விவிலியத் தேடல்: திருப்பாடல் 28 – கற்பாறையாம் கடவுளே நம் துணை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில் திருப்பாடல் 27ல் 11 முதல் 14 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வார நம் விவிலியத் தேடலில் திருப்பாடல் 28 குறித்துத் தியானிப்போம். இத்திருப்பாடலும் ‘தாவீதின் திருப்பாடல்’ என்றே அழைக்கப்படுகிறது. இதனை தாவீது அரசர் எப்போது எழுதினார் என்று தெரியவில்லை. இத்திருப்பாடலை அவர் எழுதியபோது நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்திருக்கவேண்டும் என்பது இதனை வாசிக்கும்போது நமக்குத் தெரிகிறது. இத்திருப்பாடலும் ஒரு இறைவேண்டல் பாடல் போன்றே அமைந்துள்ளது. இத்திருப்பாடல் மொத்தம் 9 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. 1 முதல் 5 வரை உள்ள இறைவசனங்கள் வேதனையில் வெளிப்படும் இறைவேண்டலையும் 6 முதல் 9 வரை உள்ள இறைவசனங்கள் மனதில் வெளிப்படும் நன்றிப் பெருக்கையும் எடுத்துக்காட்டுகிறது. இப்போது 1 முதல் 5 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிக்கும் விதமாக, அவற்றை வாசிப்போம்.
“ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என் கற்பாறையே, என் குரலைக் கேளாதவர்போல் இராதேயும்; நீர் மௌனமாய் இருப்பீராகில், படுகுழியில் இறங்குவோருள் நானும் ஒருவனாகிவிடுவேன். நான் உம்மிடம் உதவி வேண்டுகையில், உமது திருத்தூயகத்தை நோக்கி நான் கையுயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும். பொல்லாரோடு என்னை ஒழித்து விடாதேயும்! தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்! அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு பேசுவதோ சமாதானம்; அவர்களது உள்ளத்தில் உள்ளதோ நயவஞ்சகம். அவர்களின் செய்கைக்கேற்ப, அவர்களின் தீச்செயலுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை அளியும்; அவர்கள் கைகள் செய்த தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை வழங்கியருளும், அவர்களுக்குத் தகுந்த கைம்மாறு அளித்தருளும். ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ அவர் கைகள் உருவாக்கியவற்றையோ அவர்கள் மதிக்கவில்லை; ஆகையால் அவர் அவர்களைத் தகர்த்தெறிவார்; ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.” (வசனங்கள். 1-5)
இந்த ஐந்து இறைவசனங்களிலும், தாவீது அரசர் தனது நாட்டின் நிலையையும் தனது உள்ளத்தின் குமுறல்களையும் வெளிப்படுத்துவதோடு, எதிரிகளின் தீய பண்புகளையும் எடுத்துக்காட்டுகிறார். முதல் இறைவசனத்தில் கடவுளை ‘கற்பாறை’ என்று அழைக்கின்றார் தாவீது. “ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். (திபா 18:2), என்றும் “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்” (திபா 22:1) என்றும் வேறு திருப்பாடல்களிலும் இக்கருத்தை வெளிப்படுத்தியிருகின்றார். நமது ஆண்டவர் இயேசுவும் மத்தேயு நற்செய்தியில் இருவகை அடித்தளங்கள் குறித்து பேசும்போது பாறையின் மீதும் மணலின்மீதும் கட்டப்பட்ட வீடுகளைக் குறித்து விளக்குகிறார்.
“ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில், பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.” (மத் 7:24-27).
பொதுவாக, கற்பாறைகள் மிகவும் வலிமை வாய்ந்தவை. சுவர்கள் மற்றும் குளங்களை அலங்கரிப்பதற்காக, குடியிருப்பு கட்டடங்கள், நதி அணைகள் மற்றும் அடித்தளங்களை நிர்மாணிப்பதில் பழங்காலம் முதல் இன்றுவரை கற்பாறைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மண் சரிவுகள் மற்றும் கட்டுகளை வலுப்படுத்த அவை இன்றியமையாதவை. உலகின் மிகப்பெரிய கற்பாறை அமெரிக்காவிலுள்ள மொஜாவே பாலைவனத்தில் அமைந்துள்ளது. இந்தத் திடமான கற்பாறையின் உயரம் சுமார் 15 மீட்டர். பெரும்பாலும், குவார்ட்ஸ், மணற்கல் மற்றும் கிரானைட் கற்பாறைகள் இயற்கையில் காணப்படுகின்றன. இக்கற்பாறையின் வலிமையையும் தரத்தையும் உணர்ந்ததனால் என்னவோ தாவீது அரசர் கடவுளாகிய ஆண்டவரை 'என் கற்பாறையே' என்று அழைத்து தன்னைக் காக்குமாறு வேண்டுகிறார்.
இத்திருப்பாடலின் இரண்டாவது வசனத்தில், உமது திருத்தூயகத்தை நோக்கி நான் கையுயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும் (வசனம் 2) என்று வேண்டுகிறார் தாவீது. பொதுவாக, யூதர்கள் இறைவேண்டல் செய்யும்போது இரு கரங்களையும் விண்ணோக்கி உயர்த்துவது வழக்கம். ‘மறைப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை’ என்பதைக் கடவுளிடம் தெரிவிக்கும் விதமாகவும் இது அமைவதாகப் பொருள் கொள்ளலாம். கடவுளை நோக்கி கரங்களை உயர்த்தி இறைவேண்டல் செய்யும்போது, அது வெற்றியின் அடையாளமாக அமைவதையும் நமது திருவிவிலியத்தில் காண முடிகிறது. விடுதலைப் பயண நூலில், இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு போர் புரியும்போது இத்தகைய நிகழ்வு ஒன்று நடக்கின்றது. அப்பகுதியை இப்போது வாசிப்போம்.
அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே, ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக, அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார். (விப 17:10-13). இதனை மையமாகக்கொண்டு இப்பொழுது நடைபெறும் எல்லாவகையான இறைவேண்டல் கூட்டங்களிலும் நாம் கரங்களை உயர்த்தி இறைவேண்டல் செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டு வருகிறோம். "எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்" (1திமோ 2:8) என்று கரங்கள் விரித்து இறைவேண்டல் செய்யவேண்டியதன் அவசியத்தை புனித பவுலடியாரும் எடுத்துரைக்கின்றார்.
நான், சென்னையில் உள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தலம் ஒன்றில் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமையன்று திருப்பலி நிறைவேற்றி அதனைத் தொடர்ந்து குணமளிக்கும் வழிபாடு நடத்துவதற்காக சென்று வந்தேன். அப்போது ஒரு கணவனும் மனைவியும் அந்தக் குணமளிக்கும் வழிபாட்டுக் கூட்டத்தின்போது நீண்ட நேரம் முழந்தாள் படியிட்டு இருகரங்களையும் விரித்து இறைவேண்டல் செய்து வந்தனர். வழிபாடு முடிந்து அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு, என்னைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிகொண்டு செல்வார்கள். அப்படி ஒருநாள் அவர்கள் என்னைப் பார்க்கவந்தபோது, “தந்தையே, எங்களுக்குக் குழந்தை ஒன்றை கடவுள் அருளவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள். திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் எங்களுக்குக் குழந்தை இல்லை. இனி எனக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றுகூறி என் மாமனார், மாமியார், நாத்தனார், என எல்லாரும் என்னை மிகவும் மோசமாக நடத்துகின்றனர். இந்தத் துயரமான நிலையிலும், என் கணவர் என்மீது அன்புகொண்டு என்னை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். நிச்சயம் எங்கள் அழுகுரலைக் கேட்டு இந்தக் குழந்தை இயேசுவே என்வயிற்றில் ஒரு குழந்தையாகப் பிறப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் இருக்கிறது. நீங்களும் எங்களுக்காகச் சிறப்பாக வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கண்ணீர்மல்க அப்பெண்ணும் என்னிடம் கூறினார். அவர்களை ஆசீர்வதித்துவிட்டு, “அடுத்த முறை நான் உங்களைச் சந்திக்கும்போது ஆண்டவர் உங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்திருப்பார்” என்று நானும் மிகுந்த நம்பிக்கையுடன் அவர்களிடம் கூறி அனுப்பிவைத்தேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் உள்ள வேறொரு திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு குணமளிக்கும் வழிபாட்டை நடத்தினேன். வழிபாட்டிற்குப் பிறகு என்னைச் சந்திக்க ஒரு கணவனும் மனைவியும் வந்தனர். அவர்கள் இரண்டு ஆண் குழந்தைகளை வைத்திருந்தனர். அப்போது அவர்கள் என்னை நோக்கி, “தந்தையே எங்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? சில ஆண்டுகளுக்கு முன்பு, அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் எங்களை ஆசீர்வதித்து, அடுத்த முறை நான் உங்களைச் சந்திக்கும்போது, ஆண்டவர் உங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்திருப்பார் என்று கூறினீர்களே. இதோ பாருங்கள்! கடவுள் எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்திருக்கிறார்” என்று நிறைந்த மகிழ்ச்சியோடு கூறினார்கள்.
இன்றைய உலகில் நல்லவர்களுக்கு எதிராக, அதுவும் குறிப்பாக, கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கைக்கொண்டிருப்போருக்கு எதிராக, வஞ்சகமும் சூழ்ச்சியும் அவர்களைத் தீய வலையில் வீழ்த்த முயற்சிப்பதைப் பார்க்கிறோம். அதனால்தான் தாவீது அரசர் இவற்றை நன்கு அறிந்தவராய், “பொல்லாரோடு என்னை ஒழித்து விடாதேயும்! தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்! அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு பேசுவதோ சமாதானம்; அவர்களது உள்ளத்தில் உள்ளதோ நயவஞ்சகம்" என்றுரைக்கின்றார்.
ஆகவே, நாமும் தாவீதைப் போன்று, மிகுந்த நம்பிக்கையுடன் கற்பாறையாம் கடவுளிடம் நம் கரங்களை உயர்த்தி மன்றாடுவோம். தாவீதின் குரலைக் கனிவுடன் கேட்டருளிய இஸ்ரயேலின் கடவுளாம் நமதாண்டவர், நம் குரலையும் கேட்டு நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார். வஞ்சக எண்ணம்கொண்டு நம்மை பழிதீர்க்கத் துடிக்கும் நம் எதிரிகளை அவர் நிச்சயம் அழித்தொழிப்பார். அதற்கான அருளை இந்நாளில் கேட்டு மன்றாடுவோம். இத்திருப்பாடலின் இரண்டாம் பகுதியை அடுத்தவார நமது விவிலியத் தேடலில் தியானிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்