COP26ல் பலனளிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட..
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
காலநிலை மாற்றம் தொடபுர்டைய உலகினரின் வாழ்வுப்பாதையில் முற்றிலும் மாற்றம் கொணரும்வண்ணம், உறுதியான, பலனளிக்கவல்ல, மற்றும், தெளிவாகத் தெரியக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றுமாறு, உலகத் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர், அமேசான் பகுதி ஆயர்கள்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும், காலநிலை மாற்றம் குறித்த COP26 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கென்று, இலத்தீன் அமெரிக்காவின் அமேசான் பகுதி கத்தோலிக்க ஆயர் பேரவையும் (CEAMA), அமேசான் பகுதி திருஅவை அமைப்பும் (REPAM) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காலம் கடத்துவதற்கு இதுவல்ல நேரம் எனவும், என்றென்றைக்குமே பலனளிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
கையறுநிலை
காலநிலை மாற்றம் உருவாக்கியுள்ள கடும் பாதிப்புக்களால் மனித சமுதாயம் பேரிழப்பை எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், பல்லுயிரின வகைகள் மற்றும், வளமைவாய்ந்த கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் அமேசான் பகுதி, கடும் துயர்களை எதிர்கொண்டுள்ளது என்றும், இப்பகுதியில் வாழ்கின்ற நாங்கள் திகைப்புற்றும், உதவியற்றும் உணர்கின்றோம் என்றும், ஆயர்கள் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
நூற்றாண்டுகளாக, இப்பூமியின் பாதுகாவலர்களாக இருந்துவரும் அமேசான் பகுதி திருஅவையும் மக்களும் முன்வைக்கும் இந்த விண்ணப்பத்தை, COP26 மாநாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
“ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை" என்ற கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள இனங்களுக்கு, இந்த மாநாட்டை விட்டால், இரண்டாவது வாயப்பு கிடையாது எனவும், அமேசான் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டுணர்ந்து, அவற்றைக் களைவதற்கு கிளாஸ்கோ மாநாடு உதவும் எனவும் ஆயர்கள், தங்களின் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.
CEAMA அமைப்பின் தலைவரான பிரேசில் நாட்டு கர்தினால் Claudio Hummes, அதன் செயலர் அருள்பணி Alfredo Ferro, REPAM அமைப்பின் தலைவரான கர்தினால் Pedro Barreto, அதன் செயலர் அருள்பணி João Gutemberg Sampaio ஆகிய நால்வரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்