பிரதமர் அபே, திருஅவை மீது நன்மதிப்புக்கொண்டிருந்தவர்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை மீது, குறிப்பாக திருப்பீடத்தின் மீது மிகுந்த மதிப்புக்கொண்டிருந்தவர் என்று, அவரது இறப்பைமுன்னிட்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள, டோக்கியோ பேராயர் Tarcisio Isao Kikuchi அவர்கள் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் அபே அவர்களின் படுகொலை குறித்து Crux செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள, பேராயர் Kikuchi அவர்கள், அந்நாட்டில் இடம்பெறும் அரசியல் வன்முறை குறித்த தன் கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி குறித்த விவகாரத்தில் உலகளாவிய சமுதாயத்தில் ஏற்படுத்திவரும் நல்தாக்கத்தை, பிரதமர் அபே அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாலேயே, அவர், திருத்தந்தை ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி அழைத்தார் என்று, பேராயர் Kikuchi அவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அபே அவர்கள், திருப்பீடத்திற்கு ஜப்பானின் தூதராக, கத்தோலிக்கர் ஒருவரை முதன்முறையாக நியமித்தார் எனவும், அவரே, 2014ம் ஆண்டில் வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்தித்து, அவர் ஜப்பானுக்கு வரவேண்டுமென்று அழைப்புவிடுத்தார் எனவும், இதே நோக்கத்திற்காக அவர் தன் பிரதிநிதிகளையும் வத்திக்கானுக்கு அனுப்பிவைத்தார் எனவும், டோக்கியோ பேராயர் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஜப்பானில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, அணு ஆயுத ஒழிப்பு, ஏழ்மை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு, திருத்தந்தையும், அபே அவர்களும் இசைவு தெரிவித்தனர் எனவும் பேராயர் Kikuchi குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் அபே அவர்கள், 2006ஆம் ஆண்டு முதல், 2007ஆம் ஆண்டு வரையிலும், 2012ஆம் ஆண்டு முதல், 2020ஆம் ஆண்டு வரையிலும் ஜப்பானின் பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.
ஷிண்டோ மற்றும், புத்த மதத்தவரை அதிகமாகக்கொண்டிருக்கும் ஜப்பானில் கத்தோலிக்கர் 0.5 விழுக்காடேயாகும். (CRUX)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்