சூடானில் 16 மில்லியன் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சூடான் நாட்டில் இவ்வாண்டில் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக UNICEF என்னும் ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
சூடான் நாட்டில் ஐந்து வயதிற்கு உட்பட்ட 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களைப் பெறும் அபாயம் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்குச் செல்லும் வயதுடைய 1 கோடியே 65 இலட்சம் குழந்தைகள் கல்விக் கூடம் செல்லாமலேயே இருப்பதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 1 கோடியே 21 இலட்சம் சிறார்களும் சிறுமிகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் இவ்வறிக்கை, 2024ஆம் ஆண்டில் சூடானின் ஒன்பது மாநிலங்களில் 221 சிறார் மற்றும் சிறுமிகள் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
போதிய சத்துணவுக் குறைவால் இந்த ஆண்டில் 7 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் துயர்களை அனுபவிக்கும் நிலையும் இவ்வறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குட்பட்ட 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், காலரா, மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலைப் பெறும் ஆபத்திலிருப்பதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்