காங்கோவில் 3,64,000 குழந்தைகளுக்குத் தூய்மையான நீர் மற்றும் நலப்பணிகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்கு நகரமான கோமாவில், யுனிசெஃப் மற்றும் அந்நாட்டிலுள்ள அதன் துணைவர்கள் தினமும் 7,00,000 மக்களுக்கு உயிர்காக்கும் தூய்மையான தண்ணீரை வழங்கி வருகின்றனர் என்றும், இதில் ஏறத்தாழ 3,64,000 குழந்தைகள் அடங்குவர் எனவும் கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
மார்ச் 05, இப்புதன்கிழமையன்று, அறிக்கையொன்றில் இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், கடந்த ஜனவரி மாத இறுதியில் அந்நாட்டில் நிகழ்ந்துவரும் கடுமையான மோதலால் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த உதவியை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மோதல் கோமாவின் 20 இலட்ச மக்களில் பலரை, குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு மக்களை அண்மையில் இடம்பெயரச் செய்துள்ளது என்று உரைக்கும் அதன் அறிக்கை, அம்மக்களுக்குத் தூய்மையான நீர், நலப்பணிகள் மற்றும் மின்சாரம் கிடைக்கவில்லை என்றும், இப்பகுதியில் காலரா மற்றும் பெரியம்மை நோய்களும் தொடர்ந்து பரவி வருவதால், இது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது என்றும் கவலை தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
அங்கு மோதல் நிலவிவரும் இச்சூழலில், விரைவாகச் செயல்பட்டு, காயமடைந்த ஏறத்தாழ 3,000 நோயாளர்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த விருங்கா பொது மருத்துவமனை உட்பட முக்கிய நலப்பணிகளுக்குத் தூய்மையானத் தண்ணீரை விநியோகித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
அதேவேளையில், யுனிசெஃப் நிறுவனத்தினரும் அதன் துணைவர்களும் அதிக நெரிசல் நிறைந்த நலப்பணி மையங்களில் 50,000 பேருக்கு சிகிச்சையளிக்க மருத்துவ கருவிகளையும் விநியோகித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MONUSCOவின் ஆதரவுடன், ஐந்து நீரேற்று நிலையங்களை மீண்டும் திறந்துள்ளதன் வழியாக 7,00,000 மக்களுக்குத் தூய்மையான நீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும்கூட மக்களில் பலர் இன்னும் கிவு ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீரை நம்பியுள்ளனர் என்றும் கூறியுள்ளது அந்நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்