காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்  

நாம் அனைவரும் ஒரே இறைத்தந்தையின் குழந்தைகள்

கடவுளின் அன்புக்குச் சாட்சிகளாய் அழைக்கப்பட்டுள்ள நாம், ஒன்றிணைந்த நிலையில் மனித மாண்பைக் காக்கவேண்டியது அவசியத் தேவையாகிறது : அருள்பணியாளர் Andrew Abayomi.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடவுள் எம்மோடு இருக்கிறார்; எங்கள் நம்பிக்கை உயிரோட்டமுள்ளதாய் இருக்கின்றது என்று நைஜீரியாவில் நிகழ்ந்துள்ள பயங்கவாதிகளின் தாக்குதல் குறித்து தனது கருத்தைப் பதிவுசெய்துள்ளார் அந்நாட்டின் அருள்பணியாளர் ஒருவர்.

ஜூன் 05, இஞ்ஞாயிறன்று, Owo நகரின் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு பற்றி கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு கூறிய இவ்வாலயத்தின் துணை பங்குத் தந்தை Andrew Abayomi, இது வேறு எங்கோ நடைபெறவேண்டிய ஒன்று, ஆனால், இன்று எங்களுக்கு நிகழ்ந்துள்ளது என்று கவலையுடன் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களைச் சந்திப்பதிலும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதிலும், அவர்களின் துயரங்களைப் பகிர்ந்துகொள்வதிலும், அவர்களின் இறைநம்பிக்கையை ஊக்குவிப்பதிலும் தாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Andrew Abayomi.

அன்பு, அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம், ஆகிய விழுமியங்களுக்குத் தாங்கள் தொடர்ந்து சாட்சிகளாய்  இருக்கிறோம் என்று விளக்கிய  அருள்பணியாளர் Andrew Abayomi, உண்மையில் நாம் அனைவரும் ஒரே இறைத்தந்தையின் குழந்தைகளாகவும்,  அவரின் ஒரே படைப்புகளாகவும் இருக்கின்றோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இனம், கலாச்சாரம் மற்றும் நிறத்தால் நாம் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒரே இறைத்தந்தையால் நாம் படைக்கப்பட்டு, அவரால் இந்த உலகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளோம் என்ற உண்மையை மக்கள் புரிந்துகொள்ள்ளும் வகையில் தாங்கள் தொடர்ந்து நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் உறுதிபடக் கூறியுள்ளார் அருள்பணியாளர் Andrew Abayomi.

பயங்கவாதிகள் நிகழ்த்தியுள்ள இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறார் உட்பட, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2022, 14:27