திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை மூன்றாம் ஹொனாரியுஸ்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இத்தாலியின் பெருஜியாவில் 1216ம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட் அவர்கள் இறைவனடிசேர்ந்தபோது, இரண்டு நாட்களுக்குப்பின் ஜூலை 18 அன்று, அதே இடத்தில் கூடிய திருஅவையின் 19 கர்தினால்கள் ஒன்றிணைந்து கர்தினால்கள் Ugolino (பின்னாளில் திருத்தந்தை 9ம் கிரகரி) விடமும், Guidoவிடமும் அடுத்த திருத்தந்தையின் பெயரைப் பரிந்துரைக்கும் பணியை ஒப்படைத்தனர். ஏற்கனவே இத்தாலியில் அரசியல் குழப்பங்கள், திருஅவையில் மோதல் பயம், திருத்தந்தையர்க்கு எதிர்ப்பு என்ற சூழல் நிலவிவந்த நிலையில், கர்தினால் Cencio Savelliயை அடுத்த திருத்தந்தையாகப் பரிந்துரைத்தனர் மூத்த கர்தினால்கள். இவரும் மிகுந்த தயக்கத்துடனேயே அப்பதவியை ஏற்றுக்கொண்டு, மூன்றாம் ஹொனாரியுஸ்(Honorius) என்ற பெயரைத் தேர்வு செய்தார். பெருஜியா நகரில் வைத்து 1216ம் ஆண்டு ஜூலை மாதம் 24ந்தேதி திருத்தந்தையாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், ஆகஸ்ட் மாதம் 31ந்தேதிதான் உரோம் நகரில் வைத்து திருத்தந்தையாக முடிசூட்டப்பட்டார். பின்னர் செப்டம்பர் மாதம் 3ந்தேதி இலாத்ரன் பசிலிக்காவின் பொறுப்பை ஏற்றார். உரோமைய மக்களுக்கு இப்படியொரு திருத்தந்தை கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் இவர் உரோம் நகரைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல, மிகவும் இரக்க குணம் உடையவராகவும் இருந்தார். மேலும் இவர், பின்னாள் பேரரசர் இரண்டாம் பிரடெரிக் (Frederick) சிறுவனாக இருந்தபோது, அவரின் ஆசிரியராகவும் இருந்தார்.
மிகவும் வயதான காலத்திலேயே பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை மூன்றாம் ஹொனாரியுஸின் முன்னிலையில், இரு முக்கிய நோக்கங்களே முதன்மையாக நின்றன. முதலில், புனித பூமியை அந்நியர்களின் கையிலிருந்து விடுவிப்பது. இரண்டாவது, திருஅவை முழுவதிலும் ஆன்மீகப் புதுப்பித்தலைக் கொணர்வது. இவ்விரண்டையும் கையாளும் விதத்தில், இவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டார். அதாவது, வலிமையில் அல்ல, மாறாக, இரக்க உணர்வு வழியாக இப்பிரச்சனைகளை அணுக முனைந்தார். சிலுவைப்போரின் தேவை குறித்து ஐரோப்பாவின் அனைத்து அரசர்களுக்கும் கடிதம் எழுதினார், திருத்தந்தை மூன்றாம் ஹொனாரியுஸ். திருத்தந்தையும் கர்தினால்களும் மூன்றாண்டுகளுக்கு தங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியையும், ஏனையத் திருஅவை அதிகாரிகள் தங்கள் வருமானத்தில் இருபதில் ஒரு பகுதியையும் சிலுவைப்போரின் செலவுகளுக்கென வழங்கவேண்டும் என ஆணைப் பிறப்பித்தார். அனைத்துக் கோவில்களிலும் சிலுவைப்போர் குறித்து போதிக்க வைத்தார். ஆனால், திருத்தந்தை நினைத்த அளவு இதில் வெற்றிகிட்டவில்லை. ஏனெனில், சிலுவைப்போருக்கான படையில் சேரும் எண்ணத்தில் வயது முதிர்ந்தோரும், மாற்றுத்திறனாளிகளும், ஏன், திருடர்களும்கூட முன்வந்து இணைந்து கொண்டனர். பொதுமக்களின் பணத்தில் இவர்கள் வேறு நகர்களுக்கு வழிநடத்திச் செல்லப்பட்டபோதுதான் உண்மை நிலைகள் வெளிவந்தன. இதற்கிடையில், ஐரோப்பாவில் அரசர்களுக்கிடையில் நடந்த மோதல்களும், சிலுவைப்போர் வெற்றியடைய தடையாக இருந்தன.
இவற்றையெல்லாம் உணர்ந்த திருத்தந்தை மூன்றாம் ஹொனாரியுஸ் அவர்கள், மன்னர் இரண்டாம் பிரடெரிக்கின் உதவியை நாடி, அவருக்கு பல சலுகைகளை வழங்கினார். பிரடெரிக்கின் மகன் ஹென்றியை உரோமையின் மன்னராக அறிவிக்கும் அளவுக்குச் சென்றார் திருத்தந்தை. 1220ம் ஆண்டில் பிரடெரிக்கை பேரரசராக அறிவித்ததும் இதனால்தான். ஆனால், திருத்தந்தை மூன்றாம் ஹொனாரியுஸின் இரக்க குணத்தையும், நன்மைத்தன்மையையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பேரரசர், திருத்தந்தையின் ஆயர் நியமனங்களில் தலையிட்டதுடன், திருஅவை சொத்துக்களிலும் கை வைக்கத் துவங்கினார். இதனால், இரு தலைவர்களிடையேயும் ஒருவித பதட்டநிலை உருவானது. இதற்கிடையில், சிலுவைப்போருக்கான தன் திட்டம் தோல்வியைத் தழுவியதைக் கண்ட திருத்தந்தை, இத்தாலிய சிற்றரசர்களிடையே அமைதியை உருவாக்கும் பணியில் கவனம் செலுத்தினார். ஆனால், உரோம் நகரிலேயே திருத்தந்தைக்கு எதிர்ப்பு வலுத்ததால், அவர் உரோமைவிட்டு வெளியேறி, முதலில் ரியேத்தி(Rieti)யிலும், பின்னர் வித்தெர்போ(Viterbo)விலும் சிறிது காலம் வாழ்ந்தார். உரோமைக்குத் திரும்பியபின், பீசா (Pisa), மற்றும் ஜெனோவா (Genova) நகர்களிடையேயும், மிலான், மற்றும் கிரெமோனா (Cremona) நகர்களிடையேயும், பொலோஞ்ஞா (Bologna), மற்றும் பிஸ்தோயா (Pistoia) நகர்களிடையேயும் அமைதியை உருவாக்க உழைத்து வெற்றிகண்டார்.
இங்கிலாந்தில் மன்னர் ஜான் இறந்தபோது எழுந்த கலகங்களை அடக்கவும், ஜானின் மகன் மூன்றாம் ஹென்றி மன்னராக முடிசூட்டப்படவும் உதவினார். ஹங்கேரி மன்னர் இரண்டாம் ஆன்ட்ரு (Andrew)வை எதிர்த்து அவர் மகன் நான்காம் பெலா (Bela) புரட்சி செய்தபோது, அவரை திருஅவையிலிருந்து நீக்கிவிடுவேன் என்று அச்சுறுத்தியே, பிரச்சனைக்குத் தீர்வுகண்டு, மன்னரைக் காப்பாற்றினார். இவர் காலத்தில், புனித தொமினிக் (Dominic), அசிசியின் புனித பிரான்சிஸ் ஆகியோரின் துறவு சபைகளின் விதிமுறைகள் ஏற்கப்பட்டு துறவு வாழ்வுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இவர், புகழ்வாய்ந்த பாரிஸ், மற்றும் பொலோஞ்ஞா பல்கலைக்கழகங்களுக்கு பல சலுகைகளை வழங்கி கல்வியை ஊக்குவித்தார். இவர் ஓர் எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
1216ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் ஹொனாரியுஸ் அவர்கள், 1227ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம்தேதி உரோம் நகரில் இறைபதம் சேர்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்