இறைவேண்டல் எழுப்பும் சிறுவன் இறைவேண்டல் எழுப்பும் சிறுவன்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 31-7–இறுமாப்பு நீக்கி வாழ்வோம்

உன்னதக் கடவுளிடமிருந்து நம்மை பிரித்து, மாந்தர் அனைவரிடையேயும் நம்மை எதிரியாக்கும் இறுமாப்பு என்னும் இழிவானக் குணத்தை இல்லாதொழிப்பொம்.
திருப்பாடல் 31-7

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

துறவி ஒருவர் தன் சீடரை அழைத்து ஒரு நாள் முழுவதும் அரண்மனையில் தங்கி பாடம் கற்று வருமாறுக் கூறினார். ஆசிரமத்தில் படிக்காத பாடமா அரண்மனையில் படிக்கப்போகிறோம் என்று அச்சீடர் எண்ணினாலும், குருவின் கட்டளைப்படி அவர் அரண்மனைக்குச் சென்றார். அரசர் அவரை நன்கு உபசரித்து அன்று அங்குத் தங்கிச்செல்லுமாறு கூறி அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார் ஆனால் எங்குப் பார்த்தாலும் ஆட்டமும், பாடலும், குடியுமாக இருந்தது அச்சீடருக்கு அருவருப்பாக இருந்தது. ஆனாலும் மனத்தைக் கட்டுப்படுத்தி படுத்து உறங்கினார். அதிகாலையில் அரண்மனையின் பின்புறம் செல்லும் நதியில் குளித்து வர அரசர் அச்சீடரை அழைத்தார். சீடரும் அரசரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அரண்மனையில் தீப்பற்றியது. அதை அரசர் சீடரிடம் காண்பித்தார். உடனே சீடர் அவசரமாகக் குளிப்பதை விடுத்து, தன் கோவணம் எரிந்து விடாமல் காக்க வேண்டி ஓடினார்.  கோவணத்தைக் கையில் எடுத்தபின் திரும்பிப் பார்த்தால் அரசர் இன்னும் ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்தார். அரண்மனை பற்றி எரியும் நிலையில் அரசர் அதுகுறித்து சிறிதும் கவலைப்படாமல் இருக்கும்போது தான் மட்டும் கோவணத்திற்காக ஓடி வந்ததை எண்ணி தலை கவிழ்ந்தார் சீடர். அரசரின் காலில் விழுந்து, “எப்படி உங்களால் பதட்டப்படாமல் இருக்க முடிந்தது” என்று கேட்டார். அதற்கு அரசர் ''இந்த அரண்மனை என்னுடையது என்று நினைத்திருந்தால் நான் இங்கே நின்றிருக்க மாட்டேன். இது ஒரு அரண்மனை. நான், நான்தான். அரண்மனை எப்படி என்னுடையதாகும்? நான் பிறக்காத போதும் இந்த அரண்மனை இங்குதான் இருந்தது. நான் இறந்த பின்னும் அது இங்குதான் இருக்கும். இது எப்படி என்னுடையதாகும்? கோவணம் உங்களுடையது என்றும், அரண்மனை என்னுடையது என்றும் கருதியதால் நீங்கள் அதைப் பின்பற்றி ஓடினீர்கள். நான் அவ்வாறு கருதாததால் ஓடவில்லை.'' தங்களின் உலக மனப்பாங்கினால்தான் மனிதர் கடவுளை விடுத்து இவ்வுலகப் பொருள்களைப் பற்றிக்கொள்கின்றனர். இதற்கு எதிராகத் தன்னை படைத்த கடவுள்மீது பற்றுறுதி கொள்ளும்போதுதான் மனிதர் முழு  விடுதலை பெறமுடியும் என்றார் மன்னர்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில் 31ம் திருப்பாடலில் 19 முதல் 22 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வார நமது விவிலியத் தேடலில் 23, 24 ஆகிய இரு இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வருவோம். இப்போது, அவ்வார்த்தைகளை இறையொளியில் வாசிக்கக் கேட்போம்.

"ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்" (வசனம் 23-24).

இந்த இரண்டு இறைவசனங்களிலும் தாவீது அரசர் அன்பு, பற்றுறுதி, இறுமாப்பு ஆகிய மூன்று முக்கிய காரியங்கள் குறித்துப் பேசுகின்றார். மிக முக்கியமாகத் தன்னை பழிதீர்க்கத் துடிக்கும் சவுல் மன்னரின் இறுமாப்பு குறித்து இத்திருப்பாடல் முழுவதும் அதிகமாகவே பேசி இருக்கிறார். சவுல் மன்னரிடம் விளங்கிய அதிகார வெறி, இறுமாப்பு, கடவுளுக்கு எதிரான செயல்பாடுகள் ஆகியவைகள்தாம் அவரின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் என்பதை நாம் அறிய வருகிறோம். ஆனால், இவ்வுலகப் பொருள்கள்மீது பற்றுறுதி கொள்ளாமல் கடவுளிடம் பற்றுறுதி கொள்கின்றார் தாவீது அரசர். கடவுள் மீதான பற்றுறுதி மட்டும்தான் மனிதரின் ஆன்ம ஈடேற்றத்திற்குப் பெரிதும் துணைபுரியும். கடவுள்மீது நாம் கொள்ளும் உண்மையான அன்பானது நம்மை அவர்மீதான ஆழமான பற்றுறுதிக்குக் கொண்டு செல்கிறது. இவை இரண்டிற்கும் நேரெதிராக அமைவது இறுமாப்பு. இந்த இறுமாப்பு நம் ஆதிப்பெற்றோரிடம் தொடங்குகிறது. இறுமாப்பு என்பது நிலைவாழ்வுக்கு முற்றிலும் எதிரானது. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் ஆன்மிக வெள்ளத்திற்கு அணைபோடக்கூடியது. இறுமாப்பு பல நேரங்களில் ஆன்மிகத் திமிராகவும் மாறிவிடும் பேராபத்து உள்ளது.  

இறுமாப்பு கொள்பவர்கள் அழிந்துபோகிறார்கள் என்பதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக அமைவது நாபோத்தின் திராட்சை தோட்ட நிகழ்வில் வரும் ஈசபேலின் செயல். இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அதனை அபகரித்துக்கொள்வதற்காக  நாபோத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறான் ஆகாபு. அவன் நாபோத்திடம், “உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகிலிருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்து விடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்” என்றான். அதற்கு நாபோத்து ஆகாபிடம், “என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!” என்றான் (1அர 21:1-3). நாபோத்தின் பதில் அவனை பெரிதும் வருத்தமடையச் செய்கிறது. இதை அறிந்த அவனது மனைவி, சதித்திட்டம் தீட்டி வஞ்சகமாய் நாபோத்தை கொன்றுவிட்டு அவ்விடத்தை அரசனுக்குப் பெற்றுக்கொடுக்கிறாள். இச்சம்பவத்திற்குப் பிறகு இறைவாக்கினர் எலியா உரைத்தவாறு இருவருமே கொல்லப்படுகின்றனர். குறிப்பாக நாபோத்தை பொய்யான தெய்வநிந்தனைக்கு உட்படுத்தி படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய ஈசபேலின் மரணம் மிகக் கொடியதாக அமைகிறது (2 அரச 30-37). இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும் (நீமொ 11:2) என்றும், இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி (நீமொ 16:5) என்றும் கூறகிறது நீதிமொழிகள் புத்தகம். லூக்கா நற்செய்தியில் இயேசு கூறும் பரிசேயரும் வரிதண்டுவோரும் என்ற உவமையில் பரிசேயரின் இறைவேண்டலில் தலைவிரித்தாடும் இறுமாப்பைப் பார்க்கிறோம். பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன் (லூக் 18:11,12).

அறிவிலும் செல்வத்திலும் வலிமையிலும் தனக்கு இணையாக எவரும் இல்லை என்று இறுமாப்பு கொண்டிருந்தார் ஒரு மன்னர். அவரைத் திருத்த அறிஞர்கள் பலரும் முயன்று தோல்வியடைந்தனர். மன்னர் தன் பிறந்தநாளில் தன் அரண்மனையைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஊர்வலம்வரப் பல்லக்கில் புறப்பட்டார். அப்போது ஒர் அறிஞர் பிச்சைக்காரரைப் போல் வேடம் பூண்டு, தன் கையில் செல்லாக் காசு  ஒன்றை வைத்துக்கொண்டு, “இவ்வரசர் என்னிலும் பணக்காரரல்ல; இவ்வரசர் என்னிலும் பணக்காரர்ல்ல” என்று கூவிக்கொண்டே இருந்தார். மன்னரின் காவலர்கள் அவரைத் தாக்க முயன்றனர். இதுகண்ட மன்னர் அவரை அடிக்க வேண்டாம் என்று தடுத்து, ‘அந்தக் காசைப் பிடுங்கிக் கொண்டு அவனை விரட்டிவிடுங்கள். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும்’ என்று கட்டளையிட்டார். காவலர்கள் அவ்வாறே செய்தனர். பல்லக்கு தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்தது. பிச்சைக்காரன் அங்கும் வந்து நின்று கொண்டு, “என்னிலும் ஏழையான மன்னர் என் காசைப் பிடுங்கிக் கொண்டார். என்னிலும் ஏழையான மன்னர் என் காசைப் பிடுங்கிக்கொண்டார்” என்று உரத்துக் கூவினான். அதுகண்ட மன்னர், தன் காவலர்களிடம், “முன்பு அவன் தன்னைவிடப் பணக்காரணல்ல என்றுதான் சொன்னான். இப்போது தன்னைவிட ஏழை என்று என்னைச் சொல்லுகிறான். இது என் செல்வத்தையே பழித்துக் காட்டுவதாக இருக்கிறது. போனால் போகிறான் காசை அவனிடம் கொடுத்து விரட்டுங்கள்” என்று கூறினார். காவலர்களும் அப்படியே செய்தனர். பல்லக்கு மேல வீதியில் வந்தது. அங்கு வந்தும் நின்று கொண்டிருந்த அப்பிச்சைக்காரன், “மன்னர் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டார். மன்னர் எனக்குப் பயந்து காசைக் கொடுத்துவிட்டார்” என்று உரக்கக் கூவிக் கொண்டிருந்தான்.  

அதிகம் கோபமடைந்த மன்னர், அவனைக் கொல்ல தன் வில்லையும் அம்பையும் எடுத்தார். பிச்சைக்காரன் ஒடி மறைந்தான். பல்லக்கு வடக்கு வீதியில் வந்தது, மீண்டும் அங்கு வந்து நின்று கொண்டிருந்த பிச்சைக்காரன். “கோழையான மன்னர் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறார். கோழையான மன்னர் ஆயுதமில்லாத என்னோடு சண்டைக்கு வருகிறார்” என்று அலறிக் கொண்டேயிருந்தான். காவலர்கள் அவனைப் பிடித்துத் துன்புறுத்த முயன்றனர். மன்னர் அவர்களைத் தடுத்து, “அவர் பிச்சைக்காரரல்ல அறிஞர்.  அறிவிலும், செல்வத்திலும், வீரத்திலும் எனக்கு இணை எவருமில்லை என்ற என் இறுமாப்பை அழித்தொழித்த பேரறிஞர் இவரே” எனப் பாராட்டி அவருக்குப் பொருளுதவியும் அளித்து அனுப்பி வைத்தார் மன்னர்.

இக்கதையில் வரும் மன்னரைப் போன்றே சவுல் மன்னரும் கடவுள் பற்றுவிடுத்து பொருள்செல்வத்தின்மீதும், அறிவுச்செல்வத்தின்மீதும் பற்றுகொண்டு அதிகார போதையில் வாழ்ந்திருக்கிறார். அதனால்தான் கடவுள்மீது பற்றுறுதி கொண்டிருந்த தாவீதை வதைத்தொழிக்கவும், கொன்று பழிதீர்க்கவும் வழிதேடி அலைந்திருகிறார். ஆகவே, நமது வாழ்விலும் இந்த இறுமாப்பு குறித்து மிகவும் கவனமாக இருப்போம். உன்னதக் கடவுளிடமிருந்து நம்மை பிரித்து, மாந்தர் அனைவரிடையேயும் நம்மை எதிரியாக்கும் இறுமாப்பு என்னும் இழிவானக் குணத்தை இல்லாதொழிப்போம். காலம் முழுவதும் நம்மைக் கண்மணியாய்க் காக்கும் கடவுளிடம் பற்றுறுதி கொள்வோம். அதற்கான அருளை ஆண்டவரிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2022, 11:17