திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை நான்காம் கிளமென்ட்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
1265ம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தையை 4ம் கிளமென்ட் அவர்களுடன் நம் இன்றைய பயணத்தைத் தொடர்வோம். Guido Le Gros என்ற பிரபுத்துவ குடும்பத்து இளைஞர், இளவயதிலேயே துறவு வாழ்வு மீதான ஆர்வத்தை நேரடியாகக் கண்டவர். ஏனெனில், இவரின் தாய் இறந்தபோது, இவரின் தந்தை, கர்த்தூசியன் துறவு இல்லத்தில் இணைந்து துறவியானார். Guido Le Gros என்ற இளைஞரோ, திருமணம் புரிந்து பிரபுத்துவ வாழ்வு வாழ்ந்து வந்தார். பின்னர் சட்டம் பயின்று சட்ட வல்லுநராகத் திகழ்ந்தார். இரு புதல்வியரைப் பெற்றுத் தந்துவிட்டு இவரின் மனைவி காலமானபோது, இவரும் தன் தந்தையைப் போலவே, உலகச் சுகங்களைத் துறந்து, அருள்பணியாளரானார். மிக விரைவிலேயே திருஅவையில் ஆயராகவும், பேராயராகவும், கர்தினால் ஆயராகவும் உயர்ந்த குய்தோ லே கிராஸ் அவர்கள், இங்கிலாந்தில் திருஅவைப் பணி ஒன்றை முடித்துவிட்டு, பிரான்ஸ் நாட்டில் இருந்தபோது, இத்தாலியின் பெரூஜியாவில் குடியிருந்த கர்தினால்களிடமிருந்து அவசர அழைப்பு ஒன்று வந்தது. 1264ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திருத்தந்தை 4ம் உர்பான் இறந்ததைத் தொடர்ந்து 4 மாதங்கள் பெரூஜியா நகரில் கூடி விவாதித்த கர்தினால்கள், கர்தினால் ஆயர் குய்தோவை திருத்தந்தையாகத் தேர்வுச்செய்ய முடிவெடுத்து அவரை அழைத்தனர்.
கர்தினால்களின் அழைப்பை ஏற்று பெரூஜியா நகர் வந்த குய்தோ அவர்கள், இப்பொறுப்பை ஏற்கத் தயங்கினார். தன்னை விட்டுவிடுமாறு கேட்டுக் கெஞ்சினார் அவர். ஆனால், கர்தினால்களின் வற்புறுத்தலின்பேரில் அதனை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்ட கர்தினால் குய்தோ, 1265ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி, திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் எடுத்துக்கொண்ட பெயர்தான் நான்காம் கிளமென்ட் என்பதாகும். இவரின் பக்தி முயற்சிகளும், பாகுபாடற்ற அணுகுமுறைகளும் பிரபலமானவைகளாக இருந்தன. தன் உறவினர்கள் எவரும் திருப்பீடத்தில் எவ்விதச் சலுகைகளும் தேடக்கூடாது என்ற கண்டிப்பானக் கட்டளையையும் பிறப்பித்தார். தன் இரு புதல்வியரும், குய்தோ அவர்களின் மகள்கள் அன்றி, திருத்தந்தை 4ம் கிளமென்டின் மகள்கள் அல்ல என அறிவித்தார்.
இத்திருத்தந்தையின் காலத்திலும் அரசியல் குழப்பங்கள், முந்தையக் காலத்தைப்போலவே தொடர்ந்தன. சார்லஸ் மன்னர் திருத்தந்தையின் கைகளால் புனித பேதுரு பெருங்கோவிலில் முடிசூட்டப்பட விரும்பியதும் இடம்பெறவில்லை. ஏனெனில், திருத்தந்தை நான்காம் கிளமென்ட் அவர்கள், உரோமிலிருந்து ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள வித்தெர்போ நகரிலேயே தங்கிவிட்டார். அவர் உரோம் நகருக்குத் திரும்பவேயில்லை. திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட கர்தினால் கைகளாலேயே சார்ல்ஸ் மன்னர் முடிசூட்டப்பட வேண்டியதாகியது. திருத்தந்தை 4ம் கிளமென்ட் அவர்கள் திருஅவையை நல்ல முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் சென்றார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் 25 நாட்கள் பொறுப்பிலிருந்த திருத்தந்தை 4ம் கிளமென்ட் அவர்கள், 1268ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி வித்தெர்போ நகரிலேயே உயிரிழக்க, அந்நகரின் தொமினிக்கன் சபை ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
திருத்தந்தை 4ம் கிளமென்டைத் தொடர்ந்து திருத்தந்தையானவர் திருத்தந்தை 10ம் கிரகரி. திருத்தந்தை 4ம் கிளமென்டின் இறப்புக்கும், திருத்தந்தை 10ம் கிரகரியின் தேர்வுக்கும் இடையில் ஏறத்தாழ மூன்றாண்டுகள் இடைவெளி இருந்தது. ஏனெனில், வித்தெர்போவில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க கூடியிருந்த கர்தினால்கள் இரு பிரிவுகளாகச் செயல்பட்டனர். ஒரு பக்கம் இத்தாலிய கர்தினால்கள், மறுபக்கமோ, பிரான்ஸ் நாட்டு ஆதரவு கர்தினால்கள் என இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டதால் யாரை அடுத்து தேர்ந்தெடுப்பது என்பதில் இசைவு காண முடியவில்லை. இதற்கிடையில், பிரான்ஸ், மற்றும், சிசிலித் தீவின் மன்னர்கள் தலையிட்டு, கர்தினால்களை நெருக்கத்தொடங்கினர். 15 கர்தினால்கள் கூடியிருந்த அவையில், 6 பேர் தனியாக வந்து, ஒரு பொது நபரைத் தேர்ந்தெடுக்கலாம் என முடிவுசெய்தனர். 1271ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி Teobaldo Visconti என்பவரைத் தேர்வு செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர் கர்தினாலாக இருக்கவில்லை. ஏன், அவ்வேளையில், அவர் அருள்பணியாளராகக்கூட இல்லை. தேர்வு செய்யப்பட்டபோது தியோபால்தோ என்ற இந்த திருத்தொண்டர், புனித பூமிக்கு, இங்கிலாந்தின் இளவரசர் எட்வர்ட்டுடன் திருப்பயணியாகச் சென்றுகொண்டிருந்தார். இந்த திருத்தொண்டருக்கு உடனே ஆள் அனுப்பி அவரை, வித்தெர்போவுக்கு வர வைத்தனர் கர்தினால்கள். 1271ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி துவங்கிய இவரின் வித்தெர்போ நோக்கிய பயணம் 1272ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதிதான் நிறைவுற்றது. வித்தெர்போ வந்து இத்தேர்தலை ஏற்றுக்கொண்ட திருத்தொண்டர் விஸ்கோந்தி அவர்கள், திருத்தந்தை 10ம் கிரகரி என்ற பெயரையும் எடுத்துக்கொண்டார். உரோம் நகருக்கு உடனடியாக வந்த இவர், முதலில் அருள்பணியாளராகவும், பின்னர் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் திருஅவையை வழிநடத்திச் சென்றது குறித்து வரும் வாரம் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்