திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 12ம் பெனடிக்ட்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் வானொலி
நம் காலத்தில், அதுவும், 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி, வத்திக்கான் நாடு உருவாக்கப்பட்ட நினைவு நாளில், அதாவது புனித லூர்தன்னை திருவிழாவன்று தன் பதவி விலகலை அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் என்பது நாம் அறிந்ததே. ஒரு திருத்தந்தை பதவி விலகுவது ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்குப்பின் (1415, 12ம் கிரகரி) அப்போதுதான் இடம்பெற்றது. இந்த திருத்தந்தை 16ம் பெனடிக்டிற்கு முன்னர் இதே பெயரில் இருந்துள்ள 15 திருத்தந்தையர்களுள் இன்று நாம் 12ம் பெனடிக்ட் குறித்து நோக்க உள்ளோம்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இத்திருத்தந்தை 12ம் பெனடிக்டின் இயற்பெயர் Jacques Fournier என்பதாகும். இவர் இளம்வயதிலேயே சிஸ்டர்சியன் துறவுமடத்தில் இணைந்து துறவியானார். அத்துறவுமடத்தின் அதிபராக இவரின் நெருங்கிய உறவினர் அர்னால்டு நொவெல்லி என்பவர் இருந்தார். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற Fournier அவர்கள், இவரின் உறவினர் நொவெல்லி கர்தினாலானபோது, அவரின் இடத்தில் Fontfroideயின் சிஸ்டர்சன் இல்ல அதிபராக நியமிக்கப்பட்டார். 1317ல் ஆயராகவும், 1327 டிசம்பர் 18ல் திருத்தந்தை 22ம் யோவானால் கர்தினாலாகவும் அறிவிக்கப்பட்டார், பின்னாளைய திருத்தந்தையான Fournier. இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் கொஞ்சம் சுவராஷ்யமானது. ஏனெனில், இவருக்கு கர்தினால்களின் ஆதரவு இல்லாமல் இருந்தது. இது குறித்து கொஞ்சம் பார்ப்போம்.
1334ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி திருத்தந்தை 22ம் யோவான் இறைபதம் சேர்ந்தபின், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடிய கர்தினால்கள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் திருத்தந்தை, பிரான்சின் அவிஞ்ஞோன்லேயே இருக்கவேண்டும், உரோம் நகருக்கு திரும்பிச் செல்லக்கூடாது என்பதில் குறியாக இருந்தனர். இதற்கு பிரான்ஸ் மன்னரின் ஆதரவும் இருந்தது. இந்தக் கர்தினால்களிடையே அடுத்த திருத்தந்தையாக வருவதற்கு வாய்ப்பிருந்த கர்தினால் De Comminges என்பவரை அணுகிய கர்தினால்கள், அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், உரோம் நகருக்குத் திரும்பமாட்டார் என வாக்குறுதியளிக்கும்படி வேண்டினர். ஆனால் அவரோ, அந்த கட்டுப்பாட்டை ஏற்க மறுத்தார். எனவே, வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் கர்தினால்களுக்கு ஏற்பட்டது. கர்தினால் Fournier ஒரு கல்விமானாகவும், மதிப்புடையவராகவும் இருந்தாலும், அவருக்கென பெருத்த ஆதரவு இருக்கவில்லை. இருப்பினும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1335ம் ஆண்டு சனவரி மாதம் 8ம் தேதி 12ம் பெனடிக்ட் என்ற பெயருடன் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக்கொண்டார் கர்தினால் Fournier.
திருத்தந்தை என்பவர் பிரான்சில்தான் இருக்கவேண்டும், உரோம் நகருக்குத் திரும்பக்கூடாது என்பது பிரான்ஸ் கர்தினால்களின் எண்ணமாக இருந்தபோதிலும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நம் புது திருத்தந்தை, திருஅவை தலைமைப்பீடத்தை உரோம் நகருக்கு மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயலாற்றத் துவக்கினார். உரோம் நகரின் புனித பேதுரு பெருங்கோவிலையும், இலாத்தரன் பெருங்கோவிலையும் சீரமைக்கும் பணிகளுக்கென நிதியுதவிகளை அனுப்பிவைத்தார். உரோம் நகரிலிருந்துவந்த பிரதிநிதிகள் குழுவுடன் அவிஞ்ஞோன் நகரிலுள்ள திருஅவை தலைமைப்பீட அதிகாரிகளும் உரோமைக்குச் செல்லவேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார். ஆனால், அடிக்கடி மோதல்களைச் சந்தித்துவரும் உரோம் நகருக்கு தாங்கள் இடம்பெயர விரும்பவில்லை என கர்தினால்கள் தீர்மானமாகக் கூறியதால் திருத்தந்தை 12ம் பெனடிக்ட் அவர்களின் இந்த எண்ணம் கைகூடவில்லை. இந்நிலையில், உரோம் நகருக்குச் செல்ல விரும்பவில்லையென்றாலும், இத்தாலியின் Bologna நகரிலாவது தலைமைப்பீடத்தை வைத்துக்கொள்வோம் என முன்மொழிந்து பார்த்தார் திருத்தந்தை. ஆனால், கர்தினால்கள் கீழ்ப்படிய மறுக்கும் அபாயம் இருந்ததால், அவிஞ்ஞோனிலேயே இருந்துகொண்டு 1339ம் ஆண்டில் திருத்தந்தையர்க்கென ஒரு மாபெரும் கோட்டையைக் கட்டத் துவக்கினார் திருத்தந்தை 12ம் பெனடிக்ட். அது இன்றும் உள்ளது.
திருத்தந்தை 12ம் பெனடிக்டின் எண்ணமெல்லாம் உரோம் நகரிலேயே இருந்ததால் அடிக்கடி அந்நகர் மக்களுக்கு நிதியுதவி செய்துவந்தார். பல கோவில்கள் சீரமைக்கப்பட உதவினார். விதிமீறல்களை அவர் எப்போதும் சகித்துக்கொண்டதில்லை. சிஸ்டர்சியன் துறவியான இவர், துறவுமட வாழ்வின் சீரமைப்புக்களில் அதிகக் கவனம் செலுத்தினார். திருஅவைக்கு எதிரான தவறான படிப்பினைகளை வன்மையாகக் கண்டித்தார். இருப்பினும் தவறான படிப்பினைகளைப் பரப்ப முயன்றவர்களை தண்டிக்காமல், அவர்களுக்கு ஒரு தந்தைக்குரிய பாசத்துடன் அன்புகாட்டி அவர்களைத் திருத்த முனைந்தார். பிரிந்திருந்த கிழக்கு வழிபாட்டுமுறை திருஅவையை உரோமையத் திருஅவையுடன் இணைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் திருத்தந்தை 12ம் பெனடிக்ட். திருஅவை விவகாரங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கமுடிந்த இந்த திருத்தந்தையால், அரசியல் விவகாரங்களைப் பொறுத்தவரையில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் அவ்வளவு தீர்மானமாக நிற்கமுடியவில்லை. இதனால் இவரின் பல முடிவுகளில் பிரான்ஸ் மன்னர் ஆறாம் பிலிப்பின் தாக்கமும் தலையீடும் இருந்ததை இவரால் தவிர்க்க முடியவில்லை. இந்த மன்னர்தான், திருத்தந்தை 12ம் பெனடிக்டின் உரோம் நகர் திரும்புவதற்கான ஆர்வத்தை முடக்கியவர்.
திருத்தந்தை 22ம் யோவானால் திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்ட பவேரியா மன்னர் லூயியுடன் சமாதானமாகச் செல்லவி ரும்பிய இத்திருத்தந்தையின் விருப்பமும் பிரான்ஸ் மன்னரால் தடை செய்யப்பட்டது. இவ்வாறு, அரசியல் விவகாரங்களில் திருத்தந்தை 12ம் பெனடிக்ட் எடுத்த முயற்சிகள் பல வீணாயின. பிரான்ஸ் மன்னர் 6ம் பிலிப், சுயநலமாகச் செயல்பட்டு, திருத்தந்தையின் நல்முயற்சிகளுக்குத் தடைவிதித்ததோடு, அவரை ஏமாற்றவும் செய்தார் என வரலாறு கூறுகிறது.
அரசியல் விவகாரங்களில் திருத்தந்தை 12ம் பெனடிக்ட் தோல்வி கண்டாலும் அவர் ஒரு பக்திமானாக, அமைதியையும் நீதியையும் நேசிப்பவராக, நிர்வாகத்திறனில் உறுதியுடைவராக, திருவை விதிகளையும் ஒழுக்கரீதிகளையும் சீரமைப்பவராக, தனிப்பட்டமுறையில் சிறந்த பண்புடையவராக இருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை. இத்திருத்தந்தை 12ம் பெனடிக்ட், பிரான்சின் Avignon நகரில் 1342ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.
அன்பு நேயர்களே, இத்திருத்தந்தை 12ம் பெனடிக்ட் அவர்கள் திருஅவையை வழிநடத்திச் சென்றபின், பத்தாண்டுகள் இவ்வுலகில் திருஅவையை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை 6ம் கிளமெண்ட் குறித்து வரும் வாரம் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்