தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

ஒருவர் எளிமையை இழக்காமல் வளர வேண்டும்!

இந்தக் காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பதில் அனைத்து மக்களின் ஈடுபாடு தேவைப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பிள்ளைகளிடம் இந்தப் பூமியின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்பதை நினைவூட்ட வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கல்வி என்பது சிறு பிள்ளைகள் தாங்களாகவே நிர்வகிக்க முடியும் என்று நினைக்கும் தருணம் வரை அவர்களுடன் இணைந்து பயணிப்பதாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக குழந்தைகள் தின பத்திரிகை அலுவலகத்தின் தலைவரான ராபர்டோ பசிலியோ மேற்கொண்ட ஒரு நேர்காணலின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை. மேலும் இந்த நேர்காணல் இத்தாலிய இரயில்வே துறையின் 'அம்பு' (La Freccia) என்ற இதழில் மே 3, வெள்ளிக்கிழமை இன்று வெளியாகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதியன்று குழந்தைகள் உங்களை சந்தித்த நிகழ்விற்குப் பிறகு தாங்கள் வத்திக்கான் நகரின் இரயில் நிலையத்தில் நின்று ஒரு தாத்தா தனது பேரக்குழந்தைகளை வழியனுப்புவதுபோல் நடந்துகொண்டீர்கள். இது எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இது எப்படி உங்களுக்கு சாத்தியப்பட்டது என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பயணம் என்பது வாழ்க்கையின் உருவகம். மேலும் உறவுகளை அனுதினமும் பேணுவது நமது கடமையாகும். மற்றவருடன் எப்படி நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து, அவரைத் தானே இருக்க அனுமதிப்பது என்றும் விவரித்தார்.

உலகம் முழுவதிலுமிருந்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை நீங்கள் சந்தித்தீர்கள். இது ஒரு பெரிய குறியீட்டு மதிப்பு. நமது நாளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இளையவர் இன்னும் அழியாத அழகைக் காக்கிறார். நாம் அவர்களை கவனிக்க வேண்டும், அவர்களுக்குச் செவிசாய்க்க வேண்டும். இப்படிச் செய்தால் பெரியவர்களான நமக்கு அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இந்தப் பரிமாற்றம் அனைவருக்கும் மாற்றத்திற்கான உண்மையான நம்பிக்கையை கொண்டு வர முடியும் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்தப் பூமித் தாயின் அமைதி மற்றும் மரியாதை குறித்து பேசுவது பெரியவர்களுக்கும் நம்மை ஆள்பவர்களுக்கும் எப்போதுமே பொருத்தமற்றது மற்றும் சிக்கலானதாக இருக்கிறது. குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்வது அவ்வளவு கடினமா? என்ற கேள்விக்கு, ஒருவர் எளிமையை இழக்காமல் வளர வேண்டும். மேலும் ஒரு குழந்தையின் எளிமை ஓர் இளைஞனுக்கும் பெரியவருக்கும் சமமாக இருக்காது. ஆனால் நம் வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் எளிமையாக இருக்க வேண்டும் என்று பதிலளித்தார்.

இறைவா உமக்கே புகழ் (Laudato si') என்ற உங்களின் திருமடலில், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பது பற்றி பேசியிருக்கிறீர்கள். பூமியையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் 2015-இல் நீங்கள் எழுப்பிய எச்சரிக்கை முழக்கத்திற்குப் பிறகு, இந்த விடயத்தில் அரசுகள் எவ்வளவு செய்துள்ளன? என்ற கேள்விக்கு, அவர்கள் போதுமான அளவு செய்யவில்லை. ஆனால் இந்தக் காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பதில்  அனைத்து மக்களின் ஈடுபாடு தேவைப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பிள்ளைகளிடம் இந்தப் பூமியின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்பதை நினைவூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தையின் சாந்தா மார்த்தா இல்லத்தில் நடைபெற்ற இந்த நேர்காணல் சிறிதுநேரமே நடைபெற்றது என்றும், இம்மாதம் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் உரோமையில் உலகக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ள வேளை, இந்த நேர்காணல் நடைபெற்றது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2024, 15:48