திருத்தந்தையின் பசுமைப் புரட்சிக்கு பங்களாதேஷ் கத்தோலிக்கர்...
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது Laudato Si’ திருமடல் வழியாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு விடுத்துள்ள அழைப்பிற்குச் செயலுரு கொடுக்கும் நடவடிக்கைகளில், பங்களாதேஷ் கத்தோலிக்கர் தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர்.
இறைவா உமக்கே புகழ் எனப் பொருள்படும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த Laudato Si’ திருமடலின் அறிவுரைகளால் உந்தப்பட்டு, பங்களாதேஷ் கத்தோலிக்கத் திருஅவையும், அதன் காரித்தாஸ் அமைப்பும், 50 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை, சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளன.
மரம் நடுதல், வீடுகளைச் சுத்தமாக வைத்திருத்தல், நெகிழிப்பொருள்களைத் தவிர்த்தல், சிக்கனமாக வாழ்தல் உட்பட, பல்வேறு வழிகளில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு, தலத்திருஅவை, மக்களைத் தூண்டிவருகிறது.
திருத்தந்தையின் Laudato Si’ திருமடல், பங்களாதேஷ் மக்களை, எவ்வாறு சூழலியல் பாதுகாப்பில் செயல்பட வைத்துள்ளது என்பதை, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதிப் பணிக்குழுவின் தலைவரான, திருச்சிலுவை சபையின், அருள்பணி Liton Hubert Gomes அவர்கள், யூக்கா செய்தியிடம், விளக்கிக் கூறியுள்ளார்.
பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு, அந்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு, ஏற்கனவே பணிகள் ஆற்றிவந்தாலும், Laudato Si’ திருமடல் வெளியிடப்பட்டதற்குப்பின், அது, தன் பணிகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்றும், அருள்பணி Gomes அவர்கள் கூறியுள்ளார்.
நம்மால் உலகை மாற்ற இயலும், மற்றும், ஓர் அழகான, வளமையான சுற்றுச்சூழலை, வருங்காலத்திற்கு விட்டுச்செல்ல முடியும் என்று கூறிய அருள்பணி Gomes அவர்கள், தலத்திருஅவை, மூன்று இலட்சம் மரங்களை நடத் திட்டமிட்டிருந்தது, இத்திட்டத்தில், 80 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது, இவ்வாண்டில், கூடுதலாக, இரண்டு இலட்சம் மரங்களை நடும் திட்டம் உள்ளது என்று தெரிவித்தார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்