நேர்மையாளரான புனித யோசேப்பு நேர்மையாளரான புனித யோசேப்பு  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 33-1-நீதிமான்களாய் நிலைத்திருப்போம்

நீதிமான்களாகிய நேர்மையாளர்களே இறைவனுக்குப் புகழ் இசைக்கும் இனியவர்களாய் வாழும் தகுதி பெறுகிறார்கள்
திருப்பாடல் 33-1

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'பொல்லார் நிலையிலிருந்து நல்லார் நிலைக்கு...!' என்ற தலைப்பில் 32-வது திருப்பாடலில் 9, 10 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வார விவிலியத் தேடலில் 33-வது திருப்பாடல் குறித்துத் தியானிப்போம். ‘புகழ்ச்சிப் பாடல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 22 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. தாவீது அரசர் தான் சிறுவனாக இருந்தபோதும் சரி, அரசராக ஆட்சி செய்தபோதும் சரி, இறைவனைப் பாடிப் புகழ்வதைத் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். இத்திருப்பாடலில், இவ்வுலகைப் படைத்தளித்ததற்காகவும், தனது உருவில் மானிடரை உருவாக்கியதற்காகவும், நீதியான வழிகளையும், நேர்மையான வாக்குகளையும், நம்பிக்கைக்குரிய செயல்களையும் கொண்டு, தான் படைத்த மானிடரை வழிநடத்துவதற்காகவும் இறைவனைப்  புகழ்ந்தேத்துகிறார் தாவீது அரசர். இறைபுகழ்ச்சியோடு தொடங்கி, கடவுள்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள்மீது அவர்தம் பேரன்பு என்றும் இருக்கவேண்டுமென விண்ணப்பித்து இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார். இப்போது 1 முதல் 5 வரையுள்ள இறைவசனங்களைத் தியானிப்பதற்கு நாம் எடுத்துக்கொள்வோம். இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; புத்தம்புது  பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது (வச. 1-5)

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தன்னுடைய சீடர்களுடன் ஒரு ஊருக்குப் போதிக்கச் சென்றார். அப்போது அவர்களுக்குக் கடுமையான பசியும் தாகமும் ஏற்பட்டது. அத்துடன்  கடுங்குளிரும் அவர்களை வாட்டி வதைத்தது அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி உணவும், நீரும், போர்வையும் தரும்படி வேண்டினர். அந்தக் கிராம மக்களோ இவர்களைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தினர். அவர்கள் கேட்ட எதுவுமே அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அன்று இரவு முழுவதும் அவர்கள் பசியிலும், தாகத்திலும், குளிரிலும் தவித்தனர். மறுநாள் காலையில் அந்தக் கிராமத்தை விட்டு விடியற்காலையிலேயே அவர்கள் கிளம்பினர். அப்போது குருநானக், ”எல்லாவற்றையும் அறிந்திருக்கக் கூடிய சகல வல்லமைப் படைத்த கடவுளே! இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்!” என்று அவர்களுக்காக இறைவேண்டல் செய்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த சீடர்களின் மனம் கொதித்தது. “ஈவு, இரக்கம், மனிதாபிமானம், தர்ம சிந்தனை ஆகிய எதுவும் இல்லாத இந்தக் கிராம மக்களுக்காக இப்படிப்பட்ட ஒரு இறைவேண்டல் தேவையா?’ “ஏன் இப்படிச் செய்தார் நம் குரு?’ என்று மனதிற்குள் புழுங்கினர். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. குருவிடம் கேட்கலாமா, வேண்டாமா என்றும் தெரியவில்லை!

அவர்கள் அங்கிருந்து நடக்கத் தொடங்கினர். அன்றைய தினம் மாலையில் அதேபோல மற்றொரு கிராமத்தை அடைந்தனர். அதற்குள் சீடர்கள் பலருக்கும் பசிக் கிறுகிறுப்பு காதை அடைத்தது. “இங்கு என்ன நிலைமையோ?’ என்ற பதைபதைப்புடன் இருந்தனர் அவர்கள். அந்தக் கிராம மக்கள் குருநானக்கையும், அவருடைய சீடர்களையும் மிகவும் அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்குப் போதிய உணவும், தண்ணீரும், தங்குவதற்கு இடமும் கொடுத்து உதவினர். பசியாறிய அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு குருநானக்கின் போதனைகளைக் கேட்க ஊர் மக்கள் ஒன்றுதிரண்டனர். குருநானக் மிக அழகிய முறையில் அவர்களுக்குப்  போதித்தார். சீடர்கள் பெருமிதம் அடைந்தனர். ”இது நல்லவர்கள் வாழும் பூமி, சிறந்த கிராமம்?” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

மறுநாள் காலை அந்தக் கிராமத்திலிருந்து அனைவரும் புறப்பட்டனர். குருநானக் அந்தக் கிராமத்து மக்களுக்காக இறைவேண்டல் செய்தார். ”எல்லாரையும் அறிந்திருக்கின்ற கடவுளே! இந்தக் கிராமத்தில் வாழும் மக்களுக்காக நான் வேண்டுகிறேன். இந்தக் கிராமத்தில் வாழக் கூடிய மக்கள் அனைவரும், இக்கிராமத்தை விட்டுத் தனித்தனியாகப் பிரிந்து பல்வேறு திசைகளுக்கும் போய்விட வேண்டும்!. அதற்குத் தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்.” என்று வேண்டினார். இதனால் சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். “ஏன் இப்படி வேண்டுதல் செய்கிறார் குரு… இது நியாயமா? முந்தைய கிராமத்தில் இவர் வேண்டியது ஆசீர்வாதம். இப்போது வேண்டுவது ஆசீர்வாதமல்ல; சாபம். ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாக இறைவேண்டல் செய்கிறார் நம் குரு!” இதைக் கேட்டுவிட வேண்டும்!” என்று எண்ணினர். ஆயினும் அவரிடம் கேட்க யாருக்குமே துணிவு இல்லை. அப்போது சீடர்களின் மனநிலையை அறிந்த குரு, “அன்பு நிறைந்தவர்களே, என் வேண்டுதல் உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை என்னால் அறிய முடிகிறது. அறநெறிகளைக் கடைப்பிடிக்காத முந்தையக் கிராமத்தில் உள்ள மக்கள், வேறு ஒரு இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தையும் கெடுத்துவிடுவர். ஆகவேதான், அவர்கள் அந்தக் கிராமத்திலேயே இருக்கவேண்டும். வெளியேறிவிடக் கூடாது என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்தக் கிராம மக்களோ, தெய்வ பக்தியும், அறநெறியும், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவும் வாழ்கின்றனர். எல்லோரையும் மதிக்கத் தெரிந்தவர்களாகவும், விருந்தினர்களை நன்றாக வரவேற்று உபசரிப்பவர்களாகவும் திகழ்கின்றனர். இப்படிப்பட்ட இவர்கள் இங்கேயே இருப்பதைவிட பல்வேறு ஊர்கள், நகரங்கள், நாடுகள் என எங்கும் பரவிச் செல்லவேண்டும். அப்போதுதான் எல்லாருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பர். இவர்களைப் பார்த்து எல்லோரும் நன்மை செய்யவும் கற்றுக்கொள்வர். இதற்காகத்தான் அவ்வாறு இறைவனிடம் வேண்டினேன்” என்று கூறினார்.

நாம் வாசித்த இத்திருப்பாடலின் முதல் 5 இறைவசனங்களில் நேரிய மனதுடன் வாழும் நல்லவர்களான நீதிமான்களை மட்டுமே இறைவனைப் புகழ்ந்தேத்த அழைக்கிறார் தாவீது அரசர். நீதிமான்களை நாம் நேர்மையாளர்கள் என்றும் அழைக்கலாம். காரணம், அவர்கள் தங்களைப் படைத்த கடவுளுக்குப் பயந்து மனசாட்சியின்படி அனைவரையும் நேசித்து, எல்லாருக்கும் எப்போதும் நன்மையை மட்டுமே செய்யக் கூடியவர்கள். அதேவேளையில், தீயவர்களால் தங்களுக்குத் தீமைகள் ஏற்படும்போது, அவற்றைத் தாழ்ந்த உள்ளத்துடன் தாங்கிக்கொள்ளக் கூடியவர்கள். அவர்களுக்குத் திரும்பவும் அதேதீமையை செய்ய விரும்பாதவர்கள். எந்நிலையிலும் கடவுள்மீது பிரமாணிக்கம் தவறாதவர்கள். தங்களுக்கு ஏற்படும் தீமைகளைக் குறித்து எப்போதும் கடவுளிடம் முறையீடு செய்யாதவர்கள். ஆண்டவருக்காகவும், அவர்மீது கொண்ட பேரன்பிற்காகவும் அனைத்தையும் அமைந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள். இறுதியில் இவர்களே வெற்றிவாகை சூடுவர்.

இதற்குத் திருவிவிலியத்தில் பல்வேறு நபர்களை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். இப்போது, நான்கு நபர்களை நம் நினைவுக்குக் கொணர்வோம். முதலாவது, பழைய ஏற்பாட்டில் வரும் நோவா. தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார் (தொநூ 6:9). நோவா வாழ்ந்த நகரில் எல்லாரும் பாவிகளாக வாழ்ந்த நிலையில், அவர் மட்டும் நீதிமானாக வாழ்கிறார். அதனால்தான் பெருவெள்ளத்தின்போது, அவரும் அவர் குடும்பத்தாரும் கடவுளால் காப்பாற்றப்படுகின்றனர். இரண்டாவதாக வருபவர் யோபு. இப்புத்தகத்தின் தொடக்கத்திலேயே இவருடைய நேர்மை குறித்த பண்பு எடுத்துக்காட்டப்படுகிறது. ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார் (யோபு 1:1). இறுதிவரை கடவுள்மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையில் சிறிதளவும் குறையாமல் நடந்துகொண்டார் என்பதை யோபுவின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மூன்றாவதாக, புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பு. இறைத்திட்டத்திற்கு அடிபணிந்து, அன்னை மரியாவின் நற்பெயருக்கு எவ்வித களங்கமும் ஏற்பட்டுவிடாமல், நேரிய உள்ளத்துடன் அவரைத் தனது அன்பு மனைவியாக ஏற்றுக்கொண்டவர் உத்தமரான புனித யோசேப்பு. இதைத்தான், அவர் (மரியாவின்) கணவர் யோசேப்பு நேர்மையாளர் (மத் 1:19) என்றும், யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார் (மத் 1:24) என்றும், யோசேப்பின் நேரிய மனம் குறித்து மத்தேயு எடுத்துரைக்கின்றார். நான்காவதாக, நமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து. தனது வாழ்வு முழுதும் தன்னை அனுப்பிய இறைத்தந்தைக்கு நம்பிக்கைக்குரிய மகனாக வாழ்ந்தார். இறைத்தந்தையின் மீதும், மானிட இனத்தின்மீதும் கொண்ட பேரன்பினால் அனைத்து பாடுகளையும் அவர் தாங்கிக்கொண்டு ஒரு நேர்மையாளாராக வாழ்ந்தார். “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், “இவர் உண்மையாகவே நேர்மையாளர்” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் (லூக் 23: 46-47) என்று புனித லூக்கா நற்செய்தி எடுத்துரைக்கின்றது.

ஆகவே, நோவா, யோபு, யோசேப்பு மற்றும் நமதாண்டவர் இயேசுவைப் போல நாமும் எல்லாருக்கும் நன்மை செய்யும், எல்லாரையும் வாழவைக்கும், இறைவனுக்கு மட்டுமே பிரமாணிக்கமாய் வாழும் நீதிமான்களாய் செழித்து வளர்வோம். இதைத்தான் குருநானக்கின் வாழ்வும் நமக்கு எடுத்துரைக்கிறது. எப்போதும் நீதிமான்களாகிய நேர்மையாளர்களே இறைவனுக்குப் புகழ் இசைக்கும் இனியவர்களாய் வாழும் தகுதி பெறுகிறார்கள். ஆகவே, நீதிமான்களாய் நித்தமும் வாழ்வதற்கான அருளை வழங்கிட இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2022, 13:53