ஸ்டான் சுவாமி, ஒடுக்கப்பட்ட மக்களின் நீதியின் அடையாளம்
மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி
ஜூலை 28, இப்புதனன்று, இந்திய இயேசு சபை துறவியரின் தலைமையில், இந்தியா முழுவதும் தேசிய நீதி நாள் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கத்தை விளக்கி, இந்திய இயேசு சபைத் தலைவர் அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் டிசூசா அவர்கள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, எங்கள் ஆழ்ந்த மரியாதையைச் செலுத்தவும், மற்றும் அவரது உயர்ந்த இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும், இந்தியாவின் அக்கறையுள்ள குடிமக்களாகிய நாங்கள், இந்நாளை ஒரு தேசிய நீதி நாளாகக் கடைப்பிடிக்க ஒற்றுமையுடன் நிற்கிறோம் என்று, அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் அவர்கள், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தேசிய நீதி நாளில் உறுதிமொழி
ஸ்டான் சுவாமியின் மரணம், ஒரு முடிவு அல்ல, மாறாக அது, நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கான நமது பயணத்தில், மற்றொரு விழித்தெழும் தருணம் எனவும், இவர் தனது இறப்பால், மனித சமுதாயத்திற்கும், படைப்பிற்கும், நீதியை நிலைநாட்டும் பயணத்தில் ஊக்கத்தோடும், துணிச்சலோடும் நடக்க, அனைத்து மக்களையும் இணைத்துள்ளார், எனவே ஸ்டான் சுவாமியின் மரணம் ஆழ்ந்த ஆறுதலின் தருணம் எனவும், அவ்வறிக்கை கூறுகிறது.
ஸ்டான் சுவாமி அவர்கள், தம் இன்னுயிரைத் தியாகமாக்கியதன் வழியாக, நாம் இரக்கமுள்ளவர்களாகவும், குரலற்றவர்களின் குரலாகவும், மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்களாகவும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மையை உரக்கச் சொல்பவர்களாகவும் இருக்க, ஒரு புதிய நெறிமுறை ஆணையை, அவர் நமக்கு வழங்கியுள்ளார் எனவும் கூறுகிறது, அவ்வறிக்கை.
தேசிய நீதி நாளைக் கடைப்பிடிக்கும் இச்சூழலில், ஸ்டான் சுவாமிக்கும், பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நீதி கோருமாறு நம்மை உந்தும் அவருடைய இறைவாக்கினர் உணர்வை, நாம் நம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து ஏற்றுக்கொள்ள உறுதியெடுப்போம் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
கொடூரமான சூழ்நிலைகளில் சிறைகளில் தவிக்கும் மனித உரிமை பாதுகாவலர்களையும், விசாரணைக் கைதிகளையும் விடுவிக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, சனநாயகத்தைப் பாதுகாக்கவும், அண்மைக் காலத்தில் அரசு அமலாக்கிய “தேசத்துரோகச் சட்டம்”, “சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்” போன்ற அடக்குமுறைச் சட்டங்களை இரத்துசெய்யவும், மாற்றுக் கருத்து சொல்வதற்கான உரிமையை நிலைநாட்டவும், நாம் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்கின்றோம். இதற்கான உறுதி ஏற்பை நமக்கு நாமே இந்நாளில் வழங்குகின்றோம் என்றும், அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் அவர்கள், தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
கடவுளின் மகத்தான வல்லமையில் நம்பிக்கைகொண்டு, நல்மனத்தோர் அனைவருடனும் சேர்ந்து, “அந்த சுதந்திர விண்ணகத்தில், எந்தாய், என் நாடு விழித்தெழுக” என்ற இரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளை, நாம் ஒன்றிணைந்து பாடுவோம் என்ற அழைப்போடு, தன் அறிக்கையை நிறைவுசெய்துள்ளார், இந்திய இயேசு சபைத் தலைவர், அருள்பணி முனைவர் ஸ்தனிஸ்லாஸ் டிசூசா.
அருள்பணி ஸ்டான் விட்டுச்சென்றுள்ள செய்தி
இந்தியாவில் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகள், வன்முறை, அட்டூழியங்கள், பாகுபாடு மற்றும், சமூக விலக்கு ஆகியவற்றின் மத்தியில், ‘அமைதி காக்கும் பார்வையாளராக நாம் இருக்கக்கூடாது’ என்று கூறியுள்ள ஸ்டான் அவர்கள், நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் கொடுக்கப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும், உடன்பிறப்புஉணர்வு ஆகிய மதிப்பீடுகளைப் பாட, நம்மை ஊக்கப்படுத்தியுள்ளார் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
அருள்பணி ஸ்டான் சுவாமி
“கூண்டில் அடைக்கப்பட்ட பறவையும் பாடும், கூட்டமாய்ப் பாடும்” என்பதால், துன்பங்களுக்கு மத்தியில், ஸ்டான் சுவாமி, ஓர் இயேசு சபையாளர் என்ற முறையில், நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான ஒரு மாபெரும் பணியில், மனித மாண்பு மறுக்கப்பட்டுள்ள ஒதுக்கப்பட்டவர்களுடன் அவர் தம்மையே ஈடுபடுத்திக்கொண்டார்.
ஆதிவாசி மக்களின் தியாகிகள் மற்றும் நமது தேசத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் மாறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாக்க, தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவருடனும் ஸ்டான் சுவாமி ஒன்றாகக் கலந்துவிட்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் அடையாளமாக ஸ்டான் சுவாமி இன்று உயர்ந்து நிற்கிறார். அவரது மரணத்தில், அவர் ஒரு வணக்கத்துக்குரியவராக பலரின் இதயங்களில் உயர்ந்துள்ளார். பழங்குடிகள், தலித்துகள் மற்றும், ஒடுக்கப்பட்ட மக்களுடன் அவர் வாழ்நாள் முழுவதும் தோழமை கொண்டிருந்தவராகப் போற்றப்படுகிறார். (Ind.Sec./tamil)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்