பொதுக் காலம் 13ம் ஞாயிறு பொதுக் காலம் 13ம் ஞாயிறு  

பொதுக் காலம் 13ம் ஞாயிறு : இறைவனின் அழைப்பை உடனே ஏற்போம்!

இறைவன் நம்மை அழைக்கும்போது அவ்வழைப்பை உடனே ஏற்று, உவகையுடன் பணியாற்றி, உன்னத இறைவனின் உண்மைச் சீடர்களாவோம்.
ஞாயிறு சிந்தனை 260622

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I.  1 அர 19: 16b,19-21   II. கலா 5: 1,13-18   III. லூக்  9: 51-62)

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் வியக்கத்தக்க சம்பவம் ஒன்று நடந்தது. பணக்கார இளைஞன் ஒருவன் தீடீரென்று சைன மதத்தைத் தழுவினான். இவ்விளைஞனின் தந்தை மிகப்பெரிய பணக்காரர். பல வியாபார நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். அவரின் ஒரே மகனான இவ்விளைஞன் இத்தகைய முடிவை எடுத்தபோது, முதலில் அவர் சற்று தயங்கினாலும் பின்னர் மகனின் விருப்பத்தை மதித்து ஏற்றுக்கொண்டார். அவ்விளைஞனும் நன்கு படித்தவன் என்பதோடு பல நிறுவனங்களில் தணிக்கையாளராகப் பணியாற்றி வந்தவர். அவர் வீட்டிலிருந்து ஒப்பனை செய்யப்பட்ட ஒரு பெரிய வாகனத்தில் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ அந்த சைன மடத்தில் கொண்டுவந்து விடப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு, “இவ்வளவு பெரிய பணக்காரரான நீங்கள் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தீர்கள்” என்று அவரைக் கேட்டபோது, “இந்தப் பணமெல்லாம் மனிதருக்கு எப்போதும் உதவாது என்பதை உணர்ந்துகொண்ட அந்த நேரம்தான் துறவறத்தைத் தழுவவேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்தேன்” என்று ஒற்றை வரியில் பதிலிறுப்பு செய்துவிட்டு அந்த மடத்திற்குள் சென்றுவிட்டார் அந்த இளைஞர்.

இன்று பொதுக் காலத்தின் 13ம் ஞாயிறைத் தொடங்குகிறோம். கடவுள் நம்மை அழைக்கும் தருணத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாம் அவரைப் பின்பற்றவேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்துகின்றன இன்றைய வாசகங்கள்.  முதல் வாசகத்தில் ஏர்பூட்டி நிலத்தை உழுதுகொண்டிருந்த எலிசாவை இறைவாக்கினர் எலியா அழைத்தபோது, அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடனே அவரைப் பின்பற்றிச் சென்றார் என்று வாசிக்கின்றோம். அதிலும் குறிப்பாக, தனது உழவுத்தொழிலுக்கு மூலதனமாக விளங்கிய மாடுகளை அந்தக் கலப்பையைக் கொண்டே எரித்து உணவு சமைத்து அனைவருக்கும் படைத்துவிட்டு கடவுள் பணியை ஏற்க செல்வதை அறிய முடிகிறது.

கடவுள் ஆபிரகாமை அழைத்தபோது அவர் மறுப்பேதும் சொல்லாமல் அவர் காட்டிய பாதையில் பயணிக்கத் தொடங்கினர். ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.  உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார் (தொநூ 12:1-4). அவ்வாறே இறைவாக்கினர் எசாயாவும் இதோ வருகின்றேன் என்று கூறி முன் வருகின்றார். மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும் என்றேன்” (எசா 6:8). சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவை இயேசு அழைத்தபோது அவர் ஆண்டவரைப் பின்பற்றிச் செல்கின்றார். இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார் (மத் 9:9).  

கெனசரேத்து ஏரியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சீமோனையும், செபதேயுவின் மக்களான யாக்கோபையும் யோவானையும் இயேசு அழைத்தபோது, அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள் என்று வாசிக்கின்றோம். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள் (லூக் 5:11). ஆனால், இன்றைய நற்செய்தியில் வரும் நிகழ்வில் இதற்கு நேர்மாறாக அமைகின்றது. அதாவது, மூன்று காரியங்கள் நமக்குக் கொடுக்கப்படுகின்றன. முதலாவதாக, நிச்சயமற்ற நிலை: “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்று கூறிய இளைஞனிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்று இயேசு கூறியபோது அவர் போய்விடுகிறார். ஆக, இயேசுவின் உண்மைச் சீடனாக வேண்டுமென்றால் முதலில் எவ்வித நிச்சயமற்ற சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, இயேசுவே முதன்மை: இயேசு மற்றொருவரை நோக்கி,  “என்னைப் பின்பற்றிவாரும்”  என்று அழைத்தபோது அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்கிறார். சீடத்துவ வாழ்வில் இயேசுவே முதன்மை என்று முடிவு செய்த பிறகு சாக்குப் போக்கு சொல்வதற்கெல்லாம் இடமிருக்கக் கூடாது. ஆப்பிரிக்க நாட்டில் அமெரிக்காவிலிருந்து வந்த மறைபோதகர் ஒருவர் ஒரு கிராமத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடன் அமெரிக்காவில் ஒன்றாகப் படித்த அவருடைய நண்பர் ஒருவர், அவரைச் சந்திப்பதற்காக அக்கிராமத்திற்கு வந்தார். அலைந்து திரிந்து ஒருவழியாகத் தன் நண்பர் மறைபணியாற்றும் இடத்தைக் தேடிக் கண்டுபிடித்து வந்துவிட்டார். வந்தவருக்கு ஒரே ஆச்சரியம். காரணம், அம்மறைபணியாளரின் இல்லத்தின் கதவுகள் சேதப்படுத்தப்பட்டிருந்துடன், கண்ணாடி சன்னல்களும் உடைந்துபோயிருந்தன. அவ்விடம் பார்ப்பதற்கே மிகவும் அலங்கோலமாகக் காட்சியளித்தது. இதுகுறித்து அவர் சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவருடைய நண்பரான மறைபணியாளர் வெளியே வந்து அவரை அன்புடன் வரவேற்றார். உள்ளே சென்றதும் இதற்கான காரணத்தை முதலில் கேட்டார். அதற்கு அந்த மறைபணியாளர், "இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் அவ்வப்போது இங்கே நடைபெறுவது வழக்கம். சிலர் வந்து, சப்தமிட்டு என்னைத் திட்டுவார்கள்,  இன்னும் சிலர் வந்து என்னை அமெரிக்காவிற்குத் திரும்பப் போகச்சொல்லி மிரட்டுவார்கள். வேறு சிலர் வந்து வெறிகொண்டு கதவுகளையும் கண்ணாடி சன்னல்களையும் உடைப்பார்கள். ஆனால், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டுதான் இப்பகுதி மக்களுக்கு நான் மறைபணியாற்றி வருகிறேன்” என்றார். அதற்கு அவருடைய நண்பர், “இதற்கு, நீங்கள் அமெரிக்காவிலே தங்கி அங்கேயே மறைபணியாற்றி இருக்கலாமே!” என்றார். அப்போது அம்மறைபணியாளர், “இயேசுவே என் வாழ்வின் முதன்மை என்றானபிறகு, அவருக்காக, நான் எவ்வித நிச்சயமற்ற சூழலையும் தாங்கிக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் பழகிக்கொண்டேன்” என்றார்.

மூன்றாவதாக, சிதறாத கவனம்: மூன்றாவது நபர், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்று கூறியபோது, இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல”  என்கிறார். ஒரு உண்மையான துறவி இயேசுவின்மீது முழுக் கவனத்தையும் பதித்த பிறகு,  தந்தை, தாய், உற்றார், உறவினர் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. இயேசு இங்கே கலப்பையை எடுத்துகாட்டாகக் கூறுகின்றார். இது ஒவ்வொரு விவசாயிக்கும் வாழ்வளிக்கும் கருவி, நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது விடுமுறை நாள்களில் வயலில் உழுதுகொண்டிருந்த என் மூத்த சகோதரருக்கு மதிய உணவு எடுத்துச் செல்வேன். அப்போது, “நேரமாகிவிட்டது சாப்பிட வாருங்கள்” என்று அழைத்தால், “கொஞ்சம் பொறு, இதோ வந்துவிடுகிறேன்” என்பார். அவர் அப்படி சொன்னாலும் உடனே வரமாட்டார், தாமதமாகத்தான் வருவார். அதாவது, மதிய உணவிற்கு முன்பு எந்தெந்தப் பகுதிகளையெல்லாம் உழுது முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தாரோ அவற்றை முழுவதுமாக உழுதுமுடித்துவிட்டுதான் வருவார். அவர் சாப்பிட வந்தவுடன் இதுகுறித்து கேட்கும்போது, “கலப்பையில் கைவைத்த பிறகு சாப்பாட்டைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படக் கூடாது. நாம் உழுது முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டதை முடித்துவிட்டுதான் வரவேண்டும்” என்பார். பெரும்பாலும் எல்லா விவசாயிகளும் இப்படிப்பட்ட மனநிலையோடுதான் செயல்படுவார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஊனியல்பு மற்றும் தூய ஆவி குறித்து பேசுகிறார் புனித பவுலடியார். அதாவது, ஊனியல்பு என்பது தீய ஆவிக்குரியது. ஊனியல்புக்கு உரியதாக 15 காரியங்களைப் பட்டியலிடுகின்றார் புனித பவுலடியார். "ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும் (கலா 5:19-21). ஊனியல்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இறைவனின் அழைப்பைப் பெறமுடியாது என்பதோடு மட்டுமன்றி, அவர்கள் இறையாட்சியில் பங்குபெறமுடியாது என்பதையும் எச்சரிக்கின்றார் புனித பவுலடியார்.  அதேவேளையில், தூய ஆவிக்குரிய செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வோர் இறையழைத்தலையும், இறையாட்சிக்கான உரிமையையும் பெறுகின்றனர் என்று கூறும் அவர், தூய ஆவிக்குரிய கனிகளாக 9 காரியங்களைச் சுட்டிக்காட்டுகின்றார். தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். (கலா 5:22,23).

துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவன், "ஐயா நான் தங்களின் சீடனாக விரும்புகிறேன்” என்றான். ஆற்றிலிருந்து எழுந்த துறவி, ”ஏன்?” என்று கேட்டார். அதற்கு அவ்விளைஞன், ”நான் கடவுளை அறிய விரும்புகிறேன்” என்றான். சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான். கடைசியாகத் துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக்கொண்டு பெருமூச்செறிந்தான். “நீ நீரினுள் மூழ்கி இருக்கும்போது உனக்கு என்ன தேவைப்பட்டது?” என்று கேட்டார் துறவி. ”காற்று” என்றான் அவ்விளைஞன். ”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா. உன்னை என் சீடனாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.

கடவுள் மட்டுமே எனது வாழ்வின் மையமாக வேண்டும் என்ற எண்ணம் நம்மில் மேலோங்கும்போதுதான் நாம் துறவு வாழ்வின் மேன்மையை உணரமுடியும். இன்றைய துறவற வாழ்வில் பலரின் நிலை கவலைப்படுவதற்குரியதாய் இருப்பதற்கு அடிப்படை காரணம், ஆன்மிகத்தில் அவர்கள் ஆழமில்லாமல் இருப்பதுதான். மண்ணில் ஆழமாக வேரூன்றியுள்ள எந்தவொரு பெரிய மரத்தையும் கொடுங்காற்றோ, பெருமழையோ, புயல்வெள்ளமோ அவ்வளவு சுலபமாகக் கீழே சாய்த்துவிட முடியாது. அவ்வாறே,  கடவுளின் அன்பில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ள எந்தவொரு சீடரையும் இவ்வுலகக் காரியங்கள் வீழ்த்திவிட முடியாது என்பதை உணர்வோம். ஆகவே இறைவன் நம்மை அழைக்கும்போது எவ்வித சாக்குபோக்கும் சொல்லாமல் அவ்வழைப்பை உடனே ஏற்றுக்கொண்டு, உவகையுடன் பணியாற்றி, உன்னத இறைவனின் உண்மைச் சீடர்களாவோம். அதற்கான அருளை இந்நாளில் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2022, 14:44