மரண தண்டனைக்கு எதிர்ப்பு  மரண தண்டனைக்கு எதிர்ப்பு  

மரண தண்டனை இரத்துசெய்யப்படுவதற்கு மதத் தலைவர்கள் அழைப்பு

தென் கொரியாவில் இடம்பெறும் குற்றங்களுக்கு அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, முரண்பாடுகளை அகற்றுவதன் மூலம், தவறுகள் நடக்காதவாறு தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தென் கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும், குற்றங்களை ஒழிப்பதற்கு உதவாது என்று, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை உட்பட, பல்சமயக் குழுக்கள் கூறியுள்ளன.

அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம், மரண தண்டனை சட்டம் குறித்து விவாதித்துவருவதையொட்டி, அந்நீதிமன்றத்திடம் இவ்வாறு சமயக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 

அரசியலமைப்புக்கு எதிரான மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்த உதவாத மரண தண்டனை சட்டம் நீக்கப்பட வேண்டும் என தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு, அரசியலமைப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக தென் கொரியாவில் நடைமுறையில் இருந்து வருகின்ற மரணதண்டனையை நீக்கக்கோரி 1996 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வழக்குகள் பலனளிக்காத நிலையில், Gwangju கத்தோலிக்க உயர்மறைமாவட்டம், தேசிய கிறிஸ்தவ சபைகள் அமைப்பு, புத்தமதக் குழுக்கள் Chondoist கிறிஸ்தவ சபை, கொரிய தேசிய சமயங்களின் அவை ஆகியவை இணைந்து நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருக்கின்றன.

தனிமதிப்பு மிக்க மனித உயிர், தீர்ப்புகள் மூலம் பறிக்கப்படுவது நியாயமற்றது, இது அடிப்படை மனித வாழ்வின் உரிமை மீறல் என்றும், கடந்த 12 ஆண்டுகளில் நாம் வாழுகின்ற சமுதாயம் மாறியுள்ளதால் இவ்வாண்டு இந்த வழக்குக்கான சரியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் தென்கொரியா ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

தவறுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, முரண்பாடுகளை அகற்றுவதன் வழியாக தவறுகள் நடக்காதவாறு தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்த அக்குழு, தென்கொரிய நாட்டோடு மொத்தம் 84 நாடுகளில் மரணதண்டனை நடைமுறையில் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2022, 15:28