தேடுதல்

ஆடுகளை மேய்த்தல் ஆடுகளை மேய்த்தல்  (AFP or licensors)

விடை தேடும் வினாக்கள் – காணாமல் போனதை தேடமாட்டீரா?

இயேசு தன் கதைகளில், உரைகளில் இடையர்களை அடிக்கடி குறிப்பிட்டார். தன்னையே ஓர் இடையராக, ஆயராக அவர் உருவகித்துப் பேசினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, இன்றைய நம் விடை தேடும் வினாக்கள் நிகழ்ச்சியில் நாம் காணவிருப்பது, காணாமல் போன ஆடு குறித்த உவமையில் இயேசு கேட்கும் கேள்வி.

“உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? (Luke 15:4) என்பதுதான் அந்த கேள்வி. இந்த கேள்வியைத் தொடர்ந்து அவர் கூறுவது, ஆட்டைக் கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார் (லூக்கா 15 4-5)என்பதுதான்.

இயேசு பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் நெருங்கிப் பழகுவதைக்கண்ட பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தங்களுக்குள்ளாக முணுமுணுக்கின்றனர். அவர்களின் முணுமுணுப்பிற்கு காரணம் இல்லாமல் இல்லை. பொதுவாக, சாதாரண மக்களை பரிசேயர்கள் மதிப்பதில்லை. ஏனென்றால், அவர்கள் சட்டத்தை நுணுக்கமாகக் கடைப்பிடிப்பதில்லை என்ற எண்ணம் பரிசேயர்களின் மனதில் இருந்தது. எனவே, அவர்களோடு உரையாடுவதையும், உறவாடுவதையும் தவிர்த்து வந்தனர். அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது, கடவுள் அவர்களை மன்னிக்கவே மாட்டார், கடவுள் தரும் மீட்பில் அவர்களுக்கு பங்கில்லை போன்ற எண்ணங்கள் பரிசேயர்கள் மத்தியில் இருந்தது. அப்படிப்பட்ட மக்களோடு இயேசு நெருங்கிப் பழகுவது, அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது.

வரி தண்டுவோரையும், ஏழைகளையும், நோயாளிகளையும் பாவிகள் என உதறி நடந்தது யூத சமூகம். அவர்களுக்கு மீட்பு இல்லை என அறிவித்துத் திரிந்தது. அந்த சூழலில் இயேசுவின் இந்த போதனை ஏழைகளுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது. பாவிகளுடன் உண்பது ஏன்? என்ற கேள்விக்கு மூன்று உவமைகளில் இயேசு பதிலளித்தார். நாம் இன்று காணவிருப்பதே முதல் உவமை.

'உங்களுள் ஒருவரிடம்' என்ற வார்த்தைகளுடன் இந்த உவமையை ஆரம்பித்ததால், தன்னைச் சுற்றியிருந்த அனைவரையும் இயேசு இக்கதையின் நாயகர்களாக்கிவிடுகிறார். இயேசுவைச் சூழ்ந்து அமர்ந்திருந்த எளிய மக்கள், இந்த ஆரம்ப வரிகளைக் கேட்டு மகிழ்ந்திருப்பர். தங்களை இடையர்களாக உருவகித்துக் கொள்வது, அம்மக்களுக்கு மகிழ்வைத் தந்திருக்கும். இஸ்ரயேல் குலத்தின் ஒப்பற்ற தலைவர்களென அவர்கள் கருதிய மோசேயும், மன்னன் தாவீதும் இடையர்கள் என்பது அவர்களது மகிழ்வுக்கு முக்கியக் காரணம். அதிலும் குறிப்பாக, அவர்கள் பாடிவந்த திருப்பாடல்களில் இறைவனையே இடையராக உருவகித்துப் பாடிவந்தனர். எனவே 'உங்களை இடையர்களாகக் கற்பனை செய்து பாருங்கள்' என்று இயேசு விடுத்த அந்த அழைப்பு அவர்களுக்கு நிறைவையும், மகிழ்வையும் தந்திருக்கும்.

ஆனால், இயேசு விடுத்த இந்த அழைப்பு, பரிசேயர்களையும், மதத் தலைவர்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கும். தங்களை இடையர்கள் என்ற நிலையில் சிந்தித்துப் பார்க்க அவர்களுக்கு அருவருப்பாக இருந்திருக்கும். அதை ஓர் அவமானமாகக் கருதியிருப்பர். மதத் தலைவர்களைப் பொருத்தவரை இடையர்கள் தீட்டுப்பட்டவர்கள், எனவே, ஒதுக்கப்பட வேண்டியவர்கள். காணமற்போன ஆடு உவமையில், மக்கள் அனைவரையும் கற்பனையிலாவது இடையர்களாக மாறும்படி அழைக்கிறார் இயேசு.

கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை வானதூதர் இவ்வுலகிற்கு கொணர்ந்தபோது, அது முதன்முதலாக யாருக்கு வழங்கப்பட்டது? இடையர்களுக்குத்தான் என்பதையும் நாம் உணரவேண்டும். பரிசேயர்களாலும் மதத்தலைவர்களாலும் ஒதுக்கப்பட்ட இடையர்களுக்கு இறைவன் முதலிடம் தருகிறார். இந்த மக்களில் ஒருவராக, தன் மகனை இணைக்கிறார் தந்தையாம் இறைவன். இயேசுவும் தன் கதைகளில், உரைகளில் இடையர்களை அடிக்கடி குறிப்பிட்டார். தன்னையே ஓர் இடையராக, ஆயராக அவர் உருவகித்துப் பேசினார்.

பாலஸ்தீனப்பகுதியில் ஆயனுடைய பணி கடினமான பணியாகும். பாலஸ்தீனப்பகுதியில் மேய்ச்சலுக்கான நிலம் தொடர்ந்து இருக்காது. சிறிது மேய்ச்சல் நிலம், பின் வறண்ட பகுதி என தொடர்பில்லாமல் இருக்கும் நிலப்பரப்பு அதிகம். எனவே ஆடுகள் புல்வெளியைத் தேடிச்சென்று மேயும்போது காணாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். காணாமல் போன ஆட்டை கட்டாயம் ஆயன் கண்டுபிடிக்க வேண்டும். காட்டு விலங்குகள் கொன்றுவிட்டால், அதற்கான சான்றையாவது கொண்டு வரவேண்டும். தொலைத்த ஆயன் ஆட்டினைத் தேடிச் செல்வார். அவரின் வருகையை எதிர்பார்த்து, ஊரே காத்திருக்கும். தூரத்தில் ஆட்டுக்குட்டியோடு ஆயன் வருவதைப் பார்த்ததும், அந்த ஊரே திருவிழா போல அவரை வரவேற்கும். இந்த நிகழ்வையும் தன் உவமையில் இயேசு சுட்டிக்காட்டுகிறார்..

இயேசு வழக்கம் போலவே மக்களுக்குப் புரியக் கூடிய விடயங்கள் மூலமாக, மக்களுக்குத் தெரிந்திராத இறை அன்பைக் குறித்துப் பேசுகிறார். விலகிச் சென்றது ஒற்றை ஆடுதானே என நினைக்காமல், மற்ற ஆடுகள் போதும் என அமைதிகாக்காமல், அந்த ஒற்றை ஆட்டைத் தேடிச் செல்கிறார் மேய்ப்பன். இங்கே இயேசுவின் அன்பு வெளிப்படுகிறது. இயேசு கிறிஸ்து பாவிகளைத் தேடி மீட்டதையும் (லூக் 19: 10) பாவிகளோடு இருந்ததையும் (மத் 9: 10) பார்த்த பரிசேயக்கூட்டம், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று அவருக்கு எதிராக முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது இயேசு, தான் ஏன் பாவிகளைத் தேடி மீட்கிறேன், எதற்காக அவர்களோடு தன்னை ஒன்றித்துக் கொள்கிறேன் என்பதை விளக்க, காணாமல் போன ஆடு உவமை, காணாமல் போன திராக்மா உவமை, காணாமல் போன மகன் உவமை என்ற மூன்று உவமைகளைச் சொல்கின்றார். இம்மூன்று உவமைகளிலும் அடிநாதமாக இருப்பவை, காணாமல் போதல், தேடி கண்டுகொள்ளுதல், மகிழ்ச்சி உண்டாகுதல் என்ற மூன்று கருத்துகள்தான்.

காணாமல் போகும் ஆடானது, தன்னுடைய மதியீனத்தால் அல்லது அறிவுகெட்டத்தனத்தால் காணாமல் போகிறது. ஆடு என்றால், ஆயனின் குரல் கேட்டு நடக்கவேண்டும். ஆனால், காணாமல் போன ஆடோ ஆயனின் குரல் கேட்காமல், தன்னுடைய மதியீனத்தால் தொலைந்து போகின்றது. இது இறைவன் தேடிவந்த பாவிகளைக் குறிக்கும். நாம் அனைவரும் பாவிகள்தாம் என்பதையும் உணர்த்தும்.

ஆயனின் தேடல் அடுத்து இடம்பெறுகிறது. தேடல் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நீண்டு கொண்டே இருக்கிறது. தேடல் இல்லாத மனிதன் யாருமே இல்லை. பாதுகாப்பாக இருக்கும் தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு, காணாமல் போன ஒரே ஓர் ஆட்டிற்காக வெளியே செல்கிறார் ஆயர். ஆபத்தானதும் பகுத்தறிவிற்கு எதிரானதுமான இச்செயலைச் செய்து எல்லா ஆடுகளையும் அன்பு செய்யும் சிறந்த ஆயனாகத் திகழ்கின்றார். தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மக்களையும் இவ்வாறே தேடி செல்கின்றார் இறைவன். இவரின் தேடுதலில் கோபமோ வெறுப்போ இல்லை, மாறாக தவிர்க்க முடியாத ஏக்கமே, அன்பே நிரம்பி நிற்கின்றது. ஏனெனில், பலவீனமான குழந்தை மீது தாய்க்கு அக்கறை அதிகம், படிப்பில் பின் தங்கிய மாணவன் மீது ஆசிரியருக்கு அக்கறை அதிகம் என்பதை நாம் அறிவோம். காணாமற்போய்விட்டது என தனது கவனக்குறைவை ஒரு காரணமாக கொள்ளாமல் ஆயன் தன் ஆட்டை நோக்கி பயணம் செய்கிறார். தான் வந்த பாதையில் மீண்டும் நடந்து தேடுகிறார்.

அடுத்து நாம் பார்ப்பது, கண்டுகொள்ளுதல். காணாமல் போன ஆட்டை மீட்டுக்கொண்டுவந்த இடையனை, பாவிகளைத் தேடிவந்து மீட்ட இயேசுவுக்கு ஒப்பிடலாம். காணாமல் போனது கிடைத்ததும், மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கிறது. காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் ஆயர் நண்பர்களோடும் அண்டை வீட்டாரோடும் சேர்ந்து மகிழ்கின்றார். இப்படி ஒரு பாவியின் மனமாற்றத்தினால் எல்லாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்பதால்தான் இயேசு அவர்களைத் தேடிச் செல்கின்றார்; தவறை உணர்ந்து திருந்தியவர்களை அன்போடு வரவேற்கின்றார்.

‘யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்மென இறைவன் விரும்புகிறார்’ (1 பேது 3:9) என்பார் புனித பேதுரு.  ஆட்டைக் கண்டுபிடிக்கும் மேய்ப்பன் அடையும் மகிழ்ச்சி நமக்கு இறையன்பின் ஆழத்தைப் புரிய வைக்கிறது. ஒரு சின்ன பழிச் சொல் இல்லை, ஒரு சின்ன திட்டு இல்லை, அடி இல்லை, விசாரணை இல்லை. அள்ளி எடுத்து தோளில் போட்டு நடக்கிறார். ஓர் ஆடு எத்தனை கிலோ இருக்கும் என்பதெல்லாம் மேய்ப்பனுக்குக் கவலையில்லை. தனது குழந்தை எவ்வளவு எடையாய் இருந்தாலும் தூக்கிச் சுமக்கும் அன்னையைப் போல அவர் சுமக்கிறார். அவர் அடைகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாததாய் இருக்கிறது.

வழிவிலகிச் செல்லும் ஒரு மனிதர் மீண்டும் இறைவனிடம் வரும்போது விண்ணகம் சிலிர்க்கிறது, மகிழ்கிறது, கொண்டாடுகிறது. தவறிப் போன பொருள் கிடைத்துவிட்டால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு. கடவுள் தம்மை விட்டுப் பிரிந்துசென்ற பாவிகளைத் தேடிச் செல்கிறார். அவர்களைக் கண்டுபிடித்துத் தம்மோடு சேர்த்துக்கொள்ளும் வரை அவர் ஓய்ந்திருப்பதில்லை. அவருடைய எல்லையற்ற அன்பை நாம் உணர்ந்து அவரோடு எந்நாளும் அன்புறவில் இணைந்திருந்தால் அவர் நிறைவான மகிழ்ச்சி கொள்வார், அந்த மகிழ்ச்சியில் நமக்கும் பங்குண்டு.

இயேசு இந்த உவமையைக்கூறி, இந்த கேள்வியைக் கேட்டு 2000 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும், இக்காலத்திலும் சிலர் தம்மை மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர் என்று நம்பி மகிழ்கிறார்கள். ஆனால் விண்ணகம் மகிழ்வதோ ஒரு பாவியின் மனந்திரும்புதலில். அதாவது, விண்ணகத்தை மகிழ்ச்சியாய் வைக்க, மனந்திரும்பும் ஒரு பாவியால் முடியும். அந்த மகிழ்ச்சியைத் தேடித்தான் இயேசுவும் இவ்வுலகிற்கு வந்தார். திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவதைப் பார்ப்போம். `‘பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்’. — இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. — அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார்’(திமொ1: 15-16), என்கிறார் தூய பவுல்.

அன்று நம்மைத் தேடி வந்த இறைவன் இன்னும் நம்மைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார். சிலுவை மரணத்தை ஏற்று, நம் பாவத்தையெல்லாம் சுமந்து தீர்த்த இறைவன், “என் வேலை முடிந்தது, வழியைக் காட்டிவிட்டேன். இனி வேண்டுமென்றால் நீயே மீட்பின் வழிக்கு வா” என விடவில்லை. விலகிச் செல்கையில் மீண்டும் அவர் தேடி வருகிறார். நம் அருகில்தான் நம் சுதந்திரத்தையும் மதித்து நடந்து வருகிறார். அதில் அவருடைய அளவில்லா அன்பும் அக்கறையும் தெரிகிறது.

வழிதவறிச் சென்ற நம்மை கண்டுபிடிக்கவும், நம்முடைய மனம் மாறுதலை ஏற்று நம்மை கொண்டாடவும், விண்ணுலகம் தயாராக இருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? என்பதுதான் இன்று நம்மைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி. ஒருவர் கூட தவறான நெறிக்குச் சென்று மீட்பை இழந்துவிடக்கூடாது என்பதில் இயேசு தெளிவாக இருக்கிறார்.

இரக்கம் என்பது இறைவனின் பெயர்! அன்பு என்பதும் அவர் பெயர்தான்! இவை நம் பெயரானால் நாமும் நம் ஆயரிடம் திரும்பி வருவோம், காணாமல் போன ஆடுகளையும் அழைத்து வருவோம்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2024, 14:02