தேடுதல்

இயேசுவுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள்

ஓர் உண்மையான நண்பர் என்பவர் உங்களிடம் தவறுகள் இருந்தபோதிலும் உங்களைக் கைவிடமாட்டார், மாறாக, உங்கள் தவறுகளைத் திருத்தி உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசுவுடனான நட்புறவை வளர்த்துக்கொண்டு, அதனைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று மே 5, இஞ்ஞாயிறன்று வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையக்கருத்தாகக் கொண்டு தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொணடார் திருத்தந்தை.

"இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். நண்பர்கள் என்பேன்" என்று இயேசு கூறியதை எடுத்துக்காட்டி, மோசே, தாவீது அரசர், இறைவாக்கினர் எலியா, அன்னை மரியா ஆகிய தனது பணியாளர்களிடம் எவ்வாறு கடவுள் தனது மீட்புத் திட்டத்தைப் போற்றிப் பாதுகாத்தார் என்பதை நினைவு கூர்ந்த திருத்தந்தை, நாம் இயேசுவுடன் மிகவும் நட்பாக இருக்கவேண்டுமென்று அவர் அதிகம் விரும்புகின்றார் என்றும் எடுத்துக்காட்டினார்.

நட்பின் அழகு

நட்பின் அனுபவம் என்பது குழந்தைப் பருவத்தில் நமது விளையாட்டுப் பொருட்களையோ அல்லது விலைமதிப்பற்ற பரிசுகளையோ நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போதும், பதின்வயதினர் தங்களது நண்பர்களிடம் நம்பிக்கை வைத்து அவர்தம் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும்போதும், பெரியவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் துன்பச் சுமைகள், நினைவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போதும் நட்பின் அனுபவம் தொடங்குகிறது என்று தெரிவித்தார் திருத்தந்தை.

உண்மை நட்பு ஒருபோதும் கைவிடாது 

நிர்ப்பந்தம் இல்லாத உண்மையான நட்பு நமது பொதுவான மனித நேயத்தை அங்கீகரிக்கிறது என்றும், நமது நட்பு உண்மையானதாக இருக்கும்போது, ​​அது துரோகத்தின் முகத்தில் கூட தோல்வி அடையாது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

'ஒரு நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்' (நீமொ 17:17) என்ற நீதிமொழிகள் நூலில் வரும் இறைவார்த்தையை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, ஓர் உண்மையான நண்பர் என்பவர் உங்களிடம் தவறுகள் இருந்தபோதிலும் உங்களைக் கைவிடமாட்டார், மாறாக, உங்கள் தவறுகளைத் திருத்தி உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்றும் குறிப்பிட்டார்.

நாம் எவ்வாறு அவருடைய நண்பர்களாக இருக்கமுடியும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் எடுத்துக்காட்டுகிறார் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசு நமக்காக எளிதில் உடைபடக்கூடியவராக இருக்கிறார் என்றும், பாசாங்குத்தனம் இல்லாத நட்பை நமக்கு வெளிப்படுத்துவார், ஏனென்றால் அவர் நம்மை அன்புகூர்கின்றார், அவர் நமது நன்மைத்தனங்களை விரும்புகிறார் என்பதுமட்டுமன்றி, அவருடைய நன்மைத்தனங்களில் நாமும் பங்கு கொள்ள விருப்பம் கொள்கின்றார் என்றும் விவரித்தார்.

ஒரு நண்பராக இருந்தாலும் சரி, அந்நியராக இருந்தாலும் சரி, நம்முடைய சொந்த வாழ்க்கையில் இறைவனை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டுமென வலியுறுத்திய திருத்தந்தை, மேலும் அவர் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை ஏற்று அதை நமது சொந்த வாழ்வில் நமது சகோதரர் சகோதரிகளுடன் குறிப்பாக, தவறுகள் செய்து மன்னிப்பு தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோமா என்பது குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, புனித அன்னை மரியா, தனது மகனுடன் நமது உண்மையான நட்பை வளர்த்துக் கொள்ள நமக்கு உதவ வேண்டும் என்றும் இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை.

ஆர்த்தடாக்ஸ் மற்றும் கீழை வழிபாட்டுக் கத்தோலிக்கத் திருஅவைகளுக்கு வாழ்த்து

தனது அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்பு, ஜூலியன் நாள்காட்டியின்படி ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் ஆர்த்தடாக்ஸ் மற்றும் கீழை வழிபாட்டுக் கத்தோலிக்கத் திருஅவைகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, உயிர்த்த இயேசு அனைத்து சமூகங்களையும் தனது மகிழ்ச்சியாலும் அமைதியாலும் நிரப்புவாராக! துன்பங்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பாராக! என்று கூறி அவர்களுக்காக இறைவேண்டல் செய்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவேண்டல்

அதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரேசிலின் தென்கோடி மாநிலமான Rio Grande do Sul-வின்  மக்களுக்காக இறைவேண்டல் செய்த திருத்தந்தை, இந்த இயற்கைப் பேரிடரில் இறந்தவர்கள் அனைவரும் இறைபதம் அடைவார்களாக! என்றும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு இறைவன் ஆறுதல் அளிப்பாராக! என்றும் கூறினார்.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவேண்டல்

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் அமைதி திரும்பவும், அங்கு உரையாடல் வலுப்பெற்று நல்ல பலனைத் தரவும் இறைவேண்டல் செய்த திருத்தந்தை, நாம் போரைத் தவிர்த்து உரையாடலை வளர்ப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2024, 09:53