வழிசொல்லும் ஒளிச்சுடர்... முன்னுரை
மேரி தெரேசா: வத்திக்கான்
இவ்வுலகில் பிறவி எடுத்த எல்லாருமே பிறவிப் பலனை வரலாற்று ஏட்டில் பதித்துவிட்டுச் செல்வதில்லை. அவ்வாறு வாழ்ந்த எல்லாரையும் வரலாறும் நினைவுகூர்வதில்லை. அரிய சாதனைகளால் வரலாற்றில் தடம் பதித்தவர்கள், சீர்மிகு சிந்தனைக்கு வித்திட்டவர்கள், மனிதர்களாக, மனிதநலம் காக்க வாழ்வை அர்ப்பணித்தவர்கள்... இத்தகைய மாமனிதர்களின் பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் மட்டும் மறைவதே இல்லை. இவர்கள் காலங்கள் தோறும் தலைமுறை தலைமுறைகளாக மனித மனங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கலிலியோ கலிலி ஜோகான்னஸ் கெப்லர் போன்ற உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களையோ, கறுப்பினத்தவரின் அடிமை விலங்கறுத்த ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூத்தர் கிங், நெல்சன் மன்டேலா போன்ற உரிமை ஆர்வலர்களையோ, வன்முறையற்ற வழியில் அந்நியர் ஆதிக்கத்தினின்று நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த காந்திஜி போன்ற நாடுகளின் தந்தையரையோ, ஏழையின் சிரிப்பில் இறைவனைக்கண்ட அன்னை தெரேசா போன்ற கருணை உள்ளங்களையோ... இப்படி பலரை வரலாறு மறப்பதில்லை. அதேநேரம் மறைக்கப்பட்ட, மற்றும், மறக்கப்பட்ட மாமனிதர்களும் வரலாற்றில் இல்லாமல் இல்லை. இவர்கள் எல்லார் பற்றியும் பட்டியலிடுவதற்கு நேரத்திற்கும் இடத்திற்கும் பற்றாக்குறைதான் ஏற்படும்.
திருஅவையில் புனிதர்கள்
கத்தோலிக்கத் திருஅவையின் தொடக்க கால வரலாறு முதல், இன்றுவரை மாமனிதர்கள் இருந்து வருகின்றனர். இவர்களில் பலரை திருஅவை, புனிதர்கள், அருளாளர்கள் அல்லது முத்திப்பேறு பெற்றவர்கள், இறைஊழியர்கள் என்று அழைக்கின்றது. இவர்களை, இயேசு கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டு வாழ்பவர்கள் (எபேசி.1:1) என தூய பவுல் பதிவுசெய்துள்ளார். திருஅவையின் தொடக்க காலத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவரும் புனிதர்கள் என்றே அழைக்கப்பட்டனர். பின்னர் அனைத்துக் கிறிஸ்தவர்களும் புனிதர்கள் என்று அழைக்கப்படுவது மாறி, இவ்வுலக வாழ்வில் கிறிஸ்துவின் நற்செய்தியை வாழ்ந்து காட்டுவதில் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு வீரமரணம் எய்தியவர்கள், நற்செயல்களால் மக்கள் மனதில் ஆழத்தடம் பதித்தவர்கள் போன்றோர் புனிதர்கள் என அழைக்கப்படலாயினர். சுருங்கச்சொல்லின் இவர்கள், கிறிஸ்துவ நம்பிக்கையில் இறுதிவரை நிலைத்திருந்து, தங்களின் தலைசிறந்த புண்ணியப் பண்புகளால் அசாதாரண தூய வாழ்வு வாழ்ந்தவர்கள். Saint அதாவது புனிதர் என்ற சொல், sanctus என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அதாவது "தூயவர்" என்பது அதன் அர்த்தம்.
தொடக்க கால கிறிஸ்தவம்
உலகில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலக்கட்டத்தில் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த கிறிஸ்தவர்கள் பலர், கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டனர், உயிரோடு எரிக்கப்பட்டும், அம்புகளால் குத்தப்பட்டும், கண்கள் தோண்டப்பட்டும், உயிரோடு தோலுரிக்கப்பட்டும்... இவ்வாறு அவர்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாகி கொல்லப்பட்டனர், திருமறைக்காக உயிரைத் தியாகம் செய்த இவர்கள் அனைவருமே புனிதர்கள் எனப் போற்றப்பட்டனர். இம்மாதிரியான கொடூரங்கள், உரோமைப் பேரரசில், கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை இடம்பெற்றன. தியோக்கிளேசியன், மாக்சிமியன், கலேரியுஸ் போன்ற உரோமைப் பேரரசர்களின் ஆட்சி காலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அக்காலக் கட்டத்தில் உரோம் நகரின் மண்ணில் இம்மறைசாட்சிகளின் இரத்தம் ஆறாய் ஓடின. இம்மறைசாட்சிகளால் உரோம் மண்ணும் மனிதரும் புனிதம் அடைந்துள்ளனர். இயேசுவின் திருத்தூதரும், முதல் திருத்தந்தையுமான பேதுரு, புறவினத்தாரின் திருத்தூதரான புனித பவுல் ஆகியோர் கொலைசெய்யப்பட்டதும் உரோம் நிலத்தில்தான்.
நவீன காலத்தில் அடக்குமுறைகள்
அக்காலத்தில் மட்டுமல்ல, உலக வரலாறு முழுவதும், இந்நவீன காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறாமல் இல்லை, நாடுகளில் எத்தனையோ பொதுநிலை கிறிஸ்தவர்களும், அருள்பணியாளர்களும் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர், அருள்பணியாளர்கள் ஆலயப் பீடத்திலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இத்தகைய செய்திகளை அடிக்கடி கேட்க முடிகிறது. நீதிக்காக, ஏழை மக்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட துணிவுடன் குரல் கொடுத்துவந்த இயேசு சபை அருள்பணி ஸ்டேன் சுவாமி போன்றோர் இத்தொழில்நுட்ப காலத்திலும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில் அரசின் அநீத நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொதுவில் பேசியதற்காக, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டு ஆயர் அல்வாரெஸ், அருள்பணி Óscar Danilo Benavídez Tinoco ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்திப் போதனைகளுக்குப் பிரமாணிக்கமாக இருந்து வாழ்ந்து இறைபதம் அடைந்த கிறிஸ்தவர்கள் எல்லாரையுமே திருஅவை புனிதர்கள் பட்டியலில் இணைத்து இவர்களுக்கென்று திருவிழா சிறப்பிப்பதில்லை. இதற்கென வரைமுறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. உரோம் நகருக்கு வெளியே திருத்தந்தை ஒருவரால் புனிதராக அறிவிக்கப்பட்ட முதல் கிறிஸ்தவர் புனித Udalric. Augsburg (893–973)ன் ஆயராகப் பணியாற்றிய இவரை கி.பி 993ஆம் ஆண்டில் திருத்தந்தை 15ம் யோவான் அவர்கள் புனிதராக அறிவித்தார். புனித Udalric, Augsburg நகரம், முற்றுகையிடப்பட்டிருந்தபோது அந்நகர மக்களை தம் புண்ணிய வாழ்வால் ஈர்த்தவர். ஆயர் Udalric அவர்கள், புனிதராக அறிவிக்கப்பட்டபின்னர், நூற்றாண்டுகளாக புனிதர்கள் என அறிவிப்பதற்குரிய பல்வேறு வரைமுறைகள் வகுக்கப்பட்டன. 1643ஆம் ஆண்டில், திருத்தந்தை எட்டாம் உர்பான் அவர்கள், ஒருவரை புனிதர் அல்லது அருளாளர் என அறிவிப்பதற்கு திருப்பீடத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது என்று Caelestis Hierusalem cives என்ற திருத்தூது அறிவுரை மடல் வழியாக அறிவித்தார். அவ்வாறு அறிவிக்கப்படுபவரின் வாழ்வுமுறை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள சிறப்பு அலுவலகமும் உருவாக்கப்பட அவர் பணித்தார்.
புனிதர்பட்ட திருப்பணிகள்
1983ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் வெளியிட்ட Divinus Perfectionis என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தில் தரப்பட்டுள்ள வழிமுறைகளே, தற்போது திருஅவையில் ஒருவர் அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு பின்பற்றப்படுகின்றன. கத்தோலிக்கத் திருஅவையில் புனிதர்நிலைக்குப் பரிந்துரைக்கப்படும் ஒருவர், முதலில் இறை ஊழியர் (இலத்தீனில் Servus Dei) என அழைக்கப்படுவார். அவ்வாறு அழைக்கப்படுபவர் இறந்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆனபின், அவர் வாழ்ந்த மறைமாவட்ட ஆயர் அதற்குரிய படிநிலைகளை முன்னெடுப்பார். மறைமாவட்ட ஆயர், அதற்கென தனித்தனிக் குழுக்களை உருவாக்கி, அந்நபரின் விரிவான வாழ்க்கை வரலாறு, அவர் வாழ்வை நேரடியாகப் பார்த்தவர்களின் சாட்சியங்கள், அவரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள், அவர் எழுதிய நூல்கள், கடிதங்கள், மறையுரைகள், உரைகள் போன்றவற்றைச் சேகரித்து வத்திக்கானிலுள்ள புனிதர்பட்ட படிநிலைகளை ஆய்வுசெய்யும் பேராயத்திற்கு அனுப்பி வைப்பார். அப்பேராயத்தின் தலைவர் அவற்றை நன்கு ஆய்வுசெய்த பின்னர், அவரது வீரத்துவப் புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்து, அவர் இறை ஊழியர் என அறிவிக்கப்பட முறைப்படி அனுமதி கேட்பார். திருத்தந்தை ஒப்புதல் அளித்தபின்னரே, அப்பேராயம் அம்மறைமாவட்டத்திற்கு அதனை அனுப்பி வைக்கும். மறைமாவட்ட ஆயரும் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி, அவரை இறைஊழியர் என இறைமக்களுக்கு அறிவிப்பார்.
இறைஊழியர் நிலைக்கு அடுத்த படிநிலையான அருளாளர் அல்லது முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்குரிய ஆய்வுகள் மறைமாவட்ட அளவில் தொடங்கும். ஒருவர் முத்திப்பேறு பெற்றவர் என அறிவிக்கப்படுவதற்கு அவரின் பரிந்துரையால் ஒரு புதுமை நடந்திருக்கவேண்டும். அவர் மறைசாட்சிய வாழ்வை எதிர்கொண்டிருந்தால் அவர் அருளாளர் என அறிவிக்கப்படுவதற்கு புதுமை தேவையில்லை. ஆனால் அவரது கிறிஸ்தவ வாழ்வுமுறை தெளிவாக ஆராயப்படும். அருளாளர் என்ற இரண்டாவது படிநிலை முழுவதும் முடிவுற்று, அவர் அருளாளர் என அறிவிக்கப்பட்ட பிறகு புனிதர் என அறிவிக்கப்படுவதற்கு ஆய்வுகள் தொடங்கும். அதற்கும் அவரின் பரிந்துரையால் நடைபெற்ற ஒரு புதுமை தேவை. திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் தலைமைப்பணியை ஆற்றிய காலத்தில், அருளாளர் மற்றும், புனிதர் பட்ட நிகழ்வுகளை அவரே தலைமையேற்று நிறைவேற்றினார். அத்திருத்தந்தைக்குப்பின் தலைமைப் பொறுப்பேற்ற முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அருளாளர் நிலைக்கு உயர்த்தும் திருவழிபாட்டை அந்தந்த இடங்களில் நிறைவேற்றப் பணித்தார். பொதுவாக, புனிதர்பட்ட படிநிலைகளுக்குப் பொறுப்பான பேராயத்தின் தலைவர், அந்தந்த இடங்களுக்குச் சென்று அத்திருவழிபாட்டை நிறைவேற்றி வருகிறார். ஆனால், புனிதர் பட்ட அறிவிப்பு திருவழிபாட்டை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களே தலைமையேற்று நிறைவேற்றினார். தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இத்திருத்தந்தையின் வழிமுறைகளையே பின்பற்றுகிறார்.
எந்த ஒரு விதிமுறையிலுமே விதிவிலக்கு உண்டல்லவா. ஒருவர் இறந்தபின் ஐந்து ஆண்டுகள் சென்றபின்னர்தான் அவரை புனிதர்நிலைக்கு உயர்த்துவது தொடர்பான திருப்பணிகளை ஆரம்பிக்கலாம் என்ற பொதுவான விதிமுறை உள்ளது. ஆயினும் ஒருவரின் மிகச்சிறந்த புண்ணிய வாழ்வு காரணமாக, பலரின் பரிந்துரையின்பேரில் திருத்தந்தை ஒப்புதல் அளித்தால், ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பான பணிகளைத் தொடங்கலாம். கொல்கத்தா புனித அன்னை தெரேசா, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் ஆகிய இருவரும் இந்நவீன காலத்தில் இந்தப் பொதுவான விதிமுறையிலிருந்து விலக்குப் பெற்றவர்கள். திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் இறந்த சமயத்தில், Subito Santo அதாவது உடனடியாக புனிதர் என்ற குரல்கள் வத்திக்கானைச் சுற்றிலும் ஒலித்துக்கொண்டே இருந்ததை நாம் கேட்டிருக்கிறோம். அவ்வாறு எழுதப்பட்ட விளம்பரத் தட்டிகளைப் பார்த்திருக்கிறோம்.
மேலும், ஒருவர் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு அவரின் பரிந்துரையால் ஒரு புதுமையாவது நடந்திருக்கவேண்டும். இதற்கும் திருத்தந்தை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிவிலக்கு கொடுக்கலாம். அதன்படி திருத்தந்தை புனித 23ம் யோவான், இயேசு சபை புனித பீட்டர் ஃபேபர் போன்றோருக்கு விதிவிலக்கு கொடுத்து அவர்களை அதிகாரப்பூர்வமாக புனிதர்கள் என அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மனியின் Bingen நகர் புனித Hildegard (1098 – 17 செப்.1179) அவர்கள், பெனடிக்ட் சபைத் துறவியாவார். இவர் அச்சபையின் அதிபராகவும் பணியாற்றினார். மத்திய காலத்தில் வாழ்ந்த இவர், ஓர் எழுத்தாளர், கவிஞர், மெய்யியலாளர், ஆழ்நிலை தியான யோகி, காட்சி காண்பவர், மருத்துவ எழுத்தாளர். இவ்வாறு பன்முகத்திறமைகளைக் கொண்டிருந்தவர். இவர் புனிதர் என அதிகாரப்பூர்வமாகத் திருஅவையால் அறிவிக்கப்படாமலேயே மக்கள் இவரைப் புனிதராகப் போற்றி வந்தனர். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது சிறப்பு அதிகாரத்தைப் ப.யன்படுத்தி, 2012ஆம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி இவரது பெயர் புனிதர் பட்டியலில் இடம்பெறவேண்டும் என அறிவித்ததோடு, அவரது தூய வாழ்வு மற்றும், போதனைகளை அங்கீகரிக்கும்வண்ணம் அதே ஆண்டு அக்டோபர் 7ம் தேதி அவரை திருஅவையின் வல்லுனர் எனவும் அறிவித்தார்.
புனிதர்களின் திருநாள்
மேலும், கத்தோலிக்கத் திருஅவையில் புனிதர்களாக அறிவிக்கப்படுவோரின் திருநாள் பொதுவாக அவர்கள் இம்மண்ணுலகைவிட்டு மறைந்த நாளே குறிக்கப்படுகிறது. ஆயினும், அவர்களின் இறப்பு நாளில் வேறு பிரபலமான புனிதர்களின் திருநாள் சிறப்பிக்கப்பட்டால் அவர்களுக்கு விழா எடுக்கும் நாள் வேறு ஒரு நாளில் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், 1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி இறைபதம் அடைந்தார். ஆனால் அத்திருத்தந்தையின் திருநாள், அக்டோபர் 11ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. 1962ஆம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்றுதான், இத்திருத்தந்தை வரலாற்று சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் அமர்வைத் தொடங்கினார். அதேபோல் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறைபதம் அடைந்தார். ஆனால் அவரது திருநாள் அக்டோபர் 22ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. 1978ஆம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதியன்று அத்திருத்தந்தை, திருஅவையின் தலைமைப்பணிக்கென திருநிலைப்படுத்தப்பட்டார்.
புனிதர்கள், அண்மைக்காலத் திருத்தந்தையர்
அண்மைக் காலத் திருத்தந்தையருள், 1958ஆம் ஆண்டு முதல், 1963ஆம் ஆண்டு வரை திருஅவையின் தலைமைப்பணியை ஐந்து ஆண்டுகள் ஆற்றிய திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் 5 பேரை அருளாளர்களாகவும், பத்துப் பேரை புனிதர்களாகவும் அறிவித்துள்ளார். 1963ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டுவரை திருஅவையில் தலைமைப்பணியாற்றிய திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், தன் பணிக்காலத்தில் 85 பேரை புனிதர்களாக அறிவித்துள்ளார். இவர்களில் 66 பேர் மறைசாட்சிகள். 1978ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை 26 ஆண்டுகளுக்கு மேலாக, திருஅவையின் தலைமைப்பணியை ஆற்றிய திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மாக்ஸ்மிலியன் கோல்பே, பாத்ரே பியோ போன்றோர் உட்பட 482 பேரை புனிதர்களாக அறிவித்துள்ளார். இவர்களில் 200க்கும் மேற்பட்டோர் மறைசாட்சிகள். 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் திருஅவையின் தலைமைப்பணியை ஆற்றிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 45 பேரை புனிதர்களாக அறிவித்துள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது தலைமைப் பணியில் இதுவரை, 813 மறைசாட்சிகள் உட்பட 919 பேரை புனிதர்களாக அறிவித்துள்ளார். இவர்களில் 7 பேர், திருத்தந்தையின் சிறப்பு அதிகாரத்தால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டவர்கள். 2013ஆம் ஆண்டு மே 12ம் தேதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்தோனியோ பிரிமால்தோவுடன் சேர்ந்த 812 தோழர்களையும், இன்னும் நால்வரையும் புனிதர்களாக அறிவித்துள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையில், சிலர் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு ஆண்டுகள் ஆகின்றன, ஏன் சில நேரங்களில் நூற்றாண்டுகள்கூட ஆகின்றன. கி.பி. 735ஆம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த இறையியலாளரான புனித Bede, அவர் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு 1,164 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. ஆனால் அன்னை தெரேசா இறந்து 19 ஆண்டுகள் சென்றும், திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் இறந்து ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சென்றும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்கத் திருஅவையில் புனிதர் என்ற நிலை, மகிமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. திருஅவையில் புனிதர்கள் ஆவதற்கு, யாருக்கும் உயர்படிப்போ, பதவியோ, பட்டமோ, பாலினமோ, செல்வமோ, செல்வாக்கோ எதுவுமே தேவையில்லை. மேலும், புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே, பிறப்பிலேயே புனிதர்களாகப் பிறக்கவில்லை. அரசர்கள், பேரரசர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள், செல்வந்தர் திருத்தந்தையர், ஆயர்கள், பேராயர்கள், துறவியர், இளையோர், சிறார், பாவநிலையிலிருந்து திருந்தியவர்கள், பிற மதத்திலிருந்து கத்தோலிக்க நம்பிக்கையை தழுவியவர்கள் என அனைத்து நிலைகளிலும் புனிதர்கள் உள்ளனர். வீழ்வது பலவீனம், வீழ்ந்து கிடப்பது மதியீனம் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள். எனவே நாமும் புனித வாழ்வு வாழ்வோம், புனிதர்களாக மாறுவோம்.
புனித அன்னை தெரேசா சொல்கிறார் - சில மனிதர்கள் வாழ்க்கையில் வரமாக வருவார்கள். சில மனிதர்கள் பாடமாக நம் வாழ்க்கையில் வருவார்கள். உன் உதவியால் உலகை குணமாக்குகின்றாய். சிந்திப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்