ஆலயத் தாக்குதலுக்கு, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் கண்டனம்
மேரி தெரேசா: வத்திக்கான்
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஜூன் 05, இஞ்ஞாயிறன்று ஆலயத்தில் திருவழிபாட்டில் பங்குபெற்றுக்கொண்டிருந்த கத்தோலிக்கர் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருப்பது குறித்து, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும், அரசு அதிகாரிகளும் தங்களின் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்துள்ள அந்நாட்டு கர்தினால் John Onaiyekan அவர்கள், Owoவின் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
நைஜீரியாவில் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த சட்ட ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துவதில் அரசின் திறமையின்மையைக் குறைகூறியுள்ளதோடு, குற்றவாளிகள் முறையான தண்டனைகளிலிருந்து விலக்கீடு பெற்று வருவது குறித்த கவலையையும் தெரிவித்துள்ளார், கர்தினால் Onaiyekan.
அந்நாட்டில் அமைதியான நல்லிணக்கத்திற்கு பல்சமய உரையாடலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திக் கூறியுள்ள கர்தினால் Onaiyekan அவர்கள், அந்நாட்டில் இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றும், இஞ்ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நல்லுறவுகள் ஏற்படுவதற்கு, திருஅவை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இத்தகைய வன்முறைகள் ஒருபோதும் உதவாது, இருந்தபோதிலும், தலத்திருஅவை தன் பல்சமய உரையாடல் பணியைத் தொடர்ந்து நடத்தும் என்றும், தன் பேட்டியில் உறுதியளித்துள்ளார், கர்தினால் Onaiyekan.
இக்குற்றவாளிகளை, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எதிர்கொள்வதே, இவ்வன்முறைப் பிரச்சனைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் எனவும், இவ்வன்முறையை தடுத்து நிறுத்துவதில் அரசின்மீது நம்பிக்கை இல்லை எனவும், கர்தினால் John Onaiyekan அவர்கள் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஐம்பதுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கரைக் காவுகொண்டுள்ள இப்பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜீரிய அரசும், அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்