போர்ச் சூழலில் எஸ்டோனிய மறைசாட்சியின் அமைதிச் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஐரோப்பாவின் மத்திய பகுதியில் இரஷ்யா நடத்திவரும் கொடூரத் தாக்குதல்கள் மனச்சோர்வை அதிகமாக ஏற்படுத்திவரும் இவ்வேளையில், மனஉறுதியுடன் இருப்பதற்கு கடவுள் நம்பிக்கையை நாம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை, எஸ்டோனிய மறைசாட்சி ஒருவர் கற்றுத்தருகிறார் என்று, எஸ்டோனியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கூறப்பட்டுள்ளது.
எஸ்டோனியா, முன்னாள் சோவியத் யூனியனிடமிருந்து விடுதலை பெற்றதன் 31ஆம் ஆண்டு நிறைவையொட்டி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம், மறைசாட்சி பேராயர் Eduard Profittlich அவர்களின் வாழ்வு குறித்த கண்காட்சி ஒன்றைத் திறந்துவைத்தபோது, அதில் கலந்துகொண்ட திருப்பீடத்திற்கான அந்நாட்டுத் தூதர் Celia Kuningas-Saagpakk அவர்கள், அம்மறைசாட்சியின் உறுதியான கிறிஸ்தவ நம்பிக்கை குறித்து எடுத்துரைத்தார்.
1942ஆம் ஆண்டில் சோவியத் இரஷ்யாவால் மறைசாட்சிய மரணத்தைத் தழுவிய இயேசு சபையைச் சார்ந்த பேராயர் Profittlich அவர்கள், உக்ரைனில் தற்போது இடம்பெற்றுவரும் போருக்கு மத்தியில், அமைதி மற்றும், நம்பிக்கைச் செய்தியை தொடர்ந்து நமக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார் எனவும் Celia அவர்கள் கூறியுள்ளார்.
இறை ஊழியர் பேராயர் Profittlich அவர்களின் வாழ்வு குறித்த கண்காட்சி ஒன்றைத் திறந்துவைத்த நிகழ்வையொட்டி வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த Celia அவர்கள், எஸ்டோனியாவை சோவியத் படைகள் ஆக்ரமித்திருந்தபோது, பேராயர் Profittlich அவர்கள், தன் வாழ்வுக்கு அச்சுறுத்தல் வந்ததற்கும் அஞ்சாமல், அமைதி குறித்து தொடர்ந்து போதித்துவந்தார் என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் போர் இடம்பெற்றுவரும் இக்காலக்கட்டத்தில் இப்பேராயரின் அமைதிச் செய்தி நம் அனைவருக்கும் அதிகம் தேவைப்படுகின்றது எனவும், Celia அவர்கள் கூறியுள்ளார்.
பேராயர் Eduard Profittlich
ஜெர்மனியில் பிறந்த இறை ஊழியரான இயேசு சபை பேராயர் Eduard Profittlich அவர்கள், 1600களில், எஸ்டோனியாவில் தங்கி மறைப்பணியாற்றிய முதல் கத்தோலிக்கத் தலைவராவார். இவர், பத்து ஆண்டுகளுக்கு மேலாக, எஸ்டோனியாவின் திருத்தூது நிர்வாகியாகப் பணியாற்றியவர். இவர், இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சைபீரியாவில் வதை முகாமில் வைக்கப்பட்டார். இவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி அம்முகாமில் இவர் உயிரிழந்தார். இவரை புனிதர்நிலைக்கு உயர்த்தும் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, எஸ்டோனியா, முன்னாள் சோவியத் யூனியனிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்