காசாவில் குண்டுகளால் சேதமடைந்துள்ள கட்டிடங்கள் காசாவில் குண்டுகளால் சேதமடைந்துள்ள கட்டிடங்கள்   (AFP or licensors)

காசா மீதான இஸ்ரேலின் அண்மையத் தாக்குதல் குறித்து CAAT அறிக்கை!

இஸ்ரேல் மீது முழு ஆயுதத் தடை விதிக்கவும், அந்நாட்டிற்கான இங்கிலாந்து இராணுவ ஆதரவை முடிவுக்குக் கொண்டுவரவும் அழைப்பு விடுத்துள்ளது CAAT எனப்படும் ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரச்சார அமைப்பு.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து CAAT எனப்படும் ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரச்சார அமைப்பு அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளது ICN எனப்படும் செய்தி நிறுவனம்.

மார்ச் 19, இப்புதன்கிழமையன்று, இவ்வறிக்கைக் குறித்த தகவலை வழங்கியுள்ள இச்செய்தி நிறுவனம், காசாவின் மீதான இஸ்ரேயலின் தாக்குதலை, பாலஸ்தீனியர்களுக்கு அதிகபட்ச துன்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இனப்படுகொலைத் தாக்குதல் என்று CAAT அமைப்பு வர்ணித்துள்ளதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது.

வான்வழித் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டது மற்றும் 600 பேர் காயமடைந்தது உட்பட, இறப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட F-35 ஜெட் விமானங்கள் உட்பட ஆயுத ஏற்றுமதி மூலம், இஸ்ரேலுக்கான இங்கிலாந்து அரசின் அரசியல் மற்றும் இராணுவ ஆதரவைக் குறித்தும் CAAT அமைப்பு தனது அறிக்கையில் விமர்சித்துள்ளதாகவும் உரைக்கிறது இச்செய்திக் குறிப்பு.

அனைத்துலகச் சட்ட மீறல்களின் ஆபத்துகளை ஒப்புக்கொண்ட போதிலும், இங்கிலாந்து அரசு இஸ்ரேலுக்கு இராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்குத் தொடர்ந்து ஒப்புதல் அளித்து வரும் அதேவேளையில், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி மனிதாபிமான உதவிகளைத் தடுப்பதாகவும் இந்தக் குழு குற்றம் சாட்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது இச்செய்தித் தொகுப்பு.

இஸ்ரேல் மீது முழு ஆயுதத் தடை விதிக்கவும், அந்நாட்டிற்கான இங்கிலாந்து அரசின் இராணுவ ஆதரவை முடிவுக்குக் கொண்டுவரவும் அழைப்பு விடுத்துள்ள CAAT  அமைப்பு, இனப்படுகொலை, ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறி என அது விவரிக்கும் விடயங்களில் அரசின் உடந்தையைக் கண்டித்துள்ளது எனவும் உரைக்கிறது இச்செய்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மார்ச் 2025, 14:29