கத்தோலிக்கரும், புத்தமதத்தினரும் இணைந்து படைப்பின் காலம்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உலகின் பல்வேறு கிறிஸ்தவ சபைகள், இம்மாதம் 1ம் தேதியிலிருந்து, அக்டோபர் 4ம் தேதி வரை படைப்பின் காலத்தைச் சிறப்பித்துவரும்வேளை, கம்போடியா நாட்டில், கத்தோலிக்கரும், புத்தமதத்தினரும் இணைந்து, இந்த படைப்பின் காலத்தைச் சிறப்பித்து வருகின்றனர்.
படைப்பின் காலத்தின் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, கம்போடியாவில், கத்தோலிக்கரும், புத்த மதத்தினரும், தங்களுக்கு இடையே உரையாடல், உடன்பிறப்புஉணர்வு, மற்றும், பல்சமய உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறனர்.
அந்நாட்டு கத்தோலிக்க அருள்பணியாளர்களும், புத்தமதத் துறவியரும் இணைந்து இம்மாதம் முதல் தேதியிலிருந்து மரங்களை நடுவதற்குத் தொடங்கியுள்ளனர்.
கம்போடியாவில் படைப்பின் காலம் சிறப்பிக்கப்படும் முறைபற்றி யூக்கா செய்தியிடம் பேசிய, Battambangவின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான, இயேசு சபை பேரருள்திரு Enrique Figaredo அவர்கள், நாம் வாழ்கின்ற பொதுவான இல்லத்தைப் பராமரிப்பதற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்று கூறினார்.
நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை மீள்கட்டமைத்தல் என்ற தலைப்பில் ஏறக்குறைய 220 கோடி கிறிஸ்தவர்கள், கடவுளின் படைப்பையும், நம் பொதுவான இல்லத்தையும் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செபித்தும், பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும், இவ்வாண்டின் படைப்பின் காலத்தைச் சிறப்பித்து வருகின்றனர்.
போர்த்துக்கல் நாட்டு தொமினிக்கன் சபைத் துறவி Gaspar da Cruz அவர்கள், 1555 மற்றும் 1556ம் ஆண்டுகளில், கம்போடியாவில் முதன் முதலில் கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பினார்.
தற்போது கம்போடியாவின் ஏறத்தாழ ஒரு கோடியே அறுபது இலட்சம் மக்களில், 0.13 விழுக்காட்டினரே கத்தோலிக்கர். மறைமாவட்டங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால், 3 திருஆட்சிப்பீடங்கள் உள்ளன. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்