துயருறும் நைஜீரிய மக்களுக்காக ஆயரின் இறைவேண்டல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நைஜீரியாவில் நிகழ்ந்துள்ள அதிர்ச்சி மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், நம் ஆண்டவரிடம் உதவி பெற நான் மறக்கவில்லை என்றும், புனிதமிகு நற்கருணை பேழைக்கு முன்பு சென்று, மீட்பராகிய இயேசு கிறிஸ்துவை இறுகப்பற்றிக்கொண்டு அவரின் பேருதவியாய் நாடினேன் என்றும் அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
ஜூன் 05, இஞ்ஞாயிறன்று, Owo நகரின் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் திருப்பலியில் பங்குபெற்றுக்கொண்டிருந்த கத்தோலிக்க விசுவாசிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறியுள்ளார் Ondoவின் ஆயர் Jude Arogundade
"நம்முடைய நன்மைதனத்தை தங்கள் சொந்த தீமையுடன் பொருத்த வேண்டும் என்று நினைக்கும் சிலருக்கு, நன்மை மட்டுமே எப்போதும் வெல்லும் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்றும், இருளை எப்போதும் ஒளியே வெல்லும்" என்றும் உறுதிபடக் கூறியுள்ளார் ஆயர் Arogundade.
வேதனை மற்றும் வலியின் கொடிய நிலையிலும், மக்கள் தங்கள் நம்பிக்கையில் ஒளிர்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ள ஆயர் Arogundade, இந்த இடர்பாடுகளின் மத்தியிலும் அவர்கள் இறைத்தந்தையின் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகின்றனர் என்றும், கடவுள் மட்டும் இராமல் போயிருந்தால் இந்நிலை இன்னும் கொடியதாகவே இருந்திருக்கும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இச்சூழலை வெற்றிகொள்வோம், இந்நிலையும் கடந்து போகும், என உறுதியளித்துள்ள ஆயர் Arogundade, இவ்வுலகமே பெருமைப்படும் அளவிற்கு நாங்கள் ஒரு வலுவான, சிறப்புமிக்க மற்றும் அழகான திருஅவையாக விளங்கி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஜூன் 5, இஞ்ஞாயிறன்று, நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்பு, மிகக் கொடிய வேதனையை விதைத்துள்ள இத்தாக்குதலில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும், அவர்களின் குடும்பத்தினருக்குத் தன் செபங்களையும், உடனிருப்பையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்