உக்ரைனில் போர் உக்ரைனில் போர் 

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் தலத்திருஅவைகளுக்கு பேராயர் Shevchuk

போரை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. போர், ஒருபோதும் முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணாது – பாக்தாத் கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான்

இரஷ்யாவின் ஆக்ரமிப்பால் கடும் அழிவுகளையும், துயரங்களையும் எதிர்கொள்ளும் உக்ரைன் நாட்டு மக்களோடு தங்களது ஒருமைப்பாட்டுணர்வையும், அதேவேளை, இரஷ்யாவின் இராணுவத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும் தனக்கு மடல்களை அனுப்பியுள்ள பல்வேறு தலத்திருஅவைத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார், உக்ரைன் தலத்திருஅவை அதிகாரி பேராயர் Sviatovlav Shevchuk.

பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களின் ஆதரவுக்கும், இரஷ்யாவின் ஆக்ரமிப்பை கடுஞ்சொற்களால் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்காண்டிநேவிய ஆயர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார், பேராயர் Shevchuk.

போரை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது

உக்ரைன் மக்கள், போரின் கடுந்துன்பங்களைத் தொடர்ந்து எதிர்கொண்டுவரும்வேளை, அதே துன்பங்களை எதிர்கொண்ட ஈராக் மக்கள், தங்களின் உடனிருப்பைத் தெரிவிக்கின்றனர் என்று தன் மடலில் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், போரை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும், போர், ஒருபோதும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணாது என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

போரானது, போரிடும் தரப்புக்களுக்கு இடையே எதிர்மறைத் தாக்கங்களையே உருவாக்கும் என்றும், அமைதியை விரும்பும் நாடுகளுக்கு இடையே நேர்மை, அமைதி, மற்றும், துணிச்சலோடு இடம்பெறும் உரையாடலே, பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச்செல்ல ஒரே வழி என்றும் கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

உக்ரைன் மற்றும் இரஷ்யாவுக்கும், உலகம் அனைத்திற்கும் அமைதியின் ஆண்டவர் அமைதியை அருள்வாராக என்று, தன் மடலை முடித்துள்ளார், பாக்தாத் கர்தினால் சாக்கோ.  

உக்ரைன் நாட்டு கிரேக்க கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரான கீவ் நகர் பேராயர் Shevchuk அவர்கள் ஒரு காணொளிச் செய்தி வழியாக, தலத்திருஅவைகளின் தலைவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, 27 இலட்சத்திற்கு மேற்பட்ட உக்ரைன் மக்கள், பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2022, 14:00