குழந்தை இறப்பு மற்றும் ஆபத்தான பிரசவங்களைக் குறைப்பதில் முன்னேற்றம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2023-ஆம் ஆண்டில், 5 வயதுக்கு முந்தைய உலகளாவிய குழந்தை இறப்புகள் 48 இலட்சமாகக் குறைந்திருந்த அதேவேளையில், இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் 19 இலட்சமாகக் குறைந்துள்ளதாக ஐ.நா.வின் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மார்ச் 25, இச்செவ்வாயன்று, வெளியிடப்பட்டுள்ள அதன் அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஏறக்குறைய 80 விழுக்காடு குழந்தைகள் இறந்து பிறக்கின்றன என்றும், அவை துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் அதிகம் நிகழ்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாயிரமாம் (2000) ஆண்டு முதல், நலத்துறைகளில் ஏற்பட்டுள்ள உலகளாவிய முதலீடுகள் காரணமாக, குழந்தை இறப்புகள் பாதியாகக் குறைந்துள்ளன என்றும், மேலும் குழந்தை பிறப்பின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்றும் இவ்வறிக்கைகள் உரைக்கின்றன.
மேலும் குழந்தைகள் உயிர்வாழும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துக்களை யுனிசெஃப் மற்றும் உலக நலவாழ்வு நிறுவனங்களின் தலைவர்கள் எடுத்துக்காட்டியுள்ளதாகக் கூறும் இந்த அறிக்கைகள், இது நலவாழ்வுப் பற்றாக்குறை மற்றும் முக்கிய சேவைகளில் இடையூறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றன.
அத்துடன், இந்த நிதிக் குறைப்புகள், குறிப்பாக, துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளைப் பாதிக்கின்றன என்றும், அங்குக் குழந்தைகள் பெரிய அளவில் ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர் என்றும் இவ்வறிக்கைகளில் விளக்கியுள்ளது ஐ.நா நிறுவனம்.
மகப்பேறுக்கு முற்பட்ட காலம், பிரசவத்திற்குப் பிந்தைய காலம் மற்றும் தடுப்பூசி சேவைகள் உள்ளிட்ட தரமான நலவாழ்வுப் பராமரிப்புக்கான மேம்பட்ட அணுகலின் அவசியத்தையும் இந்த அறிக்கைகள் வலியுறுத்துகின்றன.
குழந்தைகள் உயிர்வாழ்வதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன என்றும், குறைந்த அளவு வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் மிக அதிக இறப்பு விகிதங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் இவ்வறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்