அரவணைக்கும் இறைவனின் பேரன்பு அரவணைக்கும் இறைவனின் பேரன்பு  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 30-2–சினம் தணித்து ஏற்கும் இறைவன்

அன்புநிறைந்த இறைவனின் மக்களாகிய நாமும், நம் சினம் தணித்து பிறரை ஏற்றுக்கொண்டு இறையுறவில் வாழ்வோம்.
திருப்பாடல் 30- 2

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'குணமளித்து உயிர் காக்கும் இறைவன்' என்ற தலைப்பில் திருப்பாடல் 30ல் 1 முதல் 4 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வார நமது விவிலியத்தேடலில், அதன் தொடர்ச்சியாக 5 முதல் 7 வரையுள்ள இறைவசனங்கள் குறித்து சிந்தித்துத் தியானிப்போம். இப்போது இறைவார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. நான் வளமுடன் வாழ்ந்தபோது, ‛என்னை ஒருபோதும் அசைக்க முடியாது’  என்றேன். ஆனால், ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்; உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்; நான் நிலைகலங்கிப் போனேன்.  (வசனம் 5-7).

நாம் வாசித்த இறைவார்த்தைகளில், இறைவனின் அக்கறையுள்ள சினத்தையும் அவரது கருணை நிறைந்த பேரன்பையும் குறித்துப் பாடுகிறார் தாவீது அரசர். இதனைக் குறித்து நான் சிந்திக்கும்போது, எனது சொந்த ஊரின் தொடக்கப்பள்ளியில் நான் கல்வி பயின்றுகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வுகள் எனது நினைவலைகளாக வந்து போகின்றன. அப்போது நான் மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அந்த ஓராண்டு எனது வாழ்விலும் எனது நண்பர்கள் வாழ்விலும் இன்றும் மறக்க முடியாத ஆண்டாகவே நினைவில் நிலைத்துள்ளது. அந்த ஆசிரியரின் பெயர் செபஸ்தியான். கனிவுள்ள ஆசிரியர். ஆனால், அதிகம் கண்டிப்புள்ளவர். அவர் பாடம் நடத்த தொடங்கிவிட்டாலே போதும், எப்போது மணியடிக்கும் என்று பயத்தோடு காத்திருப்போம். அப்போதெல்லாம் ஒரு வகுப்புக்கு ஓர் ஆண்டு முழுவதும் ஒரே ஆசிரியர்தான். படிக்கவில்லையென்றாலும் சரி, வீட்டுப்பாடம் செய்யவில்லையென்றாலும் சரி பிழிந்து எடுத்துவிடுவார். அவரது கணக்குப் பாடமும் தமிழ் வாசிப்புப் பயிற்சியும் மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஏன் என் பிள்ளையை அடித்தீர்கள் என்று பிள்ளைகளின் பெற்றோர் யாருமே வந்து கேட்கமாட்டார்கள். காரணம், கண்டிப்பும், பிள்ளைகளின்மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு சிறந்த ஆசிரியர் அவர் என்று அனைவருக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையை நாங்கள் நன்கு அறிந்திருந்ததால் பெற்றோரிடமும் சொல்ல மாட்டோம். ஆனால், அவர்மீது அப்படியொரு கோபத்தில் இருப்போம். இதில் குறிப்பிடும்படியான விடயம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் பள்ளி நிறைவடைவதற்கு முன்பு, அவர் யார்மீது அதிக சினம் கொண்டிருந்தாரோ அவர்களை அழைத்து, “ஏன்யா, இந்த வாத்தியாரு இவ்வளவு கண்டிப்பா இருக்கிறாரே என்று என்மேல ரொம்ப கோபமா இருக்கீங்களா..? சொல்லுங்கய்யா.. சொல்லுங்க... நான் எதுக்காக இவ்வளவு கண்டிப்பா இருக்கிறேன்? நீங்க நல்லா படிச்சு பெரிய ஆளாகி, இந்த ஊரே உங்களைப் பார்த்து பெருமைப்படுகிற அளவுக்கு நீங்க வரணுமுன்னுதானே! உங்க அம்மா அப்பாவ பாருங்க.. காட்டுலயும் மேட்டுலயும் எவ்வளவு கஷ்டப்படுறாங்க... நீங்களாவது படிச்சு முன்னேற வேண்டாமய்யா” என்று சொல்லுவார். அவர் அப்படி பேசும்போதே அவர்மீது எங்களுக்கு இருக்கும் கோபமெல்லாம் பறந்துபோய்விடும். அன்று அவர் காட்டிய கண்டிப்புதான் இன்று என் வாழ்வில் இந்த உச்சத்தைத் தொடுவதற்குக் காரணமாகி இருக்கிறது என்பதை எண்ணும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.  

கடவுளுடைய சினமும் பேரன்பும் அப்படிதான். எகிப்திலிருந்து மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை அவர் நடத்தி வந்தபோது, தங்களின் அறியாமையால் அவர்கள் எத்தனையோ தவறுகளை இழைக்கின்றனர். அப்போதெல்லாம் கடவுள் அவர்கள்மீது சினம் கொண்டாலும் சிறிது நேரத்திலேயே தனது கோபத்தைத் தணித்துக்கொண்டு அம்மக்கள்மீது இரக்கமும் கருணையும் கொள்வதைப் பார்க்கின்றோம். பொங்கி வழிந்த இறைவனின் சினம் நொடிப்பொழுதில் மறைந்தது குறித்த பதிவுகள் பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் காணக்கிடக்கின்றன. அவற்றில் ஒருசிலவற்றை இங்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்வோம். முதலாவதாக, விடுதலைப் பயண நூலில் கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளைப் பெறுவதற்காக மோசே சீனாய் மலையின்மேல் ஏறிச்செல்கின்றார். அவர் வருவதற்குத் தாமதமானதால், அவர் இனி வரமாட்டார் என்று எண்ணியவர்களாய் பொற்கன்று குட்டி ஒன்றை செய்து வழிபடத் தொடங்குகின்றனர் இஸ்ரயேல் மக்கள். அப்போது கடவுளின் கோபம் அவர்கள்மீது பொங்கி எழுகிறது.  ஆண்டவர் மோசேயிடம், “இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார். (விப 32:9-10). அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, “ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? (விப 32:11) என்று கூறி மக்களின் தவற்றிற்காகப் பரிந்து பேசுகிறார். இறுதியாக கடவுள் மனம் மாறுகிறார். அவ்வாறே, ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் (விப 32:14)

இரண்டாவது எடுத்துக்காட்டாக, நினிவே நகர் மக்களின் மனமாற்றம் நம் நினைவுக்கு வருகிறது. அந்நாட்டிலுள்ள மக்கள் மனமாற மறுத்ததால் மூன்று நாட்களில் நினிவே நகர் அழிக்கப்படும் என்ற கடவுளின் கோபச் செய்தியை இறைவாக்கினரான யோனா அறிவிக்கிறார். அவரின் வார்த்தைகளைக் கேட்ட அரசனும் மக்களும் சாக்குடை உடுத்தி சாம்பலில் அமர்ந்து தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்துகின்றனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை. (யோனா 3:10).

புத்தரின் ஆசிரமத்துக்குள் நுழைந்த ஒரு வியாபாரி அவர் கன்னத்தில் அடித்தான். தான் பாடுபட்டுச் சேர்த்த சொத்துகளை விட்டுவிட்டு, தனது குழந்தைகள் புத்தரின் ஆசிரமத்தில் சேர்ந்ததே அவனது கோபத்துக்குக் காரணம். புத்தர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். ஒரு வார்த்தையோ, ஒரு எதிர்வினையோ காட்டவில்லை. அந்த வியாபாரியோ அதிர்ச்சியுடன் வீடு திரும்பினான். அவனால் இரவு உறங்கவே முடியவில்லை. அந்த வியாபாரிக்கு அவன் இதுவரை கண்டுவந்த உலகமே தலைகீழாக மாறிவிட்டது. அடுத்த நாள் விடிந்தும் விடியாமல் ஆசிரமத்துக்குப் போனான் அந்த வியாபாரி. புத்தரிடம் நேரடியாகச் சென்று புத்தர் கன்னத்தில் அறைந்ததற்கு மன்னிப்பு கேட்டான். தன்னால் அவனை மன்னிக்கவே முடியாது என்றார் புத்தர். என்ன தவறு செய்தாய், மன்னிப்பதற்கு என்று வியாபாரியிடம் கேட்டார். முந்தின தினம் நடந்ததை வியாபாரி நினைவுகூர்ந்தார். “ஓ, அந்த நபர் இப்போது இங்கே இல்லை. நீ அடித்த நபரை நான் எப்போதாவது சந்தித்தால் அவனிடம் நீ மன்னிப்பு கேட்டதாகச் சொல்கிறேன். இப்போது இங்கேயிருக்கும் இந்த நபருக்கு எந்தத் தவறையும் நீ இழைக்கவில்லை.” என்றார் புத்தர்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது. (குறள் - 29) என்கிறார வள்ளுவர். நல்ல குணங்களை உடையவர்கள், ஆசைகளை விட்டோழித்தவர்கள், ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவருக்கு சினம் வருதல் என்பது வெகு அரிது. அப்படியே சினம் வரினும் அது ஒரு நொடிப்பொழுதிற்குமேல் தங்காது மறைந்து விடும். சான்றோர் என்பவர் தம் ஐம்புலன்களையும் அடக்கியவர்கள். ஆதலால்தான் அவர்களிடத்தில் சினம் என்ற ஒரு நல்வழிக்கு மாறான குணம் வெகுநேரம் குடிகொண்டிருக்க முடியாது என்று இக்குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.

ஒருமுறை வயதான தாய் ஒருவர் என்னைச் சந்தித்து பேசினார். அப்போது, “சாமி என் மனசு ரொம்ப பாரமா இருக்கு. ஒரே பிள்ளையென்று மிகவும் ஆசையாக வளர்த்தேன். வளர்ந்து பெரிய ஆளாக மாறியவுடன் இப்போது எல்லா தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி என்னை ரொம்பவும் வேதனைப்படுத்துறான். அவன் செய்யுற எல்லா தவறுகளையும் என்னால பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இனிமே என் முகத்திலேயே முழிக்காதே என்று தாங்கமுடியாத கோபத்துடன் திட்டி வீட்டைவிட்டு அனுப்பிட்டேன். ஒருவாரம் கழிச்சு வந்து நான் செய்ததெல்லாம் தப்புதாம்மா என்று அழுதான். என் கோபமெல்லாம்  பறந்து போயிடுச்சு சாமி. அவனை மன்னிச்சு ஏத்துக்கிட்டேன். எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் சாமி என்று சொன்னார்.

நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். (எசா 54:7-8).

மனிதர்களாகிய நாமே நமது சினத்தைத் தணித்துக்கொண்டு நம் உறவுகளையும் பிறரையும் ஏற்றுக்கொள்கிறோம் என்றால், நம்மை படைத்த கடவுள் தன் சினம் தணித்து நம்மை ஏற்காதிருப்பாரோ! அதனால்தான் தாவீது அரசர், அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு என்று பாடுகின்றார். ஆகவே அன்புநிறைந்த இறைவனின் மக்களாகிய நாமும் நம் சினம் தணித்து பிறரை ஏற்று வாழ்வோம். அதற்கான அருளை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சி மன்றாடுவோம். இத்திருப்பாடலின் மூன்றாம் பகுதியை அடுத்தவார விவிலியத் தேடலில் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2022, 12:50