ஏமனில் நீடித்து வரும் மோதலால் குழந்தைகள் வாழ்வு பெரும் அழிவுக்குள்ளாகியுள்ளது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமனில் நீடித்துவரும் மோதல், குறிப்பாக அந்நாட்டின் குழந்தைகள்மீது பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பெரும் கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
மார்ச் 25, இச்செவ்வாயன்று, அறிக்கையொன்றில் இத்தகவலை வழங்கியுள்ள அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம், இந்தப் போர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுத்துள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
மேலும் இந்தப் போரில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் 5,37,000 பேர் உயிருக்கு ஆபத்தான கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உரைத்துள்ள இந்நிறுவனம், கூடுதலாக, 14 இலட்சம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது அவர்களின் துயரங்களை வெகுவாக அதிகரித்துள்ளது என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.
போரினால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி மனிதரால் உருவாக்கப்பட்ட ஒன்று என்றும், இது ஏமனின் பொருளாதாரம், நலவாழ்வு அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பை பெரிதும் பாதித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள இவ்வறிக்கை, இந்நெருக்கடியால் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மனிதாபிமான உதவியை நம்பியுள்ளனர் என்றும், மேலும் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏமனில் ஆபத்தான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், யுனிசெஃப் நிறுவனம் நலவாழ்வுக்கான சேவைகளை வழங்குவதற்கான தனது முயற்சிகளைத் தொடர்கிறது என்றும், ஆனால் 2025-ஆம் ஆண்டிற்கான அவர்களின் நிதி உதவி 25 விழுக்காடு மட்டுமே பூர்த்தி செய்யப்படுவதால், 76 இலட்சம் மக்கள் அடிப்படை நலவாழ்வுப் பாதுகாப்பை இழக்கும் ஆபத்தில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அவரசத் தேவைக்கான நிதி ஆதாரங்கள் இல்லாமல், அங்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், பலர் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், அதிகமான மரண பயத்தாலும் வாழ்நாள் முழுவதும் பெரும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்றும் மேலும் இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்