பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் Abjad Gulzar. பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் Abjad Gulzar. 

வெள்ளப்பேரிடர் நிவாரணப் பணிகளில் முன்னிலை வகிக்கும் காரித்தாஸ்

பாகிஸ்தானில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு உதவிவரும் காரித்தாஸ் அமைப்பு, 10,000 குடும்பங்களுக்கு உதவ தயாரித்து வருகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பாகிஸ்தானில் சாலைகள், கட்டடங்கள், பாலங்கள் போன்றவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவான இவ்வெள்ளப்பெருக்கை, வரலாற்றின் மனிதகுலப் பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார் அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் Abjad Gulzar.

பாகிஸ்தானில், ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புக்கள், 1,500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளது, பத்து இலட்சம் வீடுகள் சேதம், பல்லாயிரக்கணக்கான மக்களின் இடம்பெயர்வு போன்றவற்றை ஏற்படுத்திய இப்பெருவெள்ளம், தற்போதுவரை 116 மாவட்டங்களில் அழிவை ஏற்படுத்தி, மக்களின் முக்கிய வாழ்வாதாரத்தைப் பாதித்துவிட்டது என்றும், ஒரு சில கிராமங்களில் 20 கிலோ மீட்டருக்கும் அதிகமான இடங்கள் நீருக்குள் மூழ்கியுள்ளன என்றும் கூறியுள்ளார் Gulzar.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூவாயிரம் குடும்பங்களுக்கு ஏற்கனவே காரித்தாஸ் அமைப்பு உதவிவரும் நிலையில், அந்த எண்ணிக்கை விரைவில் பத்தாயிரத்தைத் தொடும் என்று நம்புவதாக தெரிவித்த இயக்குனர் Gulzar, மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை போன்றவற்றை வழங்குவதுடன், நீரினால் ஏற்படும் நோய்களிலிருந்து மக்களைக் காக்க உடனடி அடிப்படை மருத்துவ உதவிகள் தேவை என்றும், பாகிஸ்தான் அரசிற்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். 

கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களைவிட இவ்வாண்டின் பாதிப்புகள் அதிகம் எனினும், இம்முறை தகுந்த தயாரிப்புக்களோடு வெள்ள நிவாரணப் பணிக்குழு செயல்படுவதாகவும், கடினமான சூழலிலும் நாட்டின் பேரிடர் மீட்புத்துறையினர், மற்றும் மனிதாபிமானக் குழு, பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைய தங்களாலான முயற்சிகளை செய்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் Gulzar.

ஏராளமான பயிர்கள் சேதமாக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படக் காரணமான இவ்வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து  நாடு பழைய நிலைக்குத் திரும்ப ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும், எதிர்காலம் கடுமையான உணவுப் பற்றாக்குறையையும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தையும் கொண்டதாக இருக்கும் என்றும், அந்நாட்டு வளர்ச்சித்திட்ட அமைச்சர் Ahsan Lqbal அவர்கள் கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2022, 14:18