தேடுதல்

தனது மெய்காப்பாளர்களான சுவிஸ் நாட்டு வீரர்களைச் சந்திக்கும் திருத்தந்தை  தனது மெய்காப்பாளர்களான சுவிஸ் நாட்டு வீரர்களைச் சந்திக்கும் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

கிறிஸ்தவர்களாகிய நமக்கு உறவுதான் முக்கிய அனுபவமாக இருக்கிறது!

தற்போது கணினி அல்லது அலைபேசியுடன் ஓய்வு நேரத்தை செலவிடும் பழக்கம் இளைஞர்களிடையே பரவலாக உள்ளது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடவுள் அன்பாக இருக்கிறார்,  அவருக்குள்ளேயே உறவாக இருக்கிறார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்தியது மட்டுமன்றி, அதற்கும் சான்றாகவும் இருக்கின்றார் என்றும், இந்த மறையுண்மையில் நம் இருப்பின் இலக்கையும் நிறைவையும் காண்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 6, இத்திங்களன்று,  திருத்தந்தையின் மெய்காப்பாளர்களான சுவிஸ் நாட்டு வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, எப்போதும் தாராள மனதுடன் உழைக்கும் அவர்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்காகத் தான் மனமுவந்து நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

இங்கிருக்கும் தனது மெய்காப்பாளர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் தன் சிறப்பான நன்றியை உரைப்பதாகக் கூறிய திருத்தந்தை, இத்தகையதொரு அர்ப்பணம் நிறைந்த பணியை ஆற்றுவதற்கு அவர்கள் வளர்ந்த குடும்பச் சூழலே இதற்குக் காரணம் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

இந்த மெய்க்காப்பாளர் பணியில் உங்களின் முழு விருப்பத்தையும் நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள். இது எனக்கு நிறைந்த மகிழ்வைத் தருகிறது என்று அவர்களை பாராட்டிய திருத்தந்தை, விடுமுறை நாட்களைக் கழிக்கும்போதும், அடிக்கடி வெளியே செல்லும்போது நீங்கள் இணைந்து செல்கிறீர்கள், இது உங்களிடையே இருக்கும் உண்மையான உறவை வெளிக்காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

நல்ல உறவுகளே நமது மனித மற்றும் கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் உயர் பாதை என்று சுட்டிக்காட்டிய திருதந்தை, பெற்றோர், சகோதரர் சகோதரிகள், பள்ளித் தோழர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உடன் பணிபுரியும் சக பணியாளர்கள் மற்றும் பலருடனான உறவுகளின் வழியாக நாம் சிறப்பான ஆளுமைப் பண்புகளைக் கற்றுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்

உங்கள் அன்றாட வாழ்க்கைச் சூழலில் சமூகம் மற்றும் உங்களிடையே உள்ள உறவுகளின் இந்தப் பன்முகத்தன்மை மற்றும் தீவிரம் உங்களுக்கு இன்றியமையாத மற்றும் தகுதியான அம்சமாகும் என்பதையும் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை.

சமூக வாழ்க்கையை சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் வளர்க்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய திருத்தந்தை, இன்று, கணினி அல்லது அலைபேசியுடன்  ஓய்வு நேரத்தை செலவிடும் பழக்கம் இளைஞர்களிடையே பரவலாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இளம் காவலர்களே, இந்தச் செயல்களுக்கு எதிராகச் செயல்பட்டு, உங்களின் ஓய்வு நேரத்தை பொதுச் செயல்பாடுகளுக்கும், உரோமைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், சகோதரத்துவத்தின் தருணங்களைச் சொல்லவும் பகிர்ந்து கொள்ளவும், விளையாட்டிற்காகவும் பயன்படுத்துவது நல்லது என்றும், நான் உங்களுக்குக் கூற விருப்புகின்றேன் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2024, 15:11