திருமணம் எனும் அருளடையாளம் ஏற்படுத்தியுள்ள நல்மாற்றங்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Si’ திருமடலுக்குச் செயலுறு கொடுக்கும்வண்ணம், Laudato Si’ இயக்கம், காலநிலை மற்றும், சூழலியல் நீதி ஆகியவை குறித்து கத்தோலிக்க குடும்பங்களில் விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருமணம் எனும் அருளடையாளத்தைப் பெற்றதற்குப் பின்னர், தங்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள நல்மாற்றங்கள் குறித்து, ஈக்குவதோர் நாட்டு தம்பதியர் பகிர்ந்துகொண்டதை, Laudato Si’ இயக்கம், இன்ஸ்டகிராம், முகநூல் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Si’ திருமடலுக்குச் செயலுறு கொடுக்கும்வண்ணம், காலநிலை மற்றும், சூழலியல் நீதி ஆகியவை குறித்து உலக அளவில் கத்தோலிக்க குடும்பங்களில் விழிப்புணர்வை உருவாக்கிவரும் Laudato Si’ இயக்கம், பல்வேறு நாடுகளில் கத்தோலிக்கத் தம்பதியரின் சூழலியல் வாழ்வியல் பற்றி வழங்கி வருகிறது.

தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில், Giuliana Maldonado, Mateo García தம்பதியர், திருமண அருளடையாளத்தைப் பெற்றதற்குப் பின்னர், தங்களின் வாழ்வில் உண்மையான நல்மாற்றம் ஏற்பட்டது எனவும், தங்களின் பிள்ளைகளை, கடவுளின் படைப்போடு தொடர்புடைய வழிகளில் வளர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனனர்.

திருமணம் செய்துகொண்டபின்னர், உடனடியாக ஓராண்டு நியுசிலாந்து நாட்டிற்கு மறைப்பணியாற்றச் சென்றது, மெக்சிகோவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, ஆழ்நிலை தியானத் துறவிகளுடன் வாழ்ந்தது ஆகிய இரண்டிலும் நம்புவதற்கரிய அருளை தாங்கள் பெற்றதாக, அத்தம்பதியர் கூறியுள்ளனர்.

இவ்விரு இடங்களில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள், மனிதாபிமானப் பண்பில் ஆழமாகவும், உண்மையாகவும் வளரவும், உண்மையான கிறிஸ்தவராக வாழவும், கிறிஸ்தவ ஆன்மீகம், வாழ்வை வித்தியாசமாகப் புரிந்துகொள்ளப் பரிந்துரைகளை முன்வைப்பதை உணரவும் உதவின என்று அவர்கள் கூறியுள்ளனர்.  

இந்த அனுபவங்களுக்குப்பின்னர், கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன்னர் ஈக்குவதோர் நாட்டிற்குத் திரும்பிய நாங்கள், எம் வாழ்வு பற்றியும், குடும்பமாக, எம் குழந்தைகள் மற்றும், வாழ்வுக்கு எவற்றில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது பற்றியும்  மீண்டும் சிந்தித்தோம் என்றும் அத்தம்பதியர் கூறியுள்ளனர்.

இந்த அனுபவங்கள், ஆடம்பரங்களைவிட்டு எளிமையாக வாழ எம்மைத் தூண்டின என்றும், வாழ்வின் ஆழமான அர்த்தம் குறித்த புரிதலைத் தந்தன என்றும், ஈக்குவதோர் தம்பதியர் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2022, 14:08