COP26 கருத்தரங்கு வெற்றிபெற, 24 மணி நேர செபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உலகத் தலைவர்களுடன் இடம்பெறும் COP26 என்ற காலநிலை மாற்ற உச்சி மாநாடு வெற்றிபெற, 24 மணி நேர செபத்தொடர் ஒன்றை துவக்கியுள்ளது, கத்தோலிக்க அமைப்புகளின் ஒன்றிணைந்த குழு ஒன்று.
'காலநிலையை மனதில் கொண்ட 24 மணி நேரங்கள்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, நவம்பர் 05, வெள்ளி காலை, கிரீன்விச் நேரம், 11 மணி முதல் சனிக்கிழமை 11 மணிவரை 24 மணி நேரங்களுக்கு இடம்பெறும் எனவும், இந்த செப முயற்சியில் கலந்துகொள்ள அனைத்துக் கத்தோலிக்கர்களுக்கும், அனைத்து மதங்களின் நம்பிக்கையாளர்களுக்கும் அழைப்புவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், தடுப்பூசி போடுவதில் சரிசமமற்ற நிலைகள் இடம்பெற்றதால், இந்த COP26 கருத்தரங்கில், அனைவரின் குரல்களும் கேட்கப்படமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என கவலையை வெளியிடும் கத்தோலிக்க நிறுவனங்கள், உலகம் முழுவதையும் இணைக்கும் இந்த செப வழிபாடுகளின் வழியாக ஏழைமக்களின் செபங்களும், எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்க வழிவகைச் செய்யப்படும் என்று கூறியுள்ளன.
பூமிக்கடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எரிபொருட்கள் பயன்பாட்டை 2040ம் ஆண்டுக்குள் நிறுத்தவும், சுற்றுச்சூழல் அமைப்பை தன் இயல்பு நிலைக்குக் கொணரவும், காலநிலை மாற்றத்திற்கு இயைந்தவகையில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள, ஏழைநாடுகளுக்கு, பொருளாதார ரீதியாக உதவவும், இந்த கருத்தரங்கில் தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டுமென COP26ல் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது, கிறிஸ்தவ அமைப்புக்களின் ஒன்றிப்பு.
சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு காரணமாகாத உலகின் தென்பகுதி, தற்போது காலநிலை மாற்ற நெருக்கடியால் துன்பங்களை அனுபவித்து வருவது, இவ்வுலகின் ஒழுக்க நெறி தோல்வியையும், அநீதியையும் சுட்டிக்காட்டி நிற்கின்றது என உரைக்கின்றன கத்தோலிக்க அமைப்புகள்.
பிலிப்பீன்ஸ், மியான்மார், மெக்சிகோ, சிலே, தன்சானியா, கானா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஸ்காட்லாந்து உட்பட உலகம் முழுவதுமிருந்து பல நாடுகள் பங்குபெறும் இந்த செபத்தொடரில், காலநிலை மாற்ற பாதிப்புகள் குறித்த அனுபவங்கள் பகிரப்படுவதுடன், இவை, இக்கருத்தரங்கில் பங்குபெறுவோருடனும் பின்னர் பகிரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்