதுபோல், ஒவ்வொரு சொல்லும் எத்தனையோ பொருட்களைக் குறித்துக் காட்டுவதாகவும் உள்ளது. ‘அரி’ என்னும் சொல்லுக்கு மட்டும் 59   அர்த்தங்கள் இரு̧க்கின்றன. மலர்    என்ற    சொல்லை எடுத்துக்கொண்டோமானால்,  தமிழில் மலரின் ஒவ்வொரு வளர்ச்சியையும்     நிலையையும் காட்டுவதாக பல சொற்கள் இரு̧க்கின்றன.

இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான். 2004ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில ஆண்டுகளில்தான் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளும் ஒவ்வொன்றாக இந்தியாவின் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டன.

“தமிழ் தொன்மையின் மிகச் சிறப்பான விடயமாக நான் பார்ப்பது அது கொண்டிருக்கும் வேர்ச்சொல்கள். இன்று தெலுங்கு, கன்னடம் போன்ற எந்தவொரு இந்திய மொழியும் புதிதாக ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால் அது சமஸ்கிருதத்தை நோக்கித்தான் செல்லவேண்டும். ஆனால் தமிழில் மட்டும் அந்த நிலை இல்லை. தமிழுக்கு தேவையான வேர்ச் சொற்கள் அதனிடமே கொட்டிக்கிடக்கின்றன,” என்று குறிப்பிடுகிறார் உலக புகழ்பெற்ற மொழியியல் அறிஞரான ஜார்ஜ்.எல்.ஹார்ட்.

ஆய்வுகள் சொல்வதென்ன?

ஹராப்பா, மொகஞ்சாதரோ ஆகிய நாகரிகத்தின் தொன்மையை அறியும் அகழ்வாய்வில் கிடைத்த புதைபொருட்களில் இடம்பெற்றுள்ள சில உருவ எழுத்துக்களில் தமிழும் உள்ளது.

எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டில் கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. 3ம் நூற்றாண்டின் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்டன. தட்டையான கருப்பு சிவப்பு மட்பாண்ட துண்டுகள் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் இலங்கையின் திசமகாராமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 300 என அகழ்வினை மேற்கொண்ட ஜெர்மன் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கி.மு. 2ம் நூற்றாண்டு பானையில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி. 3ம் நூற்றாண்டு கால நான்கு தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் கேரளாவிலுள்ள குகையிலும் மலையிலும் காணப்பட்டன. அதில் ஒன்று ‘சேரன்’ என்ற சொல்லுடன் காணப்பட்டது.

தமிழ்நாடு, ஆதிச்சநல்லூரில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு. 500ஐச் சேர்ந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கொடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டன. அதே காலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ. துரத்திலுள்ள பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் மதுரை திருப்பரங்குன்றத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் “மு-ன-க-ர” எனவும் “மு-ஹ-க-டி” எனவும் எழுதப்பட்டிருந்தது. இது முதலாம் நூற்றாண்டுக்கு உரியது. ஐந்தாம் ‘வீரர்’ கல் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் போர்ப்பனக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு மனிதனின் அறிவின் வளர்ச்சி என்பது அவனுடைய தாய்மொழியால் தான் சாத்தியப்படும் என்பதை உணர்வோம். தாய்க்கு இணையான தாய்மொழியைக் காக்கும் கடமையை அறிவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 பிப்ரவரி 2025, 09:44
Prev
April 2025
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Next
May 2025
SuMoTuWeThFrSa
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031