நீர் தொடர்பான நோய்களால் அதிகரிக்கும் இறப்பு விகிதம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நீர் தொடர்பான நோய்கள் மற்றும் உடல் நலமின்மையால் ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உலகளவில் இறக்கின்றனர் என்றும், இதனால் ஆண்டுக்கு 14 இலட்சம் மக்கள் இறக்கின்றனர் என்றும் அறிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
மார்ச் 22, சனிக்கிழமை இன்று, உலக நீர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனம், இதே நிலை நீடித்தால், 2024-ஆம் ஆண்டில், உலக அளவில் 4 குழந்தைகளில் ஒருவர் நீர்ப் பற்றாக்குறை மிக அதிகமுள்ள பகுதிகளில் வாழ நேரிடும் என்றும் எடுத்துகாட்டியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அதாவது 400 கோடி மக்கள், ஆண்டுக்கு குறைந்தது ஒரு மாதமாவது கடுமையான நீர்ப் பற்றாக்குறையை அனுபவிக்கின்றனர் என்றும், ஏறக்குறைய 43 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் மிக அதிக நீர் பாதிப்புள்ள பகுதிகளில் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நீர்ப் பற்றாக்குறை மற்றும் குறைந்த அளவிலான குடிநீர் வசதிகள் உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர் என்று எடுத்துரைத்துள்ள இந்நிறுவனத்தின் அறிக்கை, காலநிலை மாற்றம் தீவிரமான வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது என்றும், இதனால் வறட்சி, நீர்ப் பற்றாக்குறை மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
2030-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 70 கோடி மக்கள் கடுமையான நீர்ப் பற்றாக்குறையால் இடம்பெயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், நீர் மாசுபாட்டினால் காலரா மற்றும் டைபாய்டு நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதனால் குழந்தைகள் குறிப்பாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
நீர் மற்றும் நலவாழ்வுப் பணிகளை வழங்கும் முன்னணி நிறுவனமான யுனிசெஃப், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தண்ணீர் மற்றும் நலவாழ்வுத் திட்டங்களைக் கொண்டுள்ளது. இவற்றின் வழியாக, ஒவ்வொரு ஆண்டும் 3 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான நீர் கிடைக்க உதவுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்