கீவ் பேராயர் SVIATOSLAV SHEVCHUK கீவ் பேராயர் SVIATOSLAV SHEVCHUK  

140 நாட்களை எட்டிய உக்ரைன்- இரஷ்யா போர்

மக்களைப் படுகொலை செய்யும் இரஷ்ய இராணுவத்திடமிருந்து தங்கள் நாட்டைப் பாதுகாக்க 140 நாட்களாகப் போராடும் உக்ரைன் ராணுவம்

மெரினா ராஜ் வத்திக்கான்

தங்கள் மண்ணில் நுழைந்த ஆக்கிரமிப்பாளர்களான இரஷ்ய இராணுவத்தை எதிர்த்து தொடர்ந்து 140 நாட்களாக போராடி வரும் உக்ரைனின் நிலம் கடந்த நாட்களில் மீண்டும் அதிர்ந்து, இரத்தம் சிந்தி, பெண்களின் அழுகுரல்களோடு காணப்பட்டது மிகவும் வருத்தத்தை அளிப்பதாக கீவ் பேராயர் கூறியுள்ளார்.

ஜூலை 13 இப்புதனன்று உக்ரைன் மக்களுக்கு  செய்தி அளித்த  அந்நாட்டு கிரேக்க கத்தோலிக்க தலைவரான கீவ் பேராயர் SVIATOSLAV SHEVCHUK அவர்கள், கடந்த நாட்களைப் போலவே தாக்குதல்கள் இப்போது தீவிரம் அடைந்தாலும், பல மடங்கு ஆயுதங்களை வைத்திருக்கும் இரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் இராணுவம் துணிச்சலோடு தங்களது வீரத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தி, மக்களின் உயிர்களைக் காப்பாற்றி வருவதற்கு தன் நன்றியையும் வெளியிட்டார்.

கிறிஸ்தவ ஞானத்தால் வழிநடத்தப்படும் உக்ரைன் மக்கள், இப்போரினால் செபிக்க, துணிந்து போராட, நிலைத்து நிற்க, துன்ப நிலையிலிருந்து மீண்டுவர கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்த பேராயர் SHEVCHUK அவர்கள், மூன்று வகையான கோபங்களிலிருந்தும் இப்போர்க்காலங்களில் மக்கள் மீண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தனக்குள் இருந்து தன்னை அழிக்கும் கோபம், வெளியிலிருந்து உறவுகளை அழிக்கும் கோபம், நீண்ட நாட்களாக தங்கியிருந்து வாழ்வை அழிக்கும் கோபம் ஆகிய மூன்று வகை கோபங்களிலிருந்து விடுபட, மென்மை, அமைதி, பொறுமை ஆகியவற்றைக் கடைபிடித்து வாழவேண்டும் என்று கூறியுள்ள கீவ் பேராயர், உக்ரைனுக்காக, அதாவது, உக்ரைன் மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் உக்ரைன் இராணுவத்திற்காக தான் தொடர்ந்து செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.    

   

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2022, 13:30