வாரம் ஓர் அலசல் – உலக வன தினமும், தண்ணீர் தினமும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
1971ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய விவசாய மாநாட்டில் காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் 21ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்பின், 2012 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுசபையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வுலகின் 31 விழுகாட்டு நிலப்பகுதி, அதாவது ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதிக்கு சிறிது கீழ் காடுகளால் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு காடுகளைக் கொண்டுள்ளது இரஷ்யா என்றுச் சொல்லலாம். அடுத்து பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா, சீனா, ஆஸ்திரேலியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, பொலிவியா, இந்தோனேசியா, என பல நாடுகள் வருகின்றன. ஆனால் இன்றைய நவீன உலகில் நாம் காடுகளை தொடர்ந்து இழந்தே வருகிறோம். 2010க்கும் 2020க்கும் இடைப்பட்டக் காலத்தில் இவ்வுலகம் 47 இலட்சம் ஹெக்டேர் காடுகளை ஒவ்வோர் ஆண்டும் இழந்து வந்துள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மர இனங்களைக் கொண்டுள்ள காடுகள் நேரடியாக 160 கோடி மக்களுக்கு உணவு, தங்குமிடம், எரிசக்தி, மருந்து மற்றும் வருமானத்திற்கு வழிவகுக்கின்றன. பூர்வீக இன மக்கள் காடுகளை நம்பித்தான் வாழ்கின்றனர். விலங்குகளும் பூச்சிகளும் காடுகளில்தான் தங்கள் உறைவிடங்களைக் கொண்டுள்ளன. காற்றின் ஆக்சிஜனுக்கும் ஈரப்பதத்திற்கும் காடுகளின் மரங்கள் தான் காரணம் என நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதும், மண் அரிப்பைத் தடுப்பதும் இதே காடுகள்தான்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவ மழை தவற ஆரம்பித்துவிட்டது. பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாக வனங்கள் செயல்படுகின்றன. மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும் போது மழை நீரில் மூன்று விழுக்காடே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97 விழுக்காடு நீர் உடனடியாக ஓடி விடுகின்றது. ஆனால் காடுகளில் பெய்யும் மழை நீரில் 33 விழுக்காடு உள்ளிழுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.
ஒரு நாட்டின் நிலப்பரப்பின் 33 விழுக்காடு, காடுகளாக இருக்க வேண்டும். இந்தியாவிடம் இருப்பதோ ஏறக்குறைய 20% காடுகள்தான். அடைய வேண்டிய இலக்கு வெகு தொலைவில் உள்ளது. இந்தியாவின் மொத்தக் காடுகளின் பரப்பு 6 இலட்சத்து 30 ஆயிரம் ச.கி.மீ. இந்தியாவில் ஆண்டுக்கு 0.6 விழுக்காடு காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டுவருகின்றன.
உலகில் இன்றைய புவி வெப்ப உயர்வுக்குக் காரணம் வனங்கள் பெரும்பான்மையாக அழிக்கப்பட்டதுதான். அதிலும் இந்தியாவில் அழிக்கப்பட்ட வனப்பரப்புகள் ஏராளம். காடுகள் அழிவதில்லை, அழிக்கப்படுகின்றன. எங்கெல்லாம் காடுகளுக்கு எதிராக மனிதர்கள் செயல்படுகிறார்களோ, அங்கெல்லாம் நமது குறைந்தபட்ச எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். இது நாம் காடுகளுக்காக மட்டும் செய்வதில்லை. நமக்காகவே செய்துகொள்வதும்தான். மனிதன் தன்னுடைய சுய தேவைக்காக காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறான். கூடவே அவனும் சேர்ந்து மெல்ல மெல்ல தனது அழிவுக்கும் குழி தோண்டிக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. இது தவிர காடுகள் மூலிகைகளின் புதையல் ஆகும். சித்த மருத்துவத்தில் பயன்படும் அனைத்து மூலிகைகளையும் தருவது காடுகளே.
இன்றைய உலகில் மரங்களை அழித்ததனால் போதிய மழை பெய்யாமல் குடி தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். இதுவே தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தால், பின்னாளில் வரும் நமது சந்ததிகள் குடிநீர் மட்டுமல்ல சுவாசிக்கும் காற்றையும் விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். இவைகளைத் தவிர்க்க வேண்டுமானால், வனங்களை நாம் காத்துத்தான் ஆகவேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் நடுவோம். காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நாம் யாவருக்கும் உண்டு. ஒரு மரத்தை வெட்டினால் இரு மரங்களை நடு என்று இன்று எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.. இதை நாமும் செயல்படுத்த வேண்டும்.. நமது வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான காற்றைப் பரிசளிப்போம். நமது வாழ்க்கைக்கு தேவையான நல்ல காற்றையும் மழையையும் உணவையும் தந்து மனிதர்களை வாழ வைக்கும் காடுகளை பாதுகாத்து அதற்கு நன்றி செலுத்தும் கடமை நமக்கு உள்ளது.
காடுகளை காப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதும், பல்லுயிர் பெருகும் இடத்தில் நகரங்களில் வாழும் மனித இனமும், பெரு நிறுவனங்களும் நுழையாமல் இருந்தாலே காடுகள் தங்களை பாதுகாத்துக் கொண்டு மனித இனத்திற்கு வேண்டியதை தானாக முன்வந்து செய்யும் என்பதும் சூழலியல் ஆர்வலர்களின் கருத்தாக அமைகிறது.
மழை பெய்வதற்கு காடுகள் அவசியம் என்பதை நாம் அறிவோம். காற்றும் தண்ணீரும் இல்லாமல் மனிதனால் உயிர் வாழ முடியாது. காற்றில்லாமல் மூன்று நிமிடங்களும் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களும்தான் ஒரு மனிதனால் உயிர் வாழமுடியும். இந்நிலையில், மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் என்றால் அதற்கு அடுத்த நாள், அதாவது, மார்ச் 22 ஆம் தேதி உலக நீர் தினம் சிறப்பிக்கப்படுகிறது. அது குறித்து இப்போது காண்போம்.
உலக நீர் தினம்
‘நீரின்றி அமையாது உலகு‘ என்றார் திருவள்ளுவர். இந்த உலகில் உள்ள எந்த உயிரினமும் நீர் இல்லாமல் வாழ முடியாது.
1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா பொதுச் சபையின் மாநாட்டில் ’ உலக தண்ணீர் தினம்’ கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22 அன்று தண்ணீர் தினம் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 1993 முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உலக வரலாற்றில் பல ஆயிரக்கணக்கானோர் அன்பின்றி வாழ்ந்து சென்றிருக்கலாம், ஆனால் ஒருவர் கூட நீரின்றி வாழ்ந்ததாக வரலாறு இல்லை. இன்றைய உலகில் 70 கோடியே 30 இலட்சம் மக்கள், அதாவது, மொத்த மக்களுள் 11 பேருக்கு ஒருவர் சுத்தக் குடிநீருக்கு வாய்ப்பின்றி உள்ளனர். இவ்வுலகில் பல சண்டைகளுக்கும் துயர்களுக்கும் மையமாக இருந்து வந்துள்ளது தன்ணீர்தான். இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுத்த நீர், சுகாதாரம் தொடர்புடைய பிரச்சனைகளால் உயிரிழக்கின்றனர். சுத்தமற்ற குடிநீரால் ஏற்படும் வயிற்றுப் போக்கால் ஒவ்வோர் இரண்டு நிமிடத்திற்கும் 5 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை உயிரிழக்கிறது.
தண்ணீர் உயிருக்கு எவ்வளவு முக்கியம் என்றால், வேறு கிரகங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அறிவியலாளர்கள் முதலில் அங்கு தண்ணீர் இருக்கிறதா என்பதைத்தான் ஆய்வுச் செய்கிறார்கள். பூமியின் மேற்பரப்பு 71 விழுக்காடு நீரால் சூழப்பட்டிருக்கிறது. மீதி 30 விழுக்காடு நீர் நிலத்தடியில் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 விழுக்காடு உப்புத் தன்மையானது. 2.5 விழுக்காடு மட்டுமே நன்னீர். 68 விழுக்காட்டு நன்னீர் பனிக்கட்டியாக உறைந்திருக்கிறது. நன்னீர் ஆதாரம் என்பது எல்லாருக்கும் கிடைப்பது அல்ல. நன்னீரிலும் 1.2 விழுக்காடு தான் நுகர்வுக்குரியது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதிகப்படியான நன்னீர் இருக்கும் பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தால் வேகமாக உருகி கடல் நீருடன் கலந்து வருகிறது. அதனால் மீதம் இருக்கும் நீரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை மிகவும் அத்தியாவசியமாக மாறி வருகிறது.
பிறந்த குழந்தையின் உடலில் 78 விழுக்காடு நீர் இருக்கிறது. பெரிய மனிதர்களின் உடலில் 55 முதல் 60 விழுக்காடு நீர் இருக்கிறது. நீரின் பங்களிப்பு இல்லாமல் உடலில் இயக்கம் இல்லை. இரத்தம்தான் செல்களுக்குத் தேவையான சத்துகளைக் கொண்டு சேர்க்கிறது. நீர்தான் கழிவை வெளியேற்றுகிறது. உடலின் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்கிறது. மூளையும் முதுகெலும்பும் அதிர்ச்சியால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.
உலகில் 40 விழுக்காட்டு மக்கள் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும், வரும் காலங்களில் பல கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நீருக்காக போர்கள் மூழும் அபாயம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். 163 மில்லியன் இந்தியர்களுக்குச் சுத்தமான குடிநீர் இல்லை. 21 விழுக்காட்டு நோய்கள் பாதுகாப்பற்ற குடிநீருடன் தொடர்புடையவை. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆறுகள் இன்று வறண்ட நிலையிலும், கழிவுநீர் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டும் கிடக்கின்றன. இதற்கெல்லாம் கோடிகள் ஒதுக்கப்படுகின்றன, ஆனால் திட்டம் முழுமையாக நடந்து வளமடைந்ததா என்பது கேள்விக்குறிதான். கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு (WaterAid) அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் ஏறக்குறைய 220 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாக சில புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இத்தகைய சூழலில் உலக மக்கள் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22ஆம் தேதியன்று ‘உலக தண்ணீர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு தண்ணீர் சிக்கனம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரினம் முதலில் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றுள்ளது. அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது. உலகில் வரும் 2050ம் ஆண்டிற்குள் ஏறத்தாழ 570 கோடி மக்கள் ஓர் ஆண்டிற்கு ஒரு மாதமாவது தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படுவார்கள் என ஐநா சபை எச்சரித்துள்ளது. இன்று மூன்றில் ஒரு பங்கு மக்கள் குடிக்கச் சுத்தமான நீரின்றி தவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், பருவநிலை மாற்றம் காரணமாக 90 விழுகாட்டு இயற்கை பேரழிவுகள் ஏற்ப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக இருப்பது உலக நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவில் 15.5 கோடி குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியான பகுதிகளில் வசிக்கிறார்கள். நாட்டில் 6.85 கோடி மக்கள் போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் வசிப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இவையெல்லாம் நிதர்சனமான உண்மை நிலை. நம் கடமை இங்கு என்ன என்பதை கொஞ்சம் நின்று, அமர்ந்து சிந்தித்துப் பார்ப்போமா? வன பாதுகாப்பையும் நீர் பாதுகாப்பையும் நாம் யாருக்காகச் செய்ய வேண்டும்? நமக்கும் நம் வருங்காலத் தலைமுறைக்கும்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்