மணிப்பூர் கத்தோலிக்க பள்ளிக் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் கைது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எங்களுக்கு எதிரிகளோ அல்லது யாருடனும் தவறான புரிதலோ இல்லாத நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்தக் குண்டுவெடிப்பு எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்று அம்மாநிலத்தின் அருள்பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலமான மணிப்பூரின் தலைநகர் இம்பாலிலுள்ள கத்தோலிக்கப் பள்ளியான சிறுமலர் பள்ளியில் ஜூன் 5, ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகப் பேசியபோது இவ்வாறு கூறிய இம்பால் உயர் மறைமாவட்டத்தின் வேந்தர் அருள்பணி Solomon Thezii, தலத் திருஅவையால் நடத்தப்படும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் வேறுபாடின்றி அனைவருக்கும் பணியாற்றி வருகின்றன என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜூன் 7, இச்செவ்வாயன்று, 46 வயது நிரம்பிய தூணோஜம் ரிஷி லுவாங்சா, என்பவர் இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, இம்பால் மேற்கு காவல்துறை கண்காணிப்பாளர் சிவகாந்த சிங் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இம்பால் உயர் மறைமாவட்டம் மற்றும் மணிப்பூர் கத்தோலிக்கக் கல்விச் சங்கம் ஆகிய இரண்டும் இணைந்து அழைப்பு விடுத்ததன் பெயரில், இக்குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் முழுவதுமுள்ள கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் ஜூன் 7, இச்செவ்வாயன்று மூடப்பட்டன என்று யூக்கா செய்தி தெரிவிக்கிறது.
இந்த ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் அமைதியான வழியில் நடத்தப்பட்டது என்றும், இதில் கலந்துகொண்ட ஆசிரியர்களும், மாணவர்களும், அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் வன்முறையற்ற இடங்களாக உருவாக்க அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர் என்றும் இக்கல்விச் சங்க அமைப்பின் இயக்குநர் அருள்பணியாளர் Stephen Touthang யூக்கா செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், யாரும் காயம் அடையவில்லை என்றாலும், பள்ளிக் கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உட்பட சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மணிப்பூரின் மக்கள்தொகையில் 41.29 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்