2022ம் ஆண்டிற்கான ஐரோப்பா தினக்  கொண்டாட்டம் 2022ம் ஆண்டிற்கான ஐரோப்பா தினக் கொண்டாட்டம்  

ஐரோப்பிய ஐக்கியத்திற்கான பாதையில் துணையிருக்கும் திருஅவை

திருஅவை என்ற முறையில், ஐரோப்பாவின் செயல்பாடுகளில் இன்னும் அதிகமாகப் பங்கு வகிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் : கர்தினால் Jean-Claude Hollerich, SJ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மே 9, இத்திங்களன்று, ஐரோப்பா தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், கத்தோலிக்கத் திருஅவையானது உண்மையும் நேர்மையுமுள்ள தோழனாக அதனை ஒன்றினைப்பதில் தொடர்ந்து செயல்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவையின் தலைவர் கூறியுள்ளார்.

2022ம் ஆண்டிற்கான ஐரோப்பா தினத்தின் போது "ஐரோப்பிய மதிப்பீடுகளுக்குப் பிரமாணிக்கம்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு கூறியுள்ள இயேசு சபையைச் சார்ந்த கர்தினால் Jean-Claude Hollerich, SJ அவர்கள், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்தும், தொடர்ந்து நடைபெற்றுவரும் உக்ரைன் போர் குறித்தும் எடுத்துரைத்துள்ள கத்தினால் Hollerich அவர்கள், மாற்றத்திற்கான திசைகள் குறித்தும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

ஐரோப்பியர்கள் மரியாதைக்குரிய, பொறுப்பான, சமூக மற்றும் நிலையான பொருளாதாரத்தை விரும்புகிறார்கள் என்றும், திருஅவை என்ற முறையில், அதன் செயல்பாடுகளில் இன்னும் அதிகமாகப் பங்கு வகிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் Hollerich.

ஐரோப்பாவில் மீண்டும் போர் மூளும் இந்தச் சூழ்நிலையில் 2022ம் ஆண்டிற்கான ஐரோப்பிய நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது என்று கூறிய கர்தினால் Hollerich அவர்கள், இரஷ்யப் படைகளால் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்தே ஆயர்கள் இறைவேண்டல் வழியாக அமைதியை எதிர்பார்த்து வருகின்றனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

மேலும் இந்த ஐரோப்பா தினத்தில், புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்கள் மற்றும் உறுப்பு நாடுகளில் உள்ள அரசியல் தலைமையை ஊக்குவிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Hollerich

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2022, 13:35