இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடும் மக்கள் இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடும் மக்கள்  

தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு இலங்கைக்கு உதவி

பொருளாதாரத்தில் மோசமான மேலாண்மை மற்றும் பரவலான ஊழல் காரணமாக இலங்கை கடுமையான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தலத்திருஅவையின் பணிகளைப் அதிகம் பாதித்துள்ளது என்று ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பிறரன்பு அமைப்பிடம் கூறியுள்ளார் கண்டியின் ஆயர் Valence Mendis

இலங்கையில் அருள்பணியாளர்களும், துறவறத்தாரும் வாழ்வதற்குப் போராடும் நிலையில்,  அவர்களுக்கு அவசரகால உதவியாக 3,79,89,075 ரூபாயை கொடுத்து உதவ முன்வந்துள்ள ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பிறரன்பு அமைப்பிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஆயர் Mendis.  

மேலும், தலத்திருஅவை தனது சொந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கே மிகவும் சிரமப்படுவதாகவும், உதவிகேட்டு வரும் பொதுநிலையினருக்கு உதவ முடியாத நிலையில் இருப்பதாகவும் ACN அமைப்பிடம் தெரிவித்துள்ளார் ஆயர்  Mendis.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளஅ நிலையில், தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பிறரன்பு அமைப்பு வழங்கியுள்ள இவ்வுதவியை, அருள்பணியாளர்களும் துறவறத்தாரும் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்றும் கூறியுள்ளது இவ்வமைப்பு.   

இது அருள்தந்தையர்களின் திருப்பலி கருத்துகளுக்கான உதவியை உள்ளடக்கியதுடன், அந்நாட்டில் அத்தியாவசிய மேய்ப்புப் பணிகளை மேற்கொள்ளும் பல்வேறு சபைகளைச் சார்ந்த இருபால் துறவியர் அனைவருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றும் ACN என்ற பிறரன்பு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.  

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியால் மோசமான பொதுக் கடனுடன், இலங்கையில் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் 2019-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டன என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2022, 12:31