இஸ்ரயேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காசா மக்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இஸ்ரயேல் தாக்குதல் தொடங்கப்பட்டதிலிருந்து காசாவில் 50,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும், காசாவில் உள்ள மக்கள் தொகையில் 46 பேருக்கு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்றும் ஹமாஸ் நலவாழ்வு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மார்ச் 24, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி, காசாவில் தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரயேல் இராணுவத்தாரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 50,021 ஆக உயர்ந்துள்ளது என்றும், இது போர்ச்சூழலுக்கு முந்தைய மக்கள் தொகையான 23 இலட்சத்தில் 2.1 விழுக்காடு என்றும் தெரிவித்துள்ளது.
காசாவில் வாழும் மக்களில் 46 பேருக்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நலவாழ்வு அமைச்சகமானது, மொத்தம் 1,13,274 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளது.
காசா நலவாழ்வு அமைச்சகத்தின் (MoH) புள்ளிவிவரங்கள், போர் தொடங்கிய நாள் முதல் ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் நம்பகமானதாகக் கருதப்படுகின்ற நிலையில், காசாவின் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை இஸ்ரயேல் தொடர்ந்து மறுத்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது ஹமாஸ் நலவாழ்வு அமைச்சகம்.
பிபிசி உள்பட பன்னாட்டு செய்தியாளர்கள் காசாவிற்குள் தன்னிச்சையாக நுழைவதை இஸ்ரயேல் தடுக்கின்றது என்றும், இதனால் இரு தரப்பிலும் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை செய்தியாளர்களால் சரிபார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பாதிப்படைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பொதுமக்களா? இராணுவத்தாரா? என்று கண்டறிய முடியவில்லை என்றும், நவம்பர் மாதத்தில், ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகம் ஆறு மாத காலமாக செய்த பகுப்பாய்வு, பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது என்றும் ஹமாஸ் நலவாழ்வு அறிவித்துள்ளது
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7, அன்று இஸ்ரயேல் மீதான ஹமாஸின் தாக்குதலால் போர் தூண்டப்பட்டு ஏறக்குறைய 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பிணையக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர் என்றும், அத்தாக்குதலுக்கு இஸ்ரயேல் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலுடன் பதிலளித்ததில் பலர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர், அதுமட்டுமன்று, கட்டிடங்களும் பெரும் அழிவை சந்தித்தன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது ஹமாஸ் நலவாழ்வு அமைச்சகம்.
கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 39 பேர் இறந்ததாக (MoH) ஞாயிற்றுக்கிழமை அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், கடந்த மார்ச் 18, செவ்வாய்க்கிழமை இஸ்ரயேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்