இயேசு சோதிக்கப்படுதல்  இயேசு சோதிக்கப்படுதல்  

தவக்காலம் - முதல் ஞாயிறு : சோதனைகளைச் சாதனைகளாக்குவோம்

உலகக் காரியங்களுக்கு முக்கியத்துவம், அதிகாரப் போதை, தற்பெருமை ஆகிய சாத்தானின் மதிப்பீடுகளை வேரறுப்போம்.
ஞாயிறு சிந்தனை 06032022

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் I. இச 26: 4-10      II. உரோ 10: 8-13;   III. லூக் 4: 1-13)

தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைக்குள் நுழைகின்றோம். இன்றைய வாசகங்கள், இயேசுவின் வழியில் சோதனைகளைச் சாதனைகளாக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றன. சோதனைகள் பலவிதத்தில் அமைகின்றன. ‘ஒரே சோதனையா இருக்குப்பா குடும்ப வாழ்க்கையை நடத்தவே முடியல...’ என்று தம்பதிகள் புலம்புகின்றனர். ‘எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே சோதனையா இருக்கு... ஏன்தான் இந்த வாழ்க்கைக்கு வந்தோமென்றே தெரியவில்லை’ என்று துறவிகள் அங்கலாய்க்கின்றனர். படி படி என்று என் பள்ளி ஆசிரியர் பாடாய்ப்படுத்துகிறார், ஒரே சோதனையா இருக்கு என்று கல்வி கற்கும் மாணவ மாணவியர் புலம்புகின்றனர். இப்படி எல்லாத் தளங்களிலும் சோதனைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. ‘சோதனைமேல் சோதனை போதுமடா சாமி’ என்று அந்தக் காலத்து தமிழ் திரைப்படப் பாடல் ஒன்று கூறுகிறது. அப்படி என்றால், உண்மையிலே சோதனை என்பது என்ன? அதனுடைய அளவுகோள் என்ன என்பதைக் குறித்து நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி நாம் எல்லாரும் நன்கு அறிவோம். சோதனைகள் வழியாகப் பல சாதனைகளை நிகழ்த்தியவர். பல்வேறு சோதனைகளைத் திரும்பத் திரும்ப செய்து புதியவற்றைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார். இப்படி சோதனைகளை வென்றவருக்கு அவருடைய 67வது வயதில் மிகப்பெரும் சோதனை ஒன்று வந்தது. அவர் ஆசை ஆசையாக உருவாக்கி வைத்திருந்த அவருடைய ஆய்வகம் திடீரெனத் தீப்பற்றி எரியத்தொடங்கியது. அந்தத் தீயில் அவர் கண்டுபிடித்து வைத்திருந்த எல்லா பொருள்களும் எரிந்து நாசமாகின. தீயை அணைப்பதற்கே பல மணி நேரங்கள் பிடித்தன. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய மகன் அதிர்ந்துபோனான். இந்தச் சோதனையிலிருந்து தன் அப்பா எப்படி மீளப்போகிறார் என்று அவன் வேதனையடைந்து கொண்டிருந்தபோது, “கவலைப்படாதே மகனே, பழையவற்றையெல்லாம் கழித்துவிட்டோம், நாளைமுதல் புதியவற்றைக் கண்டுபிடிப்போம்” என்று கூறிவிட்டு நிம்மதியாகத் தூங்கச் சென்றாராம். எடிசனுக்கு நிகழ்ந்த இந்த மாபெரும் இழப்பையும் சோதனையையும் கண்டு அவருடை நண்பர்கள் முதற்கொண்டு அனைவரும் நம்பிக்கை இழந்தனர். ஆனால், எடிசன் கொஞ்சம்கூட மனம் தளரவே இல்லை. இந்தச் சோதனையையும் அவர் சாதனையாக்கிக் காட்டினார். ஆம், இந்தச் சம்பவத்திற்குப் பின்பு அவர் கண்டுபிடித்ததுதான் ஃபோனோகிராஃபி என்ற கருவி.  

“உன் வாழ்க்கையில் வரும் சவால்கள் உனக்கு ஏற்படும் சோதனைகள் அல்ல. அவைகள் உன்னை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சாதனைகள். விழு, எழு, போராடு, நில், கவனி, சவாலை சமாளி” என்கிறார் கவிஞர் ஒருவர். எத்தனை சோதனைகள் நமது வாழ்க்கையில் வந்தாலும், மனம் தளராமல் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்றால் எப்போதும் வெற்றிகளைக் குவிக்கலாம்.

இயேசு, தனது பணிவாழ்வைத் தொடங்கும் நிலையில், தூய ஆவியாரால் பாலை நிலத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு சாத்தானின் சோதனைக்கு ஆட்படுகிறார். அவர் மூன்று விதங்களில் சாத்தானால் சோதிக்கப்படுகிறார். முதல் சோதனையில் உணவு மையப்படுத்தப்படுகிறது.

“அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம், “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, “‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார் (வசனம் 3-4).

எந்தவொரு அரசனும், எதிரியின் கோட்டைக்குள் நுழையப்போகும் முன்பு, அக்கோட்டையின் எந்தப்பகுதி மிகவும் பலவீனமாக இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து, அவற்றை முதலில் தாக்கி வெற்றிகொள்ள முயற்சிப்பான். உலகம் தோன்றியதுமுதல் இன்றுவரை பசிதான் ஒரு மனிதரின் பலவீனமாக இருக்கின்றது.'பசி வந்துவிட்டால் பத்தும் பறந்து போகும்' என்பார்கள். பசியைப் போக்கியே பலர் தங்கள் காரியங்களைச் சாதித்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. 'தனியா கூட்டிகிட்டு போயிட்டு, நல்ல சாப்பாடும் சரக்கும் வாங்கிக்கொடு. அப்புறம் பாரு, நீ சொல்றதையெல்லாம் அவர் செய்வார்' என்றும்,  சாப்பாடு மட்டும் நல்லா கொடுத்துப் பாரு, அப்புறமா எந்தப் பிரச்சனையும் உனக்கு வராது என்றும், நாம் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம். பல நேரங்களில் உணவு நம் உணர்வுகளையெல்லாம் அப்படியே மழுங்கடித்துவிடுகிறது. உணவு நமது மானம், மரியாதை, கெளரவம் எல்லாவற்றையும் விலைபேசிவிடுகிறது. உணவு வழியாகவே நம் உயிருக்கும் உலை வைக்கப்படுகிறது.

வாழ்க்கைக்கு உணவு தேவை என்பதைவிட உணவுக்காகவே வாழ வேண்டும் என்ற மலிவான சிந்தனைகளால் பலரின் உண்மை வாழ்வு உருக்குலைந்து போய்விடுகிறது. இதன் அடிப்படையில், சாத்தானும் இயேசுவின் பசியைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளப் பார்க்கிறது. ஆனால் இயேசு, மனிதரின் வாழ்வு, உணவை மையப்படுத்தி அமைவதில்லை மாறாக, இலட்சியத்தை மையப்படுத்தி அமைகிறது என்பதை எடுத்துக்காட்டி சாத்தானின் முதல் முயற்சியைத் தோற்கடிக்கின்றார். இரண்டாவது சோதனையில், சாத்தான் இயேசுவிடம் அதிகார மோகத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

பின்பு, அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், “இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்

(வசனம் 5-8).

இன்றைய உலகில் அதிகாரப் போதைதான் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. இங்கே அதிகாரத்தைப் பெற, அத்தனை அசிங்கமான காரியங்களையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டை ஆளும் தலைவர்கள் சிலர் ஹிட்லரின் வடிவமெடுக்கத்தான் செய்கிறார்கள். இன்று உலகமே உக்ரைன் நாட்டைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றது. ஒரு தனிப்பட்ட மனிதரின் அல்லது சிலரின் அதிகார மோகம், அத்தனை ஆயிரம் மக்களை இன்று அவதிக்குள்ளாக்கி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 1,50,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இதனால் புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ  6,77,000மாக உயர்ந்துள்ளது நம்மை மிகவும் கவலையடையச் செய்கிறது என்றும், புலம்பெயர்ந்தோருக்கான ஐ.நா.வின் உயர்மட்டத் தலைவர் Filippo Grandi அவர்கள் கூறியுள்ளார். கொடுங்குளிர் வாட்டிவதைக்கும் இந்நேரத்தில் மக்களும், அதிலும் குறிப்பாக, குழந்தைகளும் அனுபவித்து வருகின்ற துயரங்களும் வேதனைகளும் விவரிக்க முடியாதவை.

இன்றைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தளவில், எனக்குப் பதவி வேண்டும் அவ்வளவுதான். அதற்காக நான் எந்த எல்லைக்கும் செல்லத் தயார். எதையும் யாருக்காகவும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்ற கொள்கையற்ற நிலையைப் பார்க்கிறோம். குறிப்பாக, நம் இந்திய தேசத்தின் எல்லாவிதமான வளர்ச்சியற்ற நிலைகளுக்கும் இந்தப் பதவி மோகம்தான் அடிப்படைக் காரணமாகி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்படிப் பதவி மோகம் கொண்டிருப்பவர்களால்தான் மக்களின் நலன்கள் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றன. இன்றைய நமது துறவற வாழ்விலும் இந்தப் பதவி மோகத்திற்குப் பஞ்சமில்லை. எனக்கு அந்தப் பொறுப்பு வேண்டும், எனக்கு இந்தப் பொறுப்பு வேண்டும், நான் அந்தக் கல்லூரிக்கு முதல்வராகவேண்டும், இந்தக் கல்லூரியின் அதிபராகவேண்டும், உயர்ந்த தலைமைப் பொறுப்புகளை நான் பெறவேண்டும், அல்லது என் சாதிக்காரன் பெறவேண்டும் என்ற பதவிவெறியால் இயேசுவின் இறையாட்சிக் கொள்கைகள் இங்கே முக்கியத்துவம் பெறுவதில்லை என்பதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

மனிதத்தை சிதைத்தழிக்கும் இத்தகைய பதவி மோகத்தை சாத்தான் இயேசுவிடம் எடுத்துக்காட்டியபோது, இயேசு, தனது வழி தனி வழி என்பதை எடுத்துரைத்து, அதன் சுயநல எண்ணங்களை தவுடுபொடியாக்குகின்றார். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மார்க் 10: 44-45) என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கே நினைவுகூரத் தக்கவை.

மூன்றாவது சோதனையாக சாத்தான் இயேசுவுக்கு கொடுப்பது தற்பெருமை.

பின்னர், அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் சொல்லியுள்ளதே” என்றார். (வசனம் 9-12)

ஒரு மனிதர் கொண்டிருக்கின்ற தற்பெருமையை வைத்தே அம்மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் நாடிபிடித்துப் பார்த்துவிடலாம். தற்பெருமை உச்சம்தொடும்போது அது ஆணவமாக ஊற்றெடுக்கிறது. ஆணவம் அதிகமாகத் தலைக்கேறும்போது அம்மனிதர் அழிவுக்குள்ளாகிறார். மெல்லக் கொல்லும் நஞ்சுபோல அது மாறிவிடும். உங்களுக்கு இருக்கிற சக்திக்கு.... உங்களுக்கு இருக்கிற திறமைக்கு... உங்களுக்கு இருக்கிற அறிவுக்கு... உங்களுக்கு இருக்கிற அழகுக்கு... உங்களுக்கு இருக்கிற காசு பணத்துக்கு... நீங்க நினைத்தால் எதையும் செய்யலாம்... நீங்கள் நினைத்தால் எதையும் விலைக்கு வாங்கலாம்... இப்படியான வார்த்தைகள்தாம் ஒருவரிடம் தற்பெருமை வளர்வதற்கான காரணங்களாக அமைகின்றன. சாத்தானைப்போன்று இதனைச் சொல்லிச் சொல்லியே வளர்த்துவிடுவதற்கென்றே பலர் நம் பக்கத்தில் இருப்பார்கள். இயேசுவைப் போன்று நாம் மிகவும் கவனமாக இல்லை என்றால் நம் வாழ்வு உடைந்துபோகும்.  

சாத்தானின் தந்திரங்களை அறிந்திருந்த நமதாண்டவர் இயேசு, அதனின் தீய எண்ணங்களை உடைத்தெறிகின்றார். ஒரு மனிதர் தனது உழைப்பினால் எவ்வளவுதான் உச்சிக்குச் சென்றாலும், தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து அவ்வப்போது தன்னை சரிசெய்துகொண்டால், எப்போதும் வெற்றியின் பாதையில் செல்லலாம். இன்றைய முதல் வாசகம் இத்தகைய சிந்தனைகளைத்தான் முன்னிறுத்துகின்றது. இரண்டாவது முக்கியமான விடயம் என்னவென்றால், உயிருள்ள இறைவனின் வார்த்தையின்மீது நாம் ஆழமான நம்பிக்கைக் கொள்வது. இதனை இன்றைய இரண்டாவது வாசகம் நமக்கு அறிவுறுத்துகின்றது.

சாத்தான் எப்போதும் நல்லவன் போலத்தான் நம்மிடம் வரும். நமக்கு நல்லது செய்வது போலவே நமக்குள் நுழைந்து நம்மை ஆட்கொண்டதும், சிறிது சிறிதாக நமது வாழ்வை நீர்த்துபோகச் செய்துவிடும். இன்று நாம் காணும் மூன்று சோதனைகளிலும் இறைவார்த்தைகளைக் கொண்டே இயேசுவை தனது வலையில் சிக்கவைக்கப் பார்க்கிறது சாத்தான். இதனை நன்கறிந்த இயேசு, அதே இறைவார்த்தைகளைக் கொண்டே அச்சாத்தானை வீழ்த்துகிறார். எனவே, எனது அன்றாட வாழ்வில் நான் உடலை வளர்க்கும் உணவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறேனா? அதிகாரப் போதைக்கு அடிமையாகிறேனா? தற்பெருமையை வளர்த்துக்கொள்ள காரணமாகிறேனா? ஆகிய கேள்விகளை எழுப்பி அடிக்கடி நம்மை ஆன்ம பரிசோதனை செய்துகொண்டால்,  இயேசுவைப்போல நாமும் சாத்தானின் சோதனைகளைச் சுலபமாக வென்றுவிடலாம். அதற்கான அருளை இந்நாளில் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2022, 13:59