தாக்குதல்களில் இருந்து தென் சூடான் மக்களைக் காப்பாற்றுங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உகாண்டாவில் தென்சூடான் புலம்பெயர்ந்தோர் வாழும் முகாம்களுக்குச் சென்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும், சட்டவிரோத தாக்குதல்களில் இருந்து தென் சூடான் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் ஆணைக் குழுவை வலியுறுத்தியுள்ளார் தென்சூடானின் ஏய் (Yei) மறைமாவட்ட ஆயர் Alex Lodiong.
உகாண்டாவிற்கு புலம்பெயர்ந்துள்ள தென் சூடான் மக்கள் மேல் நடத்தப்படும் சட்டவிரோத தாக்குதல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க, உகாண்டா அதிகாரிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பினருக்கு அழைப்புவிடுத்த ஆயர் அலெக்ஸ் அவர்கள், தென் சூடானின் சில அரசியல்வாதிகள், முகாம்களுக்குச் சென்று மக்களிடையே முரண்பாடுகளை விதைக்கவும், தங்களுக்கான போராளிகளை உருவாக்கவும் முயற்சிப்பது குறித்து கண்டனம் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்தோர் நலனில் அக்கறை கொண்டுள்ள உகாண்டா பிரதமர் அலுவலகம், மற்றும் UNCHR என்னும் ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் கவனத்திற்கு இது குறித்து தான் தெரியப்படுத்த விரும்புவதாகவும், முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை ஆயுதத்துடன் நுழைந்து குழப்பத்திற்கு ஆளாக்குகின்றவர்களைக் கைதுசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் ஆயர் அலெக்ஸ்.
சில எதிர்ப்பாளர்கள் கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த ஆயர் அலெக்ஸ் அவர்கள், தங்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்களுக்கு இவ்விதமான ஆபத்து ஏற்படாது என்று நம்புவதாகவும், உகாண்டாவில் தஞ்சமடைந்திருக்கும் தென் சூடான் நாட்டின் எதிர்கட்சித் தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டாம் எனவும் உகாண்டா அரசைக் கேட்டுக்கொண்டார்.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உகாண்டாவின் மோயோ மாவட்டத்திலுள்ள Aruaவில் உருவாக்கப்பட்ட Palorinya புலம்பெயர்ந்தோர் முகாமை, மேய்ப்புப்பணி தொடர்பாக நேரில் சென்று சந்தித்த ஆயர் அலெக்ஸ் அவர்கள் இவ்வாறு விண்ணப்பித்தார்.
37 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த முகாமில் தற்போது ஏறக்குறைய 1,66,000 தென் சூடான் புலம்பெயர்ந்தோர் இருப்பதால், புதிதாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்