வாரம் ஓர் அலசல் : மார்ச் 15 - உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் சிறப்பிக்கப்படுகிறது. இப்படி ஒரு நாள் எங்கிருந்து துவங்கியது என அறிய ஆவல் இருக்கலாம்.
வரலாறு
அமெரிக்க அரசுத்தலைவராக இருந்த ஜான். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 15ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் சிறப்பிக்கப்படுகிறது. இந்தியாவில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து இந்தியா முழுவதும் தற்போது வரை 55 இலட்சத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் பதிவு செய்யப்பட்டதில் 90% புகார்களில் தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எதற்காக இந்த சட்டம்
இந்த சட்டத்தின் கீழ் நுகர்வோர் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள், புகார்கள் இருந்தால் நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் இழப்பீடு பெற முடியும். நுகர்வோர் நலன்களை மறந்து அதிக விலை, குறைந்த எடை, பொருட்களில் கலப்படம், தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் அதிக பணம் ஈட்டும் நோக்கில் செயல்படுபவர்களிடமிருந்து நுகர்வோரைக் காக்க இந்த விழிப்புணர்வு அவசியமாகிறது. திரையரங்குகளில் ஏஸி கட்டணம் வசூலித்துவிட்டு அந்த வசதியைப் போதுமான அளவு செய்யாமல் இருப்பது, கடைகளில் தரமற்ற அளவு மற்றும் குறைந்த அளவில் பொருட்களை விற்பது, வாங்கிய பொருட்களில் சேதம் இருப்பது, வங்கி போன்ற பொது நிறுவனங்கள் சேவை அளிப்பதில் மெத்தனம் காட்டுவது, நாம் அளிக்கும் புகார்களை அலட்சியப்படுத்தப்படுவது போன்றவற்றை அடிக்கடி எதிர்கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் சரியான முறிவு மருந்துதான் ‘நுகர்வோர் உரிமையும் பாதுகாப்பும்’. அதன் சிறப்புகளைப் போற்றுவதற்காகவே உருவானதுதான் இந்தத் தினம். நுகர்வோர் பாதுகாப்பு என்பது, ஒரு பொருள் அல்லது சேவை குறித்து தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, உத்தரவாதம் பெறும் உரிமை, நிவர்த்தி பெறும் உரிமை, உரிமைகளைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஆகியவைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
உரிமைகள் என்று எதை நாம் குறிப்பிடுகிறோம்?. எங்கெங்கு இவைகளை நாம் செயல்படுத்த முடியும்?. பொருட்கள் என்றால் மொத்தமாக அல்லது சில்லறையாக கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் ஏற்படும் குறைபாடு. சேவைகள் என்றால் போக்குவரத்து, மருத்துவம், வங்கி மற்றும் காப்பீடு சேவைகள் போன்று ஒரு தனிநபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ நுகர்வோர் கட்டணம் செலுத்தி பெறும் சேவைகளைக் குறிப்பது. எம்.ஆர்.பி குறிப்பிடாமல் பொருட்களை விற்பது, எம்.ஆர்.பிக்கு அதிகமாக பொருட்களை விற்பது, குறிப்பிட்ட சேவைகளை சரிவர வழங்காமல் இருப்பது, காப்பீடு நிறுவனங்கள் சரியாக காப்பீடு வழங்காமல் இருப்பது, தனியார் மருத்துவ சேவைகளில் எழும் குறைகள், வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்படும் புகார்கள் எனப் பல தரப்பட்ட புகார்களுக்கு நிவாரணம் பெற முடியும். பல்வேறு சம்பவங்களில் நுகர்வோர் குறைகளுக்காக வாதாடி அதற்கு உரிய இழப்பீடும் பெற்றிருக்கிறார்கள். சமீப காலங்களாக அதிகரித்து வரும் இணைய வழி வர்த்தகங்களால் நுகர்வோர் குறைகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் தீர்வுகளைப் பெற முடியும். அரசாங்கமும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.
வழிமுறைகள் என்ன?
புகார் பதிவு செய்வதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவர் எதிர்தரப்புக்கு தங்களுடைய குறைகளையும் அதற்கு அவர்கள் கோரும் தீர்வுகளையும் விவரித்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நுகர்வோர் ஆணையத்திற்கு செல்வதற்கு முன்பாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு பெறுவதற்கான முயற்சி இது.
`நுகர்வோர் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள் தொடர்பாக மக்களிடையே போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. எவ்வளவு சிறிய தொகையிலிருந்து பெரிய தொகையாக இருந்தாலும் நுகர்வோர் இழப்பீடு பெற முடியும். உரிய ஆதாரங்களுடன் புகார் செய்தால் நிச்சயம் இழப்பீடு பெற முடியும். புகார் செய்பவரே இதில் தனக்காக வாதாடவும் முடியும். ஆனால் மக்கள் இதனை பெரும்பாலும் செய்வதில்லை.
நுகர்வோர் குறைதீர் மன்றங்கள்
காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவை குறைபாடு, பொருட்களின் தயாரிப்பில் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதில், நுகர்வோர் குறைதீர் மன்றங்களுக்கும் குறிப்பிட்ட பங்கு இருந்து வருகிறது. விழிப்புணர்வு அதிகமாகி வருவதால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
எடை குறைப்பு, மோசமான சேவை, ஒப்பந்த வரையறைகளில் ஏமாற்றுதல் அல்லது மீறுதல், அதிகப்படியான சில்லறை விற்பனை விலையைவிட (எம்.ஆர்.பி.) கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பது, மருத்துவ சேவையில் குறைபாடு, பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்டவற்றுக்கு மேற்கண்ட நீதிமன்றங்களில் நிவாரணம் பெறலாம்.
இரசீது வாங்க மறவாதீர்கள்
பொருட்களையோ, சேவையையோ பெறும் நுகர்வோர், யாரிடம் இருந்து என்ன பொருட்களை வாங்குகிறோம் அல்லது சேவையை பெறுகிறோம் என்பதற்கான இரசீதை, ஆதாரத்தை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும். அப்போதுதான், ஏதேனும் குறைபாடெனில், வழக்கு தொடரும்போது அதற்கு ஆதரமாக இரசீதை ஓர் ஆவணமாக சமர்ப்பிக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிடலாம். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லையெனில், நுகர்வோர் குறைதீர் மன்றத்தை நாடலாம். உணவுப் பொருட்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு எனில், முதலில் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு நுகர்வோர் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள், உணவு மாதிரியை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்புவார்கள். அந்த அறிக்கையில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை வைத்தும் நுகர்வோர் வழக்கு தொடரலாம்.
நவீன உலகம் தரும் பாடம்
தரக்குறைவான பொருட்கள் விற்பனை, பொய்யான விளம்பரங்கள், பொய்யான உத்தரவாதம் மூலம் விற்பனை செய்வது, இலவச ஏமாற்று அறிவிப்புகள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, நிவாரணம் பெற வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வுரிமைகள் மக்களுக்கு உணர்த்தவே இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
எல்லா மனிதர்களும் தங்களுக்கு தேவையான ஏதோ ஒன்றை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைய நவீன காலக்கட்டத்தில், டிஜிட்டல் வாழ்க்கை என்ற பெயரில் அலைபேசியில் பதிவு செய்து வாழ்க்கையை நடத்தும் தற்போதைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறார்கள்.
20ஆம் நூற்றாண்டிலிருந்துதான் நுகர்வோரின் முக்கியத்துவம் கவனிக்கப் பட்டு வருகிறது. உலக நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கணிப்பின்படி 21 ஆம் நூற்றாண்டில் நுகர்வோர் விழிப்புணர்வு இன்னும் அதிக தேவையாயிருக்கிறது. வெளியில் செல்லாமலே ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குப் பணத்தை மாற்றிவிட முடிகிறது.
நாம் உபயோகிப்பதற்காக விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளும் அதன் உரிய பலனைத் தருகின்றதா? நாம் கொடுக்கும் விலைக்கு உரியதுதானா? நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா என்பனவற்றை அறியும் உரிமை நமக்கு இருக்கிறது. இந்த விவரம் நம்மில் பலருக்கு இன்னும் தெரியாமல்தான் இருக்கிறது.
தரம் குறைந்த பொருட்களை நமக்குத் தந்து விட்டு, அதன் தயாரிப்பாளரோ கடைக்காரரோ நம்மை ஏமாற்றுவது சட்டப்படி குற்றம். அதற்காக அந்த பொருளை நம்மிடம் விற்பனை செய்தவர் மீது நாம் வழக்கு தொடர முடியும். அது போலவே வங்கிகளிலோ மருத்துவமனையிலோ, பேருந்து, தொடர்வண்டி அல்லது விமானம் என அனைத்திலும், நமக்குக் கிடைக்கப் பெறும் சேவைகளில் குறைபாடுகளோ குளறுபடிகளோ இருந்தால் உரிமையைப் பெற நாம் வழக்கு தொடர முடியும்.
சில பொருட்கள் நம் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்குமானால் அந்தப் பொருட்களின் தயாரிப்பாளர், விற்பனையாளர்கள் மீது நுகர்வோர் உரிமை மீறல் அடிப்படையில் குற்றம் சாட்டலாம். வழக்கு தொடரலாம். தண்டனையும் வாங்கித்தரலாம்.
நாம் கடைகளுக்குச் செல்கிறோம், உணவுப் பொருள்கள் வாங்குகிறோம், உடைகள் வாங்குகிறோம், மரப்பொருட்கள் வாங்குகிறோம், அசைவ உணவுகள் வாங்குகிறோம், வாகனம் வாங்குகிறோம், வீட்டுக்குத் தேவையான வண்ணப் பூச்சுகள் வாங்குகிறோம், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்குகிறோம், சுற்றுலாச் செல்கிறோம், விடுதி அறைகளில் அறை எடுத்துத் தங்குகிறோம், விமானத்தில், தொடர்வண்டியில், பேருந்தில் பயணிக்கிறோம். இப்படி எல்லாவிதமான நுகர்வுகளையும் நாம் மேற்கொள்கிறோம். ஆனால் அதற்குரிய இரசீதை மட்டும் சரியான முறையில் கவனித்து வாங்க மறந்துவிடுகிறோம். இதை எல்லாவற்றையும் மறந்துவிட்டு இணையத்திலேயே வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
உறவுக்குக் கை கொடுப்போம். உரிமைக்குக் குரல் கொடுப்போம். உரிமைகளை விட்டுக் கொடுக்கும்போது, தவறிழைத்தவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பை நாமே மறுக்கிறோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்