அரசி எலிசபெத்துக்காக செபிக்கும் அந்நாட்டு ஆயர் பேரவை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இங்கிலாந்து அரசியாக எழுபது ஆண்டுகளை நிறைவு செய்யும் இரண்டாம் எலிசபெத் அரசியின் பவள விழாவைக் கொண்டாட இங்கிலாந்து அரசு தயாராகிவரும் நிலையில், அவருக்காக சிறப்பு செபத்தை உருவாக்கியுள்ளது அந்நாட்டு ஆயர்பேரவை.
“எங்கள் அரசி எலிசபெத்துக்காக நாங்கள் செபிக்கிறோம்; கடவுளின் உறுதியான அன்பை அறிந்து, அவர் தொடர்ந்து தன் மக்களுக்கு உண்மையாகப் பணியாற்றட்டும்” என்ற இவ்விழாவிற்கென சிறப்பு செபத்தை உருவாக்கியுள்ளது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் கத்தோலிக்க ஆயர் பேரவை.
ஜூன் 5, ஞாயிறன்று, இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலுள்ள ஒவ்வொரு பங்கிலும் நடைபெறும் அனைத்துத் திருப்பலிகளிலும், அரசியின் பவள விழாவைக் குறிக்கும் வகையில், அவருக்காக இறைவேண்டல் செய்யவேண்டும் என்றும் இங்கிலாந்து ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்துப் பங்குத் தளங்களும், “ஓ கடவுளே, எங்கள் எலிசபெத் அரசியைக் காப்பாற்றுங்கள், நாங்கள் குரலெழுப்பி அழைக்கும் நாளில் எங்களுக்கு செவிசாய்த்தருளும்!” என்ற இலத்தின் கீதத்தையோ அல்லது “ஓ கடவுளே, எங்கள் அரசியைக் காப்பாற்றுங்கள்” என்ற இங்கிலாந்தின் தேசிய கீதத்தையோ பாடலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது அந்நாட்டின் ஆயர் பேரவை.
அரசி எலிசபெத் தனது தந்தை, மன்னர் 6ம் ஜார்ஜின் மரணத்திற்குப் பிறகு,1952ம் ஆண்டு, பிப்ரவரி 6ம் தேதியன்று, தனது 25வது வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றார். 70 ஆண்டுகள் அரியணையில் அமர்ந்து தொடர்ந்து ஆட்சி செய்த முதல் பிரித்தானிய அரசி இவர் மட்டும்தான். இரண்டாம் எலிசபெத்தின் கொள்ளுப் பாட்டியான அரசி விக்டோரியா, 63 ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்