தாவீது காலத்து பழைய எருசலேம் நகர் இன்று தாவீது காலத்து பழைய எருசலேம் நகர் இன்று  

விவிலியத் தேடல்:தி.பா.32-கடவுளால் மன்னிக்கப்படுபவர் பேறுபெற்றவர்

தாவீதைப் போன்று நாம் புரிந்த கடும் பாவச்செயல்களுக்காக மனமுடைந்து கதறியழும்போது நாமும் கடவுளால் மன்னித்து, ஏற்றுக்கொள்ளப்பட்டு பேறுபெற்றவர்கள் ஆகிறோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

விவிலியத் தேடல்: திருப்பாடல் 32-கடவுளால் மன்னிக்கப்படுபவர்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் 31ம் திருப்பாடலில் 23, 24 ஆகிய இரு இறைவசனங்கள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வந்தோம். இவ்வார விவிலியத் தேடலில் 32வது திருப்பாடல் குறித்துத் தியானிப்போம். ‘பாவ அறிக்கையும் மன்னிப்பும்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் ‘தாவீதின் அறப்பாடல்’ என்று அழைக்கப்படுகிறது. தாவீது தான் புரிந்த பாவத்திற்காக மன்னிப்பு வேண்டும் விதமாக இத்திருப்பாடல் முழுவதும் அமைந்துள்ளது. இத்திருப்பாடல் பாவத்தின் கொடிய இயல்பையும், மன்னிப்புப் பெறுவதன் மகத்துவத்தையும் எடுத்தியம்புகிறது. இத்திருப்பாடல் மொத்தம் 11 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இவ்வாரம் 1 முதல் 5 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைவார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின. ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது; கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று. ‛என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர் (வசனம் 1-5)

Sin is missing the mark அதாவது, இலக்கைத் தவறவிடுவது பாவம் என்று சொல்லுவார்கள். கடவுளை அறிந்து அன்பு செய்து அவருக்குப் பணி செய்து வாழ்வதற்கே நாம் அனைவரும் படைக்கப்பட்டுள்ளோம். இதுதான் நமது இலக்கு. இதற்கு எதிராக நாம் செயல்படும்போது நாம் பாவம் புரிகின்றோம். “அணுகுண்டு வெடிக்கும்போது ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து நான் அஞ்சவில்லை. ஆனால் பாவத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்துதான் நான் அதிகம் அஞ்சுகிறேன்” என்று கூறினார் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன். பாவம் அந்தளவுக்குப் பேராபத்தினை விளைவிக்கக் கூடியது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். வட இந்தியாவில் குரங்குகளைப் பிடிப்பதற்கு ஒரு சிறந்த வழியைக் கடைபிடிக்கிறார்கள். அதாவது, கூண்டிற்குள் குரங்கு கையை நுழைக்கும் அளவிற்கு ஒரு சிறிய துவாரத்தை ஏற்படுத்தி அதற்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைத்துவிடுவார்கள். குரங்கு கையை உள்ளே நுழைத்து அந்த ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொண்டு கையை வெளியே இழுக்கும். ஆனால் அக்குரங்கால் அதனை வெளிய எடுக்கவும் முடியாது, அதேவேளையில் அந்த ஆப்பிள் பழத்தை விடவும் செய்யாது. அந்நிலையில் இலாவகமாக குரங்கினைப் பிடித்துவிடுவார்கள். பாவத்தின் மொத்த உருவான சாத்தான் இப்படித்தான் மனிதர்களைத் தனது பாவம் என்னும் மாய வலையில் வீழ்த்துகின்றான். நம் ஆதிப்பெற்றோர் வழியாக இவ்வுலகில் நுழைந்த பாவம் இன்றுவரை மனிதர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருக்கின்றது.

வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு மனிதர், வேலை தேடி பெருநகரத்திற்கு வந்து மளிகை கடையில் பொட்டலம் மடித்தும் உணவகத்தில் மேசை துடைத்தும் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். மிகச்சிறிய முதலீட்டில் ஓடாத ஒரு பழைய உணவகத்தை வாடகைக்கு எடுத்து, தான் விரும்பிய தெய்வத்தின் பெயரையே அந்த உணவகத்திற்கு வைத்து முதன்முதலாக உணவகத் தொழிலுக்குள் இறங்கினார். தன்னுடைய அயராத உழைப்பினாலும் சுவையான, தரமான உணவினாலும் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்களைத் திறந்து, பல கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட உணவு நிறுவனமாக அதை மாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை மனிதராக வலம் வந்த அந்தப்பெரிய மனிதர், உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தன்னுடைய முதுமையை நோய்நொடியோடு சிறையில் கழிக்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒரு பெண்ணின் மீதான பேராசைதான் அவரின் இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குக் காரணம்! அடுத்தவர் மனைவி என்று தெரிந்தும் அப்பெண்மீது மீது ஆசைப்பட்டது, அவரை அடைய முயற்சி செய்தது, அந்த முயற்சிக்குத் தடையாக இருந்த அப்பெண்ணின் கணவரைக் கொன்றது என அவருடைய பாவத்தின் கணக்கு அதிகரித்துக்கொண்டே போனது.

படிப்பறிவு இல்லாத ஒரு சாதாரண மனிதர் உழைப்பால் முன்னேற வேண்டும் என்று நினைத்து அயராது உழைத்தபோது கடவுள் அவருக்குத் துணையிருந்தார். அவருடைய உண்மையான உழைப்புக்கு அருளையும் ஆசீர்வாதங்களையும் வாரி வழங்கினார். அதனாலேயே அந்தச் சாதாரண மனிதர் மென்மேலும் உயர்ந்து சாதனைகள் பல படைத்து சிகரத்தின் உயரத்தைத் தொட்டார். எப்போது அவருடைய பார்வை அடுத்தவர் மனைவி மீது விழுந்ததோ அப்போதே அவருக்கான பாவக் கணக்குகளும் தொடங்கிவிட்டன. கடவுளும் அவரைவிட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டார். அதன்பின் அவர் செய்த அடுத்தடுத்த பாவங்களுக்கான தண்டனைகள் அதிகமாகி, அவருடைய குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும், மிகப்பெரிய அவப்பெயர் உண்டானது.  இந்த மனிதரா இப்படி? என்று எல்லோருமே கேவலமாகப் பேசும் அளவுக்கு அத்தனை மரியாதையும் சரிந்து அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டார். அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம் பெண்ணாசை! அதுவும் பிறர் மனைவி மீதான ஆசை! தான் ஒழுக்கம் தவறுவதோடு அடுத்த பெண்ணையும் ஒழுக்கம் தவற நிர்பந்தித்து, அல்லது அவரையும் தூண்டி தவறான பாதைக்கு இழுப்பது என்பது மன்னிக்க முடியாத பாவம்!

அன்பானவர்களே, கடவுளால் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டு, அவராலேயே அனைத்து அருள்செல்வங்களும் பொருள் செல்வங்களும் வாரி வழங்கப்பட்டு உன்னதமான நிலையில் வாழ்ந்தவர் தாவீது அரசர். ஆனால் அவர் பிறன்மனை நோக்கியதால் கடவுளின் கோபத்திற்கு ஆளானார். அதாவது, தனது போர் தளபதி உரியாவின் மனைவியான பெத்சபாவை தனது மனைவியாக்கிக்கொண்டார். அதை மறைப்பதற்காக உரியாவை வஞ்சகமாய் போர் முனையில் நிற்கவைத்து மடியச் செய்தார். அதனைத் தொடர்ந்து இறைவாக்கினர் நாத்தான் வழியாக அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதன் விளைவாக தன் சொந்த மகனையே இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் தாவீது அரசர்.

கடவுள் வெறுத்தொதுக்கும் 7 பாவச் செயல்கள் பற்றி எடுத்துரைக்கிறது நீதிமொழிகள் புத்தகம். (நீமொ 6:16-19). இவற்றில் இறுமாப்புள்ள பார்வை, குற்றமில்லாரைக் கொல்லும் கை, சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால் ஆகிய பாவச் செயல்களை தாவீது அரசர் அரங்கேற்றியிருக்கிறார் என்பது அவரது வாழ்வைப் படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தாவீது அரசர், தனது பாவத்தின் தன்மையை உணர்ந்து வருந்தி, கடவுள்முன் அமர்ந்து அவற்றுக்காக மனமுடைந்து அழுதபோது, கடவுள் அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். இப்படிப்பட்ட கொடிய பாவத்தை கடவுள் மன்னித்ததால், தன்னை மிகவும் பேறுபெற்றவராகக் கருதி மகிழ்கிறார் தாவீது. இதன் காரணமாகத்தான் “எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர் என்கிறார். மேலும், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர் என்கிறார் தாவீது (திபா 51:3,4). இதைத்தான், லூக்கா நற்செய்தியில் வரும் காணாமல்போன மகனின் உவமையிலும் காண்கின்றோம். இளைய மகன் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ (லூக் 15: 20-21) என்று கூறி மனம்வெதும்பி அழுதபோது அந்த அன்புத் தந்தை அவரை நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொள்கின்றார்.

நமது இந்திய தேசத்தில் அருளாளராக அறிவிக்கப்பட்டுள்ள அருள்சகோதரி இராணி மரியாவை அவர் பயணம் செய்த பேருந்திலேயே அவரை 52 முறை கத்தியால் குத்திக்கொன்ற கொலையாளி சமந்தர் சிங். இப்போது அச்சகோதரியின் குடும்பத்தினரால் மன்னித்து மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அருளாளர் இராணி மரியாவின் கல்லறையில் அமர்ந்துகொண்டு அவர் விரைவில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட வேண்டுமென்று இப்போது இடைவிடாது இறைவேண்டல் செய்துகொண்டிருக்கிறார் சமந்தர் சிங். இப்படிப்பட்ட நிலையில்தான், கடவுளால் மன்னிக்கப்படுபவர்கள் பேறுபெற்றவர்கள் என்கிறார் தாவீது. ஆகவே, தாவீதைப் போன்று நாம் புரிந்துள்ள கடும் பாவச்செயல்களுக்காக மனமுடைந்து கதறியழும்போது நாமும் கடவுளால் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்பட்டு பேறுபெற்றவர்களாகிறோம். இத்தகைய இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2022, 09:03